கிளி., மட்டில் விபத்து – யுவதி உட்பட இருவர் ஸ்தலத்திலேயே பலி!!
கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்
மட்டக்களப்பு – காத்தான்குடி – ஆரையம்பதி பிரதான வீதியில் நேற்று மாலை 04.30 அளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆரையம்பதியில் இருந்து காத்தான்குடி நோக்கிச் சென்ற மோட்டார் வண்டியும் கல்முனையில் இருந்து மட்டக்களப்பை நோக்கிச்செற்ற மட்டக்களப்பு பஸ் டிப்போவிற்குச் சொந்தமான பஸ் வண்டியும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் ஆரையம்பதியைச் சேர்ந்த 27 வயதுடைய செல்வி கோணலிங்கம் விஜிதா என்பவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
சடலம் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன், காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கிளிநொச்சியில் நேற்று இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
பரந்தன் – பூநகரி வீதியில் நேற்று இரவு 08.45 அளவில் நடைபெற்ற இவ் விபத்தில் நொச்சியாகம பிரதேசத்தை சேர்ந்த இந்திக்க சில்வா என்பவரே மரணமடைந்துள்ளார்.
உயிரிழந்த நபர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்த நிலையில் வீதியில் கிடந்தது. மோட்டார் சைக்கிளோடு மோதுண்ட மற்றைய வாகனம் அவ்விடத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.