கழிவறை இருக்கை-பாலியல் கல்வியை வலியுறுத்தும் புத்தகம்!! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 8 Second

என் அப்பா என்னை பாலியல் சீண்டல் செய்தார் என ஒரு மகளால் அப்பட்டமாக தோலுரிக்க முடியுமா? அதைத்தான் லதா ஒளிவு மறைவற்று தைரியமாகச் செய்திருக்கிறார். ஒரு பெண் வெளிப்படையாய் இதை எழுத பெரும் துணிச்சல் தேவைதான். மூடி மறைக்கப்படும் வாழ்வியல் முரணை புத்தகமாக்கி, முகமூடியுடன் திரியவைக்கும் குடும்ப அமைப்புகளுக்குள் தன் எழுத்தின் வழியே வெளிச்சம் பாய்ச்சுகிறார் எழுத்தாளர் லதா. ஆங்கிலத்தில் The Toilet Seat என வெளியான தன் புத்தகத்தை, காமத்தின் மீதான முட்போர்வையை அகற்றும் விதமாக தமிழில் கழிவறை இருக்கையாக்கி தந்திருக்கிறார்.

தன் அம்மா இல்லாமல் அப்பாவுடனான நேரங்களை அவஸ்தையானதாகக் குறிப்பிடுபவர், வீடே தனக்கு பாதுகாப்பில்லை என்கிற தருணத்தை அயர்ச்சியோடு விவரிக்கிறார். வீட்டுக்குள்.. உறவினரிடத்தில்.. நட்பு வட்டத்தில்.. சமுதாயத்திற்குள்.. பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை நேரும்போது, அவர்கள் அதை வெளியே சொல்ல அஞ்சுகிறார்கள். இது மிகப் பெரிய குற்ற உணர்வை அவர்களுக்குள் உண்டு பண்ணுகிறது என்பவர், இந்தப் புத்தகத்தில் குழந்தைகளுக்கான பாலியல் கல்வியின் அவசியத்தையும் அலசுகிறார்.

90% குழந்தைகள் தனக்கு நடக்கும் பாலியல் சீண்டல்களை ஒவ்வாத செயல்களை எதிர்கொள்ளும்போது அதை ஏன் பெற்றோரிடத்தில் சொல்லத் தயங்குகின்றனர் என்கிற கேள்வியை முன் வைப்பவர், குழந்தைகள் சொல்வதை முதலில் காது கொடுத்துக் கேளுங்கள். உங்கள் குழந்தைகளோடு எப்போதும் நட்பு ரீதியான நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் அழும்போது காரணத்தைக் கேளுங்கள். உன்னைவிட எனக்கு யாரும் முக்கியமில்லை என்கிற உணர்வை, சொல்லாலும் செயலாலும் காட்டிக்கொண்டே இருங்கள் என்கிறார்.

55 வயதை கடந்து, அலுவலகம் ஒன்றில் பொறுப்பு மிக்க பணியில் உள்ள பெண்மணி அவர். ‘மீ டூ’ இயக்கம் பரபரப்பாகி சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக்காக மாறிய நேரம் அது. அது குறித்து விவாதித்தவர், திடீரென அழத் தொடங்கினார். அவரின் குழந்தைப் பிராயத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கையில், சொந்த அத்தையின் கணவரால் தினமும் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதை அழுதவாறே பகிர்ந்தார். அவரின் தொல்லைகள் எல்லை மீறவே, தன் அம்மாவிடம் தயங்கி தயங்கி சொல்ல முற்பட்டபோது, நாத்தனாரின் கணவர் என்பதால் குடும்பத்தில் பிரச்சனை பூதாகரமாகும் என இவரையே அடக்கி வைத்ததாகச் சொல்லி குமுறி அழுதார். இதில் எங்கே தவறு நேர்கிறது…?

இதைத்தான் 32 அத்தியாயங்களில் பேசியிருக்கிறார் லதா. இவை ஆண்களுக்கு எதிரான பெண்களுக்கு ஆதரவான கட்டுரைகள் அல்ல. நாம் மிகச் சாதாரணமாக நினைத்து கடக்கும் காமம் என்ற விசயம் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைப் பேசும் அத்தியாயங்கள். ஆண், பெண் சமூகத்திற்கான உளவியல் அலசல் என்றும் சொல்லலாம். முழுக்க முழுக்க பாலியல் குறித்து சரியான பார்வையில் பேசும் புத்தகம்.

பல காலமாக சமூகம் உருவாக்கி வைத்திருக்கிற கலாச்சார பண்பாட்டுக்கூறுகளை விசாரணைக்கு உட்படுத்தி, காதலும்..காமமும்.. இந்த சமுதாயத்தையும்… வாழ்க்கையையும் எப்படி ஆட்டிப் படைக்கிறது என்கிற பாலியல் சார்ந்த அத்தனை விசயங்களையும் ஒளிவு மறைவற்று பகிரங்கப்படுத்தி இருக்கிறார் எழுத்தாளர்.

ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவை உணவு.. உடை.. இருப்பிடம் என்கிற மூன்றும். ஆனால் இவர் நான்காவதாக காமத்தை உணவுக்கு முன் வைக்கிறார். காமத்தில் இருந்து வந்த அனைத்தும் புனிதமாகும்போது காமம் மட்டும் எப்படி இங்கு அசிங்கமானதாக மாறுகிறது என்ற கேள்வியையும் விசாரணைக்கு உட்படுத்துகிறார்.

காதல் உணர்வுகளும்.. வெளிப்பாடுகளும்.. ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கை. குழந்தை பிறப்பில் தொடங்கி திருமணம் வரை பாலியல் சார்ந்த விசயங்களை பிள்ளைகளிடம் நாம் வெளிப்படையாகப் பேசாமல் பொத்தி பொத்தி வைக்கிறோம். பாலியல் குறித்த அறிவு, தெளிவு, புரிதல் என்பது இல்லாமலே இருபாலரும் திருமணம் என்ற பந்தத்தில் இணைகிறார்கள். விளைவு, இயற்கை உபாதைகளைக் கழிக்கும் இடமாக கழிப்பிடம் இருப்பதுபோல், காம உணர்வுகளைப் போக்கும் இடமாக பெண்ணின் இருக்கை இருக்கிறது என்றவர், ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் காம வாழ்வென்பது, காதலை மையப்படுத்தாமல் ஆணின் வெளிப்பாடாகவும் பெண் அதை விரும்பி ஏற்றுக்கொள்வது போன்ற கழிவறை இருக்கையாக இருக்கிறது என்கிறார் விரக்தியோடு.

உடல் ரீதியான மாற்றங்கள், அவற்றால் தூண்டப்படும் உணர்வுகள், இதனை பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கு, பெற்றோரும் ஆசிரியர்களும் புரிய வைத்தல் மிகவும் அவசியம். காலம் வரும்போது அவர்களே கற்பார்கள் என்கிற பொறுப்பற்ற பதில்களால், நம் பிள்ளைகள் கலவியல் கல்வியை தவறான வழியில், தவறான முறையில் புரிந்து கொள்கிறார்கள். விளைவு, காமம் என்பது உடல் சார்ந்த உணர்வுதானே தவிர, மனதால்.. இதயத்தால்.. காதலால் ஏற்படுகிற சங்கதியே இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவும் தவறுகிறார்கள்.

பாலியல் இங்கே அவமானத்துக்கு உரிய ஒன்றாக தவறானதாக கட்டமைக்கப்படுவதால், சமூகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக வன்புணர்வும், பாலியல் தொந்தரவும், மனப் பிறழ்வும் ஏற்படுகிறது. மேலும் மற்றவர்களை ஆதிக்கம் செலுத்தவும், அடிமைப்படுத்தவும், அழித்துக்கொள்ளும் ஆயுதமாகவும் மாறுகிறது. காமத்தைப் பற்றிய சரியான புரிதல் இன்மையே இதற்கெல்லாம் காரணம்.

டீன் ஏஜில் இருக்கும் குழந்தைகள் உடல் ரீதியான மாற்றத்தில் ஒரு குழப்ப மனநிலையில் இருப்பார்கள். அந்த நேரத்தில் நாம் அவர்களை சரியாக வழி நடத்த வேண்டும். உடலின் மாற்றத்தை.. உடலியல் கல்வியை அறிவியலின் ஒரு பிரிவாகக் கற்றுக்கொடுக்கவும், விவரிக்கவும் வேண்டும். நீங்கள் குழந்தைகளிடம் உண்மையை சொல்கிற விதத்தில் அவர்கள் அதை அழகாகப் புரிந்து கொள்வார்கள். பாலியல் குறித்த அவர்களின் சிந்தனைக்கு, அவர்கள் கேள்விகளுக்கு ஏற்ற உண்மையை எப்போதும் பதிவு செய்யுங்கள். அவர்களிடத்தில் பொய்யாக எதையும் சொல்லாதீர்கள். பெற்றோர் போகிற போக்கில் இயல்பாய் பேசிக் கடந்தாலே போதும். நாம் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தால் மட்டுமே இங்கு மாற்றம் நிகழும்.

