உடன்குடியில் கால்கள் முறிந்த நிலையில் உயிருக்கு போராடிய கொள்ளையன்!!
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பஸ் நிலையம் அருகே உள்ள கொம்புடையார் தெருவில் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. இன்று அதிகாலை இங்குள்ள காம்பவுண்ட் சுவர் அருகே இரண்டு கால்கள் முறிந்த நிலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் குலசேகரன் பட்டினம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்–இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து தலைமையிலான போலீசார் விரைந்து வந்து வாலிபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொம்புடையார் தெருவில் உள்ள வீடுகளில் திருட முயன்ற போது சுவரில் இருந்து தவறி விழுந்ததில் அந்த வாலிபருக்கு கால் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. அவரது பெயர் விபரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.