நன்றி குங்குமம் தோழி !! (மகளிர் பக்கம்)

Read Time:18 Minute, 34 Second

திருமணமான பதினைந்து நாளிலேயே ஜெயந்தியை புகுந்த வீடு தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. வீட்டை சுத்தமாக பராமரிப்பது…சமைப்பது…மற்றவர்களிடம் பழகுவது என்று எல்லாவற்றிலும் சிக்சர் அடித்தாள் ஜெயந்தி.கணவன் சிவா… மாமியார் லட்சுமி அதை தங்கள் பூர்வ ஜென்ம புண்ணியமாக நினைத்து மகிழ்ந்தனர்.எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கையில் லட்சுமி கோவிலுக்கும், சிவா ேவலைக்கும் சென்றிருந்த நேரம்… வீட்டின் கதவு தட்டப்பட… ஜெயந்தி கதவை திறந்தாள்.எதிரில் தாடி மற்றும் சிவந்த கண்களுடன் அழுக்கேறிய பேண்ட் சட்டையில் தடுமாறியபடி ஒருத்தன் நிற்கவே, வித்தியாசமாக பார்த்தாள் ஜெயந்தி, “நீங்க யாரு…?” கேட்டாள்.

அவன் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை.. ‘அம்மா எங்ேக?’ கரகரத்த குரலில் கேட்டான்… ‘அவங்க இல்ல… நீங்க யாரு?’ மீண்டும் கேட்டாள் ஜெயந்தி. பதில் பேசாமல் திரும்பிச் சென்றான் அவன்.. ஜெயந்திக்கு புரியவில்லை… ஏன் வந்தான், ஏன் சென்றான்? கதவை சாத்திவிட்டு ஏதோ யோசனையில் உள்ளே வந்து அமர்ந்தாள். அடுத்த முப்பது நிமிடத்தில் லட்சுமி கோவிலிலிருந்து வந்தவுடன். சிறிது ஓய்வு எடுத்து பிறகு சாப்பிட்டாள்… அதன் பிறகு ஜெயந்தி கேட்டாள்.

‘அம்மா… கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி ஒருத்தர் வந்தாரு… உங்கள கேட்டாரு… பாக்க பாவமா இருந்திச்சு… நீங்க இல்லேன்னு சொன்னதும் போய்ட்டாரும்மா…’லட்சுமி ஏதும் பேசாமல், மருமகள் சொன்னதை மட்டும் கேட்டுக் கொண்டாள்.. ஆனால், முகம் மாறியது. இது எதிர் கொள்ளப்பட வேண்டிய பிரச்சனை என்று அவளுக்கு புரியும்.. அதே நேரம் ஜெயந்தியிடம், எத்தகைய எதிர்வினை கிடைக்கும் என்று புரியாது.

கண்களில் நீர் கோர்த்தது… சாப்பிட்டு முடித்து எழுந்து கை கழுவினாள். ஜெயந்தி தன் மாமியாரையே… மௌனம் கலையட்டும் என்று காத்திருந்தாள்.. ஒரு பெரு மூச்சு விட்டபடி… லட்சுமி சோபாவில் வந்து அமர்ந்தாள். ஜெயந்தியை பார்த்தாள்…‘வா இப்படி உட்கார்’…ஜெயந்தியும் அமர்ந்தாள்.‘கல்யாணம் பேசும்போது.. எனக்கு காளிதாசுன்னு மூத்த பையன் ஒருத்தன் இருக்கான்… அவன் எங்களோட இல்ல..அவனால் எங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லேன்னு சொன்னது ஞாபகம் இருக்காம்மா?’‘ஆமாம் அத்த… அதுக்கென்ன?’

‘அவன் தான் இவன்… தியாகுன்னு பேரு… இப்பவும் சொல்றேன்.. அவனால் நமக்கு எந்த தொந்தரவும் வராது.. அவன் பேர்ல கொஞ்சம் பணம் போட்டு வச்சிருந்தாரு என் வீட்டுக்காரு.. ஒரு இடமும் அவன் பேர்ல இருக்கு… எல்லாத்தையும் அவன் கிட்டேயே கொடுத்திடலாம்தான்…ஆனா, மொத்தமா குடிச்சி காலி பண்ணிட்டு செத்துடுவான்… அதான்… ஆறுமாசத்துக்கு ஒருவாட்டி வருவான் பணம் கொடுப்பேன்… போய் குடிச்சே அழிப்பான். அப்பறம் வருவான்… எங்களுக்கு பழகிடுச்சு… உங்கிட்ட இவ்வளவு தூரம் முன்னாடியே சொல்லலை என்ன மன்னிச்சிடும்மா!’உருகினாள் லட்சுமி.. ஜெயந்திக்கு அதிர்ச்சி…அது…தனது மூத்தாரின் கேவலமான நிலை கண்டு அல்ல… அவருடைய பரிதாப நிலை கண்டு! ‘எதுக்கும்மா மன்னிப்பு கேட்டுகிட்டு?

அவரு எங்கம்மா இருக்காரு?’
‘நாலு தெரு தள்ளி’…
‘எங்க கல்யாணத்துக்கு
சொன்னிங்களா?’
‘இல்ல…ஆனா, அவனுக்கு
தெரிஞ்சிருக்கும்..’
‘சாப்பாடு..’

‘வெளிலதான் பாத்துக்கறான்!’
ஜெயந்திக்கு வியப்பாக இருந்தது..
உண்மையில் லட்சுமியின் மகன்தானா இவர்? தாய்ப்பாசம் என்பது கிஞ்சித்தும் இல்லையே! ஜெயந்தி யோசிப்பது கண்டு லட்சுமியே பேசினாள்.
‘நீ நினைக்கிறது புரியுது ஜெயந்தி…

அவனுக்காக எவ்வளவோ போராடியாச்சு… ஒரு கட்டத்துக்கு மேல போனா தற்ெகாலை செஞ்சுக்க முயற்சி பண்றான்… ஏதோ உயிரோடவாவது இருக்கட்டுமேன்னு…நான் கண்டுக்கிறதில்லை… எனக்கு சிவா வாழ்க்கையும் முக்கியம்மா!’லட்சுமியின் பேச்சில் உண்மையிருந்தது.. அன்றிரவு, சிவாவும், “காலேஜ்ல ஒரு பொண்ண தீவிரமா லவ் பண்ணினான்… கடைசில அந்த பொண்ணு மனசு மாறி ஓடிட்டா…

உடனே இவன் ஏரியில குதிச்சிட்டான்.. சில பேர் பாத்ததாலே உடனே காப்பாத்திட்டோம்… அப்பறம் மேல படிக்கவும் இல்ல… மனசு பாதிக்கப்பட்டு ராத்திரியில கத்த ஆரம்பிச்சான். கவலையில குடிக்க ஆரம்பிச்சான். அப்பா இவனாலேயே செத்துப் போனாரு. எங்களால் அவன திருத்த முடியல. ஒரு மறுவாழ்வு எடத்துல கொண்டு விட்டோம். அங்க ஒருத்தர அடிச்சுட்டு… ஜெயிலுக்கு போய் வந்தான். இப்ப ஏதோ கடமைக்கு உயிரோடு இருக்கான்.” வேதனையுடன் சொன்னான்.

ஜெயந்திக்கு புரிந்தது… குடும்பத்தால், வேறு வழியின்றி கைவிடப்பட்டவன், அவனுக்காக யாரும் மிகமிக தீவிரமாக மீட்பு பணியில் இறங்கவில்லை. ‘எத்தனை வருசமா இந்த குடிப்பழக்கமுங்க?’ கேட்டாள்..‘பத்து வருஷத்துக்கு மேல இருக்கும்! சிவா சொன்னான்.

‘கூடவே… நீ இதுல எதுவும் அலட்டிக்காத ஜெயந்தி’.. சொன்னான்.சிரித்தாள் ஜெயந்தி… ‘இப்ப அவரும் எனக்கு உறவுதாங்க.. அத மாத்த முடியாதே!’ ஏதோ ஒரு யோசனையில் தூங்கிப் போனாள் ஜெயந்தி.