இந்தச் சமூகத்தில் தவறான பாதிப்புகள் ஏற்படாமல் அவர்கள் வாழ்வதற்கான திறமையையும், சூழ்நிலையையும் நம்மைவிட்டால் வேறு யார் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க இயலும். காட்சி ஊடகங்களும், எழுத்தாளர்களும் காதலை தேவையின்றி சித்தரிப்பதையும், திரித்துக் காட்டுவதையும், எழுதுவதையும் காதலென நம் வீட்டுக் குழந்தைகள் புரிந்துகொள்கிறார்கள். நம் குழந்தைகளிடம் நாம் இவற்றை வெளிப்படையாகப் பேசத் தவறினால், தொலைக்காட்சி, இணையம், கைபேசி, செயலியென பதின்வயதுக் குழந்தைகள் காதல் அல்லது காமக் காட்சியை பார்க்க நேரும்போது, மனதளவில் பாதிக்கப்படுவர்.

பேசத் தயங்கும் விசயமாக பாலியல் கல்வி இருப்பதுதான் இங்கு பிரச்சனையே. இதனாலே ஆண்-பெண் நட்பு பல சிக்கல்களை சந்திக்கிறது. வெளிப்படையான எண்ணப் பறிமாற்றல்கள் கொச்சைப்படுத்தப் படும்போதுதான், தவறான வழிகளில் தனக்கு வேண்டியதை அடையும் வழிமுறைகளை கண்டெடுக்கிறார்கள் குழந்தைகள்.

பாலியல் ரீதியான உணர்வுகள் இயற்கையானது என்பதை குழந்தைகளுக்கு புரிய வைத்து, அவர்களுக்குத் தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுத்தால், அவர்கள் உங்களிடம் எல்லாவற்றையும் பேச முன்வருவார்கள். தன்னுடன் படிக்கும் தோழி மீதோ தோழன் மீதோ நம் குழந்தைக்கு ஈர்ப்பு ஏற்பட்டால் அதை பெற்றோர் பயமுறுத்தாமல் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

பாலியல் குறித்த விசயங்கள் வெளிப்படையான உரையாடலாக இருக்க வேண்டும். பள்ளிப் பருவத்தை முடிக்கும் முன் அவர்களை சுயசார்பு சிந்தனை உள்ளவனாக வளர்க்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் மற்றவர்கள் முன் நம் குழந்தைகளை கூனிக் குறுகி செல்லும் நிலைக்கு ஆளாக்கக்கூடாது. இதில் பெற்றோர் மீதுள்ள நம்பிக்கை மட்டுமல்ல, எதிர்பாலினத்தவரின் மீதுள்ள நம்பிக்கையும் இல்லாமலே போகும்.

ஆண் மேல் பெண்ணுக்கும் பெண் மேல் ஆணுக்கும் ஈர்ப்பு வருவது இயற்கை. அன்பின் மிகுதிதானே காதல். கோயில்களில் வடிக்கப்பட்டிருக்கும் சிற்பங்களும் இதைத்தானே சொல்கிறது. அப்படியிருக்க பெற்றோர் ஏன் குழந்தைகளிடம் இதைப் பேசத் தயங்கவேண்டும். படித்து முடித்ததுமே அவர்களைத் திருமணத்திற்குள் தள்ளாமல் இந்த உலகத்தை உணர இடைவெளி கொடுக்க வேண்டும். வாழ்வியலை வீட்டில் இருந்துதான் குழந்தைகள் கற்றுக்கொள்ள முடியும். குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தையும் உண்டாக்குங்கள். பாலியல் கல்வி குறித்த சிறந்த புத்தகங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

காதல் என்பது மன ரீதியாக.. நட்பு ரீதியாக.. உணரக்கூடிய அற்புதமான விசயம் என்பதை நாம் குழந்தைகளுக்கு உணர்த்தத் தவறி, திருமணம்வரை ஆணையும் பெண்ணையும் பாலியல் குறித்த புரிதல் இல்லாமல் வளர்ப்பதால்தான், திருமணத்திற்குப் பின்னும் பிள்ளைப் பெறும் விசயமாக மட்டுமே திருமண பந்தம் பார்க்கப்படுகிறது. புரிதலற்று ஆணும் பெண்ணும் மண வாழ்வில் இணைவதும், வெறுப்பை உமிழ்ப்பதும், அதைப் பார்த்து வளரும் அவர்களின் குழந்தைகளும் தங்கள் இணையை மதிப்பின்றி நடத்துவதுமே இங்கே தொடர்கதை.

மகிழ்வைத் தராவிட்டாலும் மற்றவர்கள் எதை வாழ்வெனக் காட்டுகிறார்களோ அதை அப்படியே செய்கிறோம். அடுத்த தலைமுறைக்கும் அதையே கடத்துகிறோம். “நாம் வாழ்கிறோம் என்பது உண்மை… ஆனால் வாழ்கிறோமா?” என்கிற புதுமைப்பித்தன் வரிகளே நினைவில் வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தன்னை பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறி காட்டிய 2 மனிதர்கள்!! (வீடியோ)
Next post மின் எந்திரங்கள் கவனிக்க!! (மகளிர் பக்கம்)