ஆட்டிசம் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் ரோபோ!(மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 49 Second

இந்தியாவில் 500ல் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு பல விதமான சிறப்பு பயிற்சி வகுப்பு இருந்தாலும் இவர்களின் வாழ்க்கையினை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காக சென்னையைச் சேர்ந்த ரம்யா ‘நிமயா இன்னொவேஷன்ஸ்’ என்ற பெயரில் ஆட்டிசம் குழந்தைகளுக்காக சிறப்பு ரோபோடிக்ஸ் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளார்.

‘‘பொதுவாகவே பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தை மேல் பலவிதமான எதிர்பார்ப்புகள் இருக்கும். நன்கு படிக்கவேண்டும் பாட்டு, நடனம், நீச்சல் என பல்வேறு கலைகளில் ஈடுபடவேண்டும் என அவர்களின் விருப்பத்தை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். சாதாரண குழந்தைகளுக்கு இவை எல்லாம் சாத்தியம். ஆனால் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களை பொறுத்தவரை குழந்தைகள் அடிப்படை விஷயங்களை கற்றுக்கொண்டாலே போதும் என்றிருக்கும். காரணம் அவர்களுக்கு அந்த விஷயங்கள் செய்வதே மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதன் அடிப்படையில் பி.எச்.டியில் பிராஜெக்டாக நான் செய்தது தான் இப்போது நிறுவனமாக மாறியுள்ளது’’ என்று கூறும் ரம்யா, ரோபோடிக்ஸ் பிரிவில் எம்.டெக் முடித்துள்ளார்.

‘‘ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் அதை நம் மூளை கட்டளையிடும். அதன் படி தான் நாம் செய்கிறோம். அதேபோல் அந்த காரியம் செய்துமுடிக்கப்பட்டு விட்டது என்றும் மூளைக்கு தெரிவிக்கப்படும். இவை அனைத்தும் நரம்பியல் சார்ந்தது. இதில் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கும். அதாவது கதவைத் திறப்பது, தண்ணீர் குழாயினை மூடுவது.

சாப்பிடுவது… இவை அனைத்துமே ஆட்டிசம் உள்ளவர்களுக்கு மிகவும் சவாலானது. குறிப்பாக இவர்களுக்கு சைக்கோ மோட்டார் திறன்கள் பாதிக்கப்பட்டிருக்கும். அதனால் அது குறித்த ஆய்வில் இறங்கினேன். அப்போது தான் தெரிந்தது, சிறப்பு குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பவர்கள் கூட அவர்களின் சைக்கோமோட்டார் திறன்களை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடவில்லை என்று. அவர்களின் அந்த பிரச்னையினை ரோபோடிக்ஸ் மூலம் தீர்வு காண முடியும் என்று என் ஆய்வு மூலம் கண்டறிந்தேன். அதனால் அதை பயன்படுத்தி இந்த குழந்தைகளுக்கு எப்படி உதவலாம்ன்னு திட்டமிட்டேன்.

பொதுவாக சாதாரணமாக இருக்கும் குழந்தையிடம் ஒரு வேலை கொடுத்து அதை அவர்கள் செய்யவில்லை என்றால், இரண்டு முறை சொல்வோம்… மூன்றாவது முறை சத்தம் போடுவோம். ஆனால் இந்த குழந்தைகளுக்கு நீங்கள் ஓராயிரம் முறை சொன்னாலும் புரியாது. ஆனால் அந்த வேலையை ரோபோக்கள் எத்தனை தடவை செய்ய ெசான்னாலும் செய்யும். இதனால் குழந்தைகளும் அதை எளிதாக கற்றுக் கொள்வார்கள். ஆனால் இந்த சாதனங்களை குழந்தைகள் நேரடியாக ஆப்ரேட் செய்ய முடியாது. அவர்களின் பயிற்சியாளர்கள் கொண்டு தான் அதை பயன்படுத்த முடியும். அப்படித்தான் நாங்க டிசைன் செய்திருக்கிறோம்.

இந்த கருவி மூலம் எட்டு மாசத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய செயலை இரண்டே மாசத்தில் கற்றுக் கொள்ள முடியும் நாங்க இப்ப ஆறு சாதனங்களை அறிமுகம் செய்திருக்கிறோம். இதன் மூலம் 32 விதமான சைக்கோமோட்டார் திறன்களை பயிற்சி அளிக்க முடியும். பள்ளிகளுக்கு எந்த சாதனம் தேவையோ பெற்றுக் கொள்ளலாம். சிலர் ஒரு சாதனத்தை பயன்படுத்திவிட்டு அதை திருப்பிக் கொடுத்து வேறு சாதனங்களை பெறலாம். இதனைத் தொடர்ந்து GITA என்ற செயலியும் வழங்குகிறோம்.

பிறந்த குழந்தை முதல் அஞ்சு வயசு வரை உள்ள குழந்தைகளின் வயதுக்கேற்ற வளர்ச்சியை கண்காணிப்பதற்காக இந்த செயலியை அறிமுகம் செய்திருக்கிறோம். இதன் மூலம் அவர்களின் வளர்ச்சியில் குறைபாடு தென்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனை பெறுமாறு செயலியே அலர்ட் செய்துவிடும்’’ என்றவர் ப்ரீ ஸ்கூல் படிக்கும் குழந்தைகளுக்கான சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சிறந்த மணவாழ்க்கைக்கு சிறப்பான “டிப்ஸ்”!! (அவ்வப்போது கிளாமர்)
Next post வடாம் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)