சில நாட்கள் கழித்து.. ஒரு நாள் காலை.. தியாகு தன் வீட்டுக்கதவை தட்டும் ஓசை கேட்டு வெளியே வந்தான்.. ஒரு சின்ன அதிர்ச்சி…வியப்பு…வாசல் பெருக்கி… கோலமிட்டிருந்தது.. படிக்கட்டில் ஒரு ஃப்ளாஸ்க், இரவு குடித்த பிராந்தியின் போதை தலைவலியாக மாறியிருந்தது.. ஃபிளாஸ்கை திறந்து பார்த்தான்..டீ…யாராக இருக்கும்?‘என்ன மாமா சௌக்கியமா?’ பக்கவாட்டு சுவரிலிருந்து ஜெயந்தி வெளிப்பட்டு கேட்டாள்.. கொஞ்சம் சுதாரித்து…

அவளைப் பார்த்தான் தியாகு… ‘நீ?’
‘உங்க தம்பி சம்சாரம் அன்னிக்கு
பாத்தீங்களே?’
உடனே தியாகு கோபத்தில் படபடத்தான்.. ‘ஏன் இங்க வந்து… எனக்கு பிடிக்காது.. அம்மாவும் தம்பியும் கோபப்படுவார்கள்… போ… இந்தா டீ…யையும் எடுத்திட்டு போ!’‘மாமா… ஏன் பதறீங்க? மத்தவங்கள நான் பாத்துக்கறேன்… மொதல்ல டீய குடிங்க… இல்ல நான் போகமாட்டேன்’… தரையிலேயே உட்கார்ந்தாள் ஜெயந்தி…தியாகு அவளை கோபமாக பார்த்தான்..

‘இங்க பாரு… உனக்காக குடிக்கறேன்.. இனிமே இங்க வராத… வந்தா வீட்ட மாத்திதிட்டு போய்டுவேன்…’ என்றவன் கடகடவென்று டீயை குடித்து… உள்ளே சென்று கதவை அறைந்து மூடினான்.சரி… விட்டுப்பிடிப்போம் என்று ஜெயந்தி வீட்டிற்கு திரும்பினாள்.. மறுநாளும் அது தொடர்ந்தது.. ஆனால், தியாகு டீயை தெருவில் ஊற்றினான்… ஜெயந்தி வருத்தப்படவில்லை… மறுநாளும் டீயுடன் வந்தாள்.. அதை ஊற்றிப் போனான்.. தடுத்தாள்… ‘இங்க பாருங்க… கீழ ஊத்தினிங்க நான் இந்த எடத்த விட்டு போகவே மாட்டேன்… பாக்கலாமா? நானா நீங்களான்னு?’.. என்று சொல்லி தரையிலேயே அமர்ந்தாள்.. தியாகு அவளை நிதானமாக பார்த்தான்… அவன் கைகள் நடுங்கின…

‘போங்க… சரக்க குடிங்க அப்பதான் ஸ்டடியா இருப்பீங்க!’ ஜெயந்தி சொல்ல தியாகு அவளிடம் பேசலானான்!‘இங்க பாரு… நான் சாகப்போறவன்… எனக்கு எந்த உறவும் வேண்டாம்.. நீ என்னை திருத்தப் போறேன்னு கிளம்பாத! நான் திருந்தி யாருக்கும் எந்த பிரயோஜனமில்லை! ஏற்கனவே எனக்கு மனசிலயும், உடம்புலேயும் வியாதி! உன் டார்ச்சர் அதிகமானா சூசைட் பண்ணிக்கத்தான் வேணும்!’ கடுமையான குரலில் மிரட்டினான்… ஜெயந்தி அவனையே பார்த்தாள். ‘சரி… தற்கொலை செஞ்சுக்குங்க!’ சொன்னாள். தியாகு சற்று அதிர்ந்தான்… சாகச் சொல்கிறாளே? இவள் யார் என்னை சாகச் சொல்ல?

கோபமாக முறைத்தான்.‘இங்க பாருங்க மாமா… யாருக்கும் புண்ணியமில்லாம இப்படி குடிச்சிகிட்டே ரொம்ப நாள் கழிச்சு சாகறத விட… இப்பவே போகலாம்? இன்னொன்று சாகப் போறவங்க சொல்லிவிட்டு போக மாட்டாங்க!’ஜெயந்தி கெத்தாக சொன்னாள்.‘நீ யாரு என்ன சாக சொல்ல?’ தியாகு திடீரென்று கேட்டான். ஜெயந்தி சிரித்தாள். ‘நான் உங்கள வாழத்தான் சொன்னேன்… நீங்கதான் தற்கொலை செஞ்சுப்பேன்னு உதார் விட்டீங்க.. நான் அதுக்குதான் சரின்னு சொன்னேன்!’தியாகு எதுவும் பேசவில்லை… தன் வீட்டிற்குள் சென்று கதவை மூடினான்.

அன்றிரவு சிவா கேட்டான்… ‘ஜெயந்தி… நீ அண்ணன்கிட்ட போய் பேசறது.. பாக்கறது என் காதுக்கு வந்தது.. நாங்க பண்ணாத முயற்சியா? வேண்டாம் விட்டுடு!’‘ப்ளீஸ்ங்க… இந்த விஷயத்துல நீங்க தலையிடாதீங்க… எந்த ஒரு உயிரும் அனாவசியமா படைக்கப்படல… நானும் முயற்சி பண்றேன்… அது தப்பா?’ ஜெயந்தி கேட்டாள்…‘சரி உன் இஷ்டம்!’ சிவா சொன்னான்.

மறுநாள் ஜெயந்திக்கு தியாகு வீட்டில் அதிர்ச்சி காத்திருந்தது.. அவன் வீட்டை காலி செய்துவிட்டு போயிருந்தான்… ஜெயந்தி யோசித்தாள்.அன்று மாலை.. அந்த ஊர்க் கடைசியில் இருந்த டாஸ்மாக் கடை வாசலில் இரண்டு பாட்டில்கள் வாங்கிக் கொண்டு திரும்பிய தியாகு முன் ஜெயந்தி நின்றாள்.‘ஏய்.. உனக்கு அறிவில்ல… போ… இங்கேர்ந்து?’ மாட்டேன் என்று தலையாட்டினாள் ஜெயந்தி.

தியாகு கோபமாக பாருக்குள் நுழைந்தான். ஜெயந்தியும் பின் தொடர்ந்தாள்… அந்த குடிகார கூட்டத்தின் மத்தியில் தம்பி மனைவி இருப்பதை தியாகுவால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. உடனே வெளியே வந்தான்.‘இப்ப என்னதான் வேணும் உனக்கு? என்னால என் லவ்வ மறக்க முடியல… இந்த குடிய நிறுத்த முடியாது.. ப்ளீஸ் என்ன விடு.. காலில் விழுந்து கேக்கறேன்..’ கெஞ்சினான் தியாகு..ஜெயந்திக்கு முதல் வெற்றி கிடைத்தது.

‘சரி… அந்த ரெண்டு பாட்டில ஒன்ன கொடுங்க.. மீதிய உள்ள போய் முடிச்சிட்டுவாங்க..’ ஜெயந்தி ஒரு பாட்டிலை வாங்கிக்ெகாண்டு சற்று தள்ளிப் போய் காத்திருந்தாள்.அரை மணி கழித்து, வெளியே வந்தான் தியாகு.. ‘வாங்க…’ என்று அழைத்துக் கொண்டு அவனுடைய புதிய வீட்டிற்கு சென்றாள்.அங்கு அவன் தரையில் அமர்ந்தான்.. சற்று தள்ளி ஜெயந்தியும் அமர்ந்தாள்.

பிறகு ஏனோ,, தியாகு அழ ஆரம்பித்தான்.. அவன் அழுது முடியும் வரை ஜெயந்தி காத்திருந்தாள்.‘என்ன வாழக்கை இது மாமா? இப்படி சாராயத்த குடிச்சிட்டு.. கண்டத தின்னுட்டு… இப்படி விழுந்து கிடக்கவா இந்த பிறவி எடுத்தீங்க?’தியாகு தலை நிமிராமல் சொன்னான்…’ எனக்கு அந்த சிறுக்கி ஞாபகமாவே இருக்கு… ஏமாத்தினதும் அவமானமா இருக்கு… அத எப்படி மறக்க முடியும்?’‘சரி மாமா… லவ் ஃபெயிலியர் வருத்தமாதான் இருக்கும்… அவ உங்க அம்மாவவிட உசத்தியா?’ ஜெயந்தி கேட்டாள்..‘யாரு சொன்னா?.. எங்கம்மா உத்தமி!’‘பின்ன ஏன் உங்கம்மா தண்டனை அனுபவிக்கனும்?’தியாகு நிமிர்ந்தான்.

