ஆயுர்வேதத்தில் எலும்புப்புரை Osteoporosis நோய்க்கான தீர்வு! (மருத்துவம்)

Read Time:16 Minute, 4 Second

மனிதன் திடகாத்திரமான உடலை பெற்றிருக்க வேண்டும் என்றால், அதற்கு ஆரோக்கியமான எலும்புகள் அவசியமாக இருக்கின்றன. இவை அடர்த்தியாகவும் ஆரோக்கியத்துடனும் வலிமையுடனும் இருக்கும் வரையில்தான் ஒருவரின் தேகம் கம்பீரமான தோற்றத்தில் இருக்கும். ஆனால் வயது ஆக ஆக மற்ற உடலுறுப்புகள் தேய்ந்து போவது போன்று, உடலில் எலும்புகளும் தேயத் தொடங்கும். இதனால் நம் கம்பீரத் தோற்றம் படிப்படியாக குறைந்துவிடும்.

இவ்வாறு எலும்பு தேய்மானம் அடைவதையே ஆங்கிலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். இதை சமீபகால தமிழ் அறிஞர்கள் எலும்புப்புரை நோய் என்று அழைக்கின்றனர்.உலகளவில் இந்த எலும்புப்புரை நோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதாக ஆய்வுகள் திடுக்கிடும் தகவல்களை தெரிவிக்கின்றன. நாம் உண்ணும் உணவு பல பரிணாமங்கள் அடைந்துள்ளதாலும், நம் வாழ்க்கை முறைகள் பல மாற்றங்களை அடைந்து வருவதாலும் இதன் காரணமாக பலவிதமான நோய்கள் மற்றும்  இன்று நம் வாழ்க்கைமுறை மாற்றத்தினால் வரும் நோய்களால் நாம் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம். அவ்வகையில் சமீபகாலமாக இந்த எலும்புப்புரை  நோயும் மக்களை அதிகமாக பாதிக்கும் ஒரு நோயாக மாறிக்கொண்டிருக்கின்றது.

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகளின் அடர்த்தி படிப்படியாக குறைந்து எளிதில் உடையும் தன்மையை அடைவதாகும். பொதுவாக ஆஸ்டியோபோரோசிஸ் ஆண், பெண் இருவருக்கும் ஏற்படக்கூடியது. ஆனால் ஆண்களைவிட பெண்களையே அதிக அளவில் பாதிக்கின்றது, அதிலும் குறிப்பாக ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் ஆசியப் பெண்கள் அதிக  அளவில் ஆஸ்டியோபோரோஸிசால்  பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி, பலமணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது, போதிய அளவு உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் இளம் வயதினரையும் தாக்கி வருகிறது. எலும்புப்புரை நோய் வந்த ஒருவருக்கு, வளைந்த எலும்புகளினால் மோசமான தோற்றத்தை ஏற்படுத்தி, பலமாக தும்பினாலோ இருமினாலோ கூட அது அவருக்கு எலும்பு முறிவை ஏற்படுத்தி விடக்கூடும். கைகளை பலமாக தட்டுதல், இடுப்பை சற்று வளைத்தல் போன்ற செயல்களால் கூட முதுகெலும்பு அல்லது மணிக்கட்டில் எலும்பு முறிவுகளை ஏற்படுத்தும். கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் டி ஆகிய சத்துக்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. இதில் ஏதேனும் ஒன்று அல்லது கூட்டாக  குறைய தொடங்கும்போது இந்நோய் ஏற்படுகிறது.

காரணங்கள்

ஆஸ்டியோபோரோசிஸ் உருவாக பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை…

* போதுமான சூரிய ஒளியை பெறாதவர்கள் அல்லது உடற்பயிற்சி செய்யாதவர்களில் இந்நோய் காணப்படுகிறது.

* குறைவான அளவு கால்சியத்தை உட்கொள்பவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படலாம், உடலில் கால்சியம் குறைபாடு, விட்டமின் டி குறைபாடு மற்றும்  ஹார்மோன் குறைபாடுகள் ஏற்படும் பொழுது ஆஸ்டியோபோரோசிஸ் உருவாகிறது.

* பெண்களில் பொதுவாக ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் பொழுதும், ஆண்களில் டெஸ்டோஸ்டீரோன் அளவு குறையும் பொழுதும் உருவாகின்றது.

* பெண்கள் மாதவிடாய் நிறைவுக்கு பின்னர் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவதால் எலும்புகளின் அடர்த்தி பெருமளவில் குறைந்து அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்.  இது மாதவிடாய்க்கு பிந்தைய எலும்புப்புரை என்றழைக்கப்படுகிறது.

* ஹைப்பர் தைராய்டு, ஹைப்பர் பாராதைராய்டு,  குஷிங் சிண்ட்ரோம் (Cushing Syndrome) ஆகியவற்றால் பாதிக்கப்படும் பொழுது எலும்புகளின் அடர்த்தி குறைந்து இந்நோய் ஏற்படலாம்.

* பொதுவாக ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் இந்நோயால் எளிதில் பாதிக்கப்படலாம் மற்றும் நாட்பட்ட நோய்கள் இருக்கும் எவருக்கும் ஏற்படலாம்.

* உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும் எலும்புப்புரை நோய் வருவதற்கான முக்கிய காரணமாகும்.

* சிலருக்கு பரம்பரையாக பெற்றோரிடமும் இருந்தும் வருகிறது.

*அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் ஒரு முக்கிய காரணியாகும்.

* ஸ்டீராய்டு (Steroid) அல்லது குளூக்கோகார்ட்டிகாய்டு தூண்டப்பட்ட எலும்புப்புரை –  (SIOP or GIOP) – குளூக்கோகார்ட்டிகாய்டுகள் (Glucocorticoids) என்ற
வகை மருந்துகள் உட்கொள்ளுதலின் காரணமாகவும் இந்த நோய் வரலாம்.  

* மென் பானங்கள் – குளிர் பானங்கள் (பல மென் பானங்களில் போஸ்பாரிக் அமிலம் (Phosphoric Acid) இருக்கிறது) எலும்புப்புரையின் ஆபத்தை அதிகரிக்கிறது என்று சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அறிகுறிகள்

ஆரம்பத்தில் எலும்புப்புரை நோயின் அறிகுறிகள் வெளியில் தெரிவதில்லை.

*படுக்கையிலிருந்து எழுந்திருக்கும்போதே அறியப்படும் வலியானது பொதுவாக நடக்கும்போது மற்றும் நிற்கும்போது மோசமடையலாம். திடீரென,
கடுமையான முதுகுவலி ஏற்படுவதை அனுபவிக்கலாம்.

*எலும்புப்புரை நோயின்  பொதுவான அறிகுறிகளாக விவரிக்கப்படாத மூட்டு வலி, தொடுவதால் வலி, உடற்பயிற்சி செய்வதில் சிரமம், உடையக்கூடிய நகங்கள், பலவீனமான பிடிப்பும் வலியும் ஆகியவை பல சந்தர்ப்பங்களில் நமக்கு அறிகுறியாக தென்படும்.  

*ஆஸ்டியோபோரோசிஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிதில் எலும்பு முறிவு ஏற்படும். பொதுவாக இடுப்பு எலும்பு, நெஞ்சு எலும்புகள் மற்றும் கை எலும்புகளில் முறிவு ஏற்படும். வயதானவர்களுக்கு  நீண்ட கால இடுப்பு வலி ஏற்படும். முதுகுவலி, முதுகு கூன் போடுதல், காலப்போக்கில் வளர்ச்சி குறைதல் ஆகியவை உருவாகி எலும்புகள் பலவீனமாகி அவற்றின் உருவ அமைப்பு படிப்படியாக மாறுபாடு அடையும் வாய்ப்புகள் உள்ளன.

*உடலை வளைத்தல், முறுக்குதல் மற்றும் நீட்டுதல் உட்பட எளிய நடவடிக்கைகளை செய்வதில் கூட சிரமம் அல்லது கடுமையான வலி ஏற்படலாம்.

*வேறு காரணங்களினால் எலும்பு முறிவு ஏற்பட்டால் அது மிகவும் மெதுவாகத் தான் குணமாகும்.

கண்டறிதல்

* டெக்சா ஸ்கேன் மூலமாக எளிதில் கண்டறியலாம்.

தவிர்ப்பதற்கான வழிமுறைகள்

*  தினமும் குறைந்தது 20 நிமிடமாவது சூரிய ஒளி உடம்பில் படுமாறு உடற்பயிற்சி செய்ய வேண்டும். புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் போதை பொருட்களை தவிர்க்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான முறையான உணவு பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.

* நடத்தல், நீந்துதல் போன்ற உடற்பயிற்சிகள், எடை சுமத்தல் மற்றும் எதிர்பாற்றல் உடற்பயிற்சிகள் எல்லாமே பெண்களுக்கு சூதகநிற்புப்பின் எலும்புத் தாது அடர்த்தியை பராமரிக்கவோ அதிகரிக்கவோ செய்யும் என்று பல்வேறு ஆய்வுகள் சொல்கின்றன.

* கீழே விழுதலை தவிர்த்தல் – நடப்பதற்கு உதவும் தசைகளை பண்படுத்தும் உடற்பயிற்சி மற்றும் அசைவு சீராக்கத்‌தை மேம்படுத்தும் உடற்பயிற்சிகள் ஆகியவை கீழே விழுதலை தடுக்கும்

* உணவில் அதிகம் உப்பு எடுத்துக் கொள்வதை குறைக்க வேண்டும். உப்பை அதிகம் உட்கொள்ளும் போது, அது சிறுநீர் மற்றும் வியர்வையின் மூலம் வெளியேற்றும் கால்சியத்தின் அளவை அதிகரிக்கிறது. அதிலும் ஏற்கனவே கால்சியம் குறைபாடு இருந்தால், அது மிகவும் ஆபத்தாய் முடியும்.

உணவு முறைகள்

ஆஸ்டியோபோரோசிஸ் வியாதியை குணமாக்க வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றம் மிகுந்த பங்களிக்கிறது. காய்கறிகளில் மற்றும் சைவ உணவில் கால்சியம் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால் கேழ்வரகில் கால்சியம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. ஆகவே கேழ்வரகு கட்டாயம் நம் உணவில் இருக்க வேண்டும். நமது முன்னோர்கள் இந்த கேழ்வரகை காலை உணவாக எப்பொழுதும் உண்டு வந்த காரணத்தினால்தான் அவர்களுக்கு 80, 90 வயதிலும் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாக இருந்தது.

ஆனால் எப்போது நாம் கிரைண்டரையும் குளிர்சாதனப்பெட்டியையும் கண்டுபிடித்தோமோ அப்பவே நாம் அரிசியால் ஆன உணவுகளை மூன்று வேளையும் சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். இதன் காரணமாகவே உடல் பருமன், சர்க்கரை வியாதி, கொழுப்பு ஆகிய உபாதைகள் நம்மில் பலருக்கு வரத்தொடங்கி விட்டன. ஆகவே நாம் வாரத்தில் குறைந்தது நான்கு தடவையாவது காலையிலோ மதியமோ இந்த கேழ்வரகை கூழாகவோ களியாகவோ அல்லது பணியாரம்,  இடியாப்பம், புட்டு போன்ற வகையிலோ  சாப்பிட்டு வந்தோமானால் நமக்கு சுண்ணாம்புச்சத்தும் கிடைக்கும். அதேபோல் உடல் பருமன், சர்க்கரை வியாதி, கொழுப்பு போன்ற பிரச்னைகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ளவும் முடியும். அதேபோல் எள்ளு மற்றும் கொள்ளையும் நமது உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள நமது எலும்புகள் உறுதி பெறும். உடல் பருமன் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளில் குறிப்பாக தயிர், மோர், நெய் போன்ற பொருட்களில் கால்சியம் நிறைந்திருக்கிறது. இருந்தாலும் பால் சார்ந்த உணவு ஒவ்வாமை, கொழுப்பு மற்றும் உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மோராக குடிப்பது நல்லது. பசுமையான காய்கறிகள், கீரைகள், பிரக்கோலி, முருங்கைக்கீரை, முள்ளங்கிக்கீரை, பாலக்கீரை, கொத்தமல்லி போன்றவற்றிலும் சிறிதளவு கால்சியம் கிடைக்கிறது. பாதாம் பருப்பு மற்றும் அத்திப்பழத்தில் கால்சியம் நமக்கு கிடைக்கும். அசைவ உணவில் கடல்வாழ் மீன்கள் மற்றும் எலும்புகளுடன் கூடிய மாமிசம் ஆகியவற்றை அவ்வப்பொழுது உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆயுர்வேதத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் ஆயுர்வேதத்தில் ஆஸ்டியோ

போரோசிஸானது ‘அஸ்தி க்ஷயம்’ என்று அழைக்கப்படுகிறது.இந்த நோய்க்கு ஆயுர்வேத உள் மருந்துகள் கொடுத்து வெளிப்புற பஞ்சகர்மா சிகிச்சையும் செய்து வர நல்ல பலனைத்தரும்.
உள் மருந்துகளானவை, குடுச்யாதி கசாயம், குக்குல் திக்த க்ஷீர கசாயம், லாக்ஷாதி க்ஷீர கசாயம், தான்வந்திரம் கஷாயம், விதார்யாதி கஷாயம் ஆகியவற்றில் ஒன்றை காலை, மாலை இருவேளை வெறும் வயிற்றில் எடுக்கலாம்.  பிரண்டை பொடியை தினமும் பாலில் சேர்த்து எடுக்கலாம். லாக்ஷா சூரணம் அல்லது பலா சூரணம் தினமும் காலை, மாலை உணவிற்கு பின் பாலில் சேர்த்து எடுக்கலாம்.

லாக்ஷாதி குக்குலு, திரையோதசாங்க குக்குலு ஆகியவற்றை தினமும் எடுக்கலாம்.தைல மருந்துகளான கந்த தைலம்,  லாக்ஷாதி தைலம் முதலியவை உள்ளுக்குக்கொடுக்க நல்ல பலன் அளிக்கின்றன. குக்குல் திக்தக நெய் பாலுடன் சேர்த்து பயன்படுத்தலாம். பிரவாள  பிஸ்டி, பிரவாள பஞ்சாமிர்தம், முத்து பஸ்மம், சங்கு பஸ்மம் முதலியவற்றை சரியான அளவில் எடுக்க வேண்டும். காயகற்ப மருந்துகளான தில ரசாயனம், நரசிம்ம ரசாயனம் ஆகியவை எலும்புகளுக்கு நல்ல பலம் அளிக்கின்றன.

பஞ்சகர்மா சிகிச்சைகளான வஸ்தி, அபியங்கம், பிச்சு முதலானவற்றை செய்யலாம். அபியங்கத்திற்கு லாக்சாதி தைலம், பலா தைலம், தான்வந்தர தைலம், சின்சாதி தைலம், பஞ்ச ஸ்நேகம் முதலானவற்றை பயன்படுத்தலாம். அனுவாசன வஸ்திக்கு தான்வந்தர தைலம், பலா தைலம் பயன்படுத்தலாம். கஷாய வஸ்தி (யாபன வஸ்தி) நல்ல பலனளிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வாலிப வயோதிக அன்பர்களே…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post குளிர்கால கஷாயங்கள்!! (மருத்துவம்)