By 30 November 2013 0 Comments

ஹலோ சுரேஸ் பிரேமச்சந்திரன்‏..! -வடபுலத்தான்

tna.suresh-01வடமாகாண சபையின் அதிகாரம் ஆளுநரிடமா அல்லது முதல்வரிடமா? என்று கேட்கிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

மாகாணசபைக்கே அதிகாரம் இல்லை என்று சில நாட்களுக்கு முன்னர் இதே சு. பிரேமச்சந்திரனும் அவருடைய சக பாடிகளும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இப்ப மாகாணசபையின் அதிகாரம் யாருடைய கையில் உள்ளது? என்று கேட்கிறார்கள்.

அப்படியென்றால் என்னதான் சொல்கிறார்கள்?

உண்மையில் மாகாணசபையின் அதிகாரம் மக்களுடைய கைகளில்தான் இருக்க வேணும்.

மக்களுடைய கைகளில் அந்த அதிகாரம் இருந்தால்தான் எல்லோரும் பயப்படுவார்கள். காரியங்களும் ஒழுங்காக நடக்கும்.

மக்களின் கைகளில் அதிகாரத்தை ஒப்படைத்திருந்தால் இப்பொழுது விக்கினேஸ்வரனின் காதுக்குள் கம்பியை விட்டுக் கவர்னர் கிண்ட முடியாது.

சுரேசுக்கும் கொதிப்போ வருத்தமோ ஏற்பட்டிருக்காது.

ஆனால் தேர்தலின்போதும் தேர்தல் நடக்காமல் இருக்கின்ற போதும் அந்த அதிகாரத்தை மக்களிடமிருந்து பறித்தெடுத்து விடுகிறார்கள்.

பின்பு ஆளுக்காள் அடிபடுகிறார்கள்.

சட்டத்தையும் விதிமுறைகளையும் நம்புவதை விட மக்களை நம்புங்கள் மக்களுக்கு நேர்மையாகவும் விசுவாசமாகவும் இருங்கள் என்றால் யாருமே கேட்கிறார்களில்லை.

மாகாணசபைக்கு அதிகாரம் இல்லை என்றாலோ அல்லது முதல்வரின் அதிகாரங்களைக் கவர்னர் கொள்ளையடிக்கிறார் என்றாலோ அதற்கு மருந்து கொடுக்க வேண்டியவர்களே இப்படிக் குய்யோ முறையோ என்று கத்துவதும் குழறுவதும் பொருத்தமானதல்ல.

பதிலாக மக்களையும் கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் இணைத்துக் கொண்டு இந்த அநீதி(?)களுக்கு எதிராகப் போராட வேண்டும்.

சில நாட்களுக்கு முன் சில போராட்டங்கள் நடந்தன.

பிரித்தானியப் பிரதமர் டேவிற் கமரூனும் சனல் 4 தொலைக்காட்சிக்காரர்களும் வருகிறார்கள் என்பதற்காக காணாமற்போனோரை ஏற்றிக் கொண்டு வந்து விட்டு ஒரு போராட்டம்.

அதேநேரத்தில் வலி வடக்கில் மீள்குடியேற்றத்தைக் கோரியும் நில ஆக்கிரமிப்பை எதிர்த்தும் ஒரு உண்ணாவிரதம்.

கூலிக்கு மாரடிக்கிறதைப்போல இப்படி வெளியில் இருந்து யாராவது வந்தால் உடனே அவர்களுக்காக இப்படி ஒரு ‘செற்றப் கேம்ஸ்’ கணக்கில் திடீர்ப்போராட்டங்கள்.

வெளியாட்களின் விசுவாசிகளாக இருந்தால் அப்படித்தான் செய்யத்தோன்றும். அவர்களுக்குக் கணக்குக் காட்டுவதற்காக.

இப்படித்தான் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்திலிருந்து நவநீதம்பிள்ளை வரும்போதும் ‘செற்றப் கேம்ஸ்’கள் நடந்தன.

ராஜவிசுவாசம் என்பது சாதாரணமானதல்ல. அது அடித்தனத்தை உணர வைப்பதில்லை.

ஆனால் என்னதான் கஸ்ரப்பட்டு அழகாகச் ‘செற்றப் கேம்ஸ்’களைக் காட்டினாலும் வருகின்றவர்களுக்கு எல்லாம் தெரியும்.

எல்லாவற்றையும் தெரிந்து கொண்டே அவர்கள் ஒண்டும் தெரியாதவர்களைப் போல நடிக்கிறார்கள் நடந்து கொள்கிறார்கள்.

சம்மந்தனுக்கும் சுமந்திரனுக்கும் மாவைக்கும் சிறிதரனுக்கும் சரவணபவனுக்கும் அரியநேத்திரனுக்கும் செல்வம் அடைக்கலநாதனுக்கும்தான் சர்வதேச அரசியலைப்பற்றி விளங்காதென்றால். சு. பிரேமச்சந்திரக்குமா அதைப்பற்றித் தெரியாமல் போய்விட்டது?

அல்லது பன்றியோடு திரியும் கன்றும் கழிவைத் தின்னும் என்ற மாதிரி தமிழரசுக்காரரின் பாணியிலேயே சு.பிரேமச்சந்திரனும் சிந்திக்கிறாரா? அல்லது தனக்கும் ஒன்றுமே தெரியாததைப்போல நாடகம் ஆடுகிறாரா?

எந்தப் பிரச்சினையென்றாலும் அந்தப் பிரச்சினைக்காக போராட வேண்டுமே தவிர அதை விட்டு விட்டு அறிக்கை விடுவதும் புலம்புவதும் நல்லதல்ல. அதில் பிரயோசனமும் இல்லை.

ஆனால் எடுத்தெற்கெல்லாம் மக்களைக் கண்ட பாட்டுக்கு அலைக்கழிக்கக் கூடாது.

தங்களுக்காக போராடுவார்கள் தங்களுக்கு நன்மைகளைச் செய்வார்கள் என்றே இவர்களுக்கு மக்கள் வாக்களித்து. வசதிகளையும் சலுகைகளையும் சம்பளத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

ஆனால் மக்களுக்கு அந்தச் சலுகைகளும் வருவாயும் சம்பளமும் கிடைப்பதில்லை.

ஆகவே மக்களின் பெயரால் மாகாணசபை உறுப்பினர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருப்பவர்கள்தான் முதலில் போராட வேண்டும்.

மாகாணசபையின் அதிகாரத்தைப் பெறுவதற்காக மட்டுமல்ல அரசியல் உரிமைகளைப் பெறுவதற்காகவும் காணிகளை மீட்பதற்காகவும் என எல்லாத்துக்குமாகப் போராட வேண்டும்.

மக்களைக் கேடயமாக்காமல் மக்களுக்குக் கேடயமாக இருந்து போராடி வழிகாட்ட வேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam