புலிகளுடன் சண்டையிடுவதற்கு இந்தியா படைத்துறை உதவி – ரணில்

Read Time:5 Minute, 18 Second

இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுடன் மோதுவதற்கு இந்தியா முழு அளவில் உதவிகளை வழங்கி வருவதாக இலங்கையின் முன்னாள் பிரதம மந்திரியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கா தகவல் வெளியிட்டுள்ளார். ‘ரைம்ஸ் நௌ’ க்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இந்தத் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். “நான் பிரதமராக இருந்த காலப்பகுதியிலிருந்து இந்தியாவும், அபிவிருத்தியடைந்த நாடுகளும் பாதுகாப்பு விடயத்தில் எமக்கு உதவிகளை வழங்கின. முன்னர் சில தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தபோதிலும், சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பாதுகாப்பு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அவை சம்மதம் தெரிவித்திருந்தன” என்று ரணில் விக்கிரமசிங்க இந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் உதவி இல்லாமல் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை கடலில் அழித்திருக்க முடியாது என்றும், வெளிநாடுகளிலிருந்த விடுதலைப் புலிகளின் வலைப்பின்னல்களும் உடைக்கப்பட்டதாகவும் இந்த நேர்காணலில் ரணில் விக்கிரமசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்துக்கு ஏனைய நாடுகள் பலவும் புலனாய்வு ஒத்துழைப்பு மற்றும் ஏனைய உதவிகளை வழங்கியதாக இந்த நேர்காணலில் தகவல் வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க,

“நாம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்ததுடன், அவற்றை விரிவாக்கியும் இருந்தோம். பயிற்சி வழங்கப்பட்டது. புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு கிடைத்தது. அத்துடன், இலங்கையில் எமது பாதுகாப்புக்கான உதவிகளையும் இந்தியா எமக்கு வழங்கியிருந்தது” என்று தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கப் படைகளில் நடவடிக்கைகளுக்கு இந்தியா பல வழிகளிலும் உதவி வருவதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் ஒரு சூழ்நிலையில், அவற்றை உறுதிப்படுத்தும் வகையில் ரணில் விக்கிரமசிங்க இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளமையால், இந்திய காங்கிரஸ் கூட்டணிக்குத் தேர்தல் காலத்தில் பெரும் நெருக்கடி ஏற்படலாம் என இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நவீன் அப்போதே சொன்னார்?

2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மலையகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயகா, விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் சண்டை செய்வதற்கு இந்தியா தமக்கு உதவிகளை வழங்கவிருப்பதாகத் தகவல் வெளியிட்டிருந்தார்.

தேர்தல் முடிந்ததும் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்கள் தொடராது என்றும், யுத்தமே நடைபெறும் என்றும் இந்தக் கூட்டத்தில் தெரிவித்த நவீன் திஸாநாயகா, இதற்கு இந்தியாவின் சோனியா காந்தி தலைமையிலான அரசாங்கமும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் விடுதலைப் புலிகளுடன் ஒரு போர்நிறுத்த உடன்படிக்கை செய்து சமாதானப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயகா இவ்வாறு தகவல் வெளியிட்டமை தொடர்பாக அப்போது பெரும் சர்ச்சைகள் எழுந்திருந்தன.

ரணில் விக்கிரமசிங்காவின் சமாதான முயற்சிகளுக்குப் பின்னாலிருந்த திட்டத்தை அவசரப்பட்டு நவீன் திஸாநாயகா தேர்தல் கூட்டத்தில் போட்டுடைத்துவிட்டார் என்று அப்போது சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சனல்-4 ஊடகவியலாளர் நாடு கடத்தப்பட்டார்
Next post இந்திய வைத்தியர்களை இலங்கைக்கு அனுப்ப தீர்மானம்..