‘ஆமாம் மாமா… ஒரு தாய் மொத குழந்தைய எவ்வளவு ஆசையா கொஞ்சி வளர்த்திருப்பாங்க? அந்த உயிர் கொஞ்சம் கொஞ்சமா அழியறத பாத்து சந்தோஷமா படுவாங்க? இப்படி குடிச்சு குடிச்சு கெட்ட பேர் சம்பாதிச்சு வாழறத எந்த தாய் விரும்புவாங்க? கடவுள்ங்கிற சக்திய உணர… கடைசியா உள்ள பிறவி இந்த மனிதப்பிறவி மாமா… இத வெச்சுகிட்டு… உங்கள மறந்துட்டு போனவளுக்காக… கூட இருக்கறவங்கள வருத்தப்பட வைக்கிறது நியாயமா மாமா? இந்த குடி முழுசா உங்க கவலைய மறக்கடிச்சா கூட பரவால்ல… ஆனா, தெளிஞ்சதும் மறுபடியும் நீங்க கவலைதானபடறீங்க? அப்பறம் எதுக்கு இந்த குடி?’ஜெயந்தி கேட்டாள்.

‘புரியுது… ஆனா, அத விட முடியாத தூரத்துல போய்ட்டேன்..’ தியாகு சொல்ல… ‘யாரு சொன்னா… விட முடியாதுன்னு? நீங்கதான் சொல்றீங்க? எங்கப்பாவும் குடிச்சவர்தான்.. கிட்னி பிராப்ளம் வந்ததும் பயந்துகிட்டு விட்டாரே? மொதல்ல நீங்க விடணும்னு நினைக்கனும்!’‘சரி… நான் இனிமே… இத விட்டுட்டு எதுக்கு வாழனும்?’ தியாகு கேட்டான்.

‘எனக்காக, உங்கம்மாவுக்காக, உங்க தம்பிக்காக, என் குழந்தைக்கு ஒரு
பெரியப்பாவா வாழனும் மாமா!
நீங்க சரின்னு சொல்லுங்க… நான் பாத்துக்கறேன்!’

அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தியாகு நினைத்தான்..
‘சரி… இப்ப நான் என்ன செய்யணும்?’
‘மொதல்ல வீட்டுக்கு வாங்க!’
லட்சுமியும் சிவாவும் இதை எதிர்பார்க்கலை… அதே நேரம் தடுக்கவும் இல்லை… மாடியில் ஒரு அறையில் தியாகு தங்கினான்.. ஒரு மருத்துவர் தினமும் வந்தார்.. மதுவின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது… பல நாட்களில், தூக்கம் வராமல் தவித்தான் தியாகு.. அப்போது ஜெயந்தி கண் விழித்து.. சில மருந்துகளை கொடுத்தாள்.

தன் ஸ்தானத்தை மருமகள் எடுத்து கொண்டது கண்டு லட்சுமி ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.சிவா ஆச்சரியப்பட ஆரம்பித்தான்.. ஆறு மாதங்களில் புதிய தியாகு உருவானான்… ஜெயந்தி சொன்னபடி ஆன்மீக புத்தகங்களை படித்தான்.லட்சுமிக்கு பணம் மிச்சமானது.. கோவில்களில் உழவாரப்பணிக்கு செல்ல ஆரம்பித்தான் தியாகு… ஆன்மீக கூட்டங்களுக்கு சென்றான்.. கொஞ்சம் கொஞ்சமாக மேடையில் பேச ஆரம்பித்தான்… அடுத்த சில வருடங்களில் ஒரு ஆன்மீக பேச்சாளர் என்ற புது அவதாரமும் எடுத்தான்… ஜெயந்தி இரண்டாவது தாயானாள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனி பெண்களும் உலகத்தை சுற்றி வரலாம்! (மகளிர் பக்கம்)
Next post நில் கவனி பல்!! (மருத்துவம்)