பிரசவத்தின்போது அஜாக்கிரத்தையால் மூளை பாதிப்பினால் குழந்தை இறப்பு: ஆஸ்பத்திரி, டாக்டருக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம்!!
டெல்லியில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் கடந்த 1999-ம் ஆண்டு ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த டாக்டர்களின் அஜாக்கிரத்தையால் மூச்சுத்திணறலுடன் பிறந்த அந்த குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டது. பல்வேறு டாக்டர்களிடம் காட்டி சிகிச்சை அளித்தும், பலனின்றி தனது 12-வது வயதில் அந்த குழந்தை உயிரிழந்தது.
எங்கள் குழந்தைக்கு ஏற்பட்ட மூளை பாதிப்புக்கும், அது இறந்ததற்கும் அப்போலோ ஆஸ்பத்திரியில் மகப்பேறு துறை மருத்துவர்களின் அஜாக்கிரத்தையே காரணம். அந்த பிரசவத்தின்போது கையாள வேண்டிய நவீன சிகிச்சை முறைகளை கையாளாமல் மிகவும் மெத்தனமான போக்கை டாக்டர்கள் கையாண்டதால் பிரசவம் நீண்ட நேரம் இழுத்துக் கொண்டே போனது.
இதன் விளைவாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு எங்கள் குழந்தைக்கு மூளை பாதிப்பும், அது சார்ந்த பல்வேறு கோளாறுகளால் மரணமும் ஏற்பட்டது. இந்த மெத்தனப்போக்குக்கு காரணமான டெல்லி அப்போலோ ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் பிரசவம் பார்த்த டாக்டரிடம் இருந்து எங்களுக்கு இழப்பீடு பெற்றுதர வேண்டும் என குழந்தையை பறிகொடுத்த பெற்றோர் தேசிய நுகர்வோர் நீதி மன்றத்தில் முறையிட்டனர்.
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் பிரசவம் பார்த்த டாக்டர்கள் மெத்தனப்போக்காக நடந்து கொண்டதையும், அவர்கள் மீதான தவறுகளை மறைப்பதற்காக சம்பந்தப்பட்ட மருத்துவ கோப்புகளில் சில நீக்கங்களும், திருத்தங்களும் செய்யப்பட்டிருப்பதை நுகர்வோர் நீதி மன்றம் கண்டுபிடித்தது.
இதன் அடிப்படையில், குழந்தையை பறிகொடுத்த பெற்றோருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் 80 லட்சம் ரூபாயