சிறுமி கற்பழிப்பு வழக்கில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்: மாதர் சங்கத்தினர் மனு!!
அனைத்திந்திய ஜன நாயகர் மாதர் சங்கம் சார்பில் தலைவர் அமுதா தலைமையில் பெண்கள் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக திரண்டு வந்தனர்.
பின்னர் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:–
கடந்த 2013–ம் ஆண்டு ராமநாதபுரத்தில் 13 வயது சிறுமி சொந்த தாய் மாமனால் கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராகம் கருப்பசாமி, பாலு, கருப்பசாமி உள்பட 4 பேரை கைது செய்தனர். கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இதில் கடந்த வாரம் தீர்ப்பு வெளியானது. தீர்ப்பில் ராகம் கருப்பசாமி உள்பட 4 பேரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது பெண்களுக்கு எதிரான கொடுமையை ஊக்குவிக்கும் விதமாக அமைந்து விடும்.
எனவே அரசு தரப்பு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும். அப்போது குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி செய்யப்படலாம். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
பின்னர் கோவை கமிஷனர் அலுவலகத்துக்கும் சென்று மனு கொடுத்தனர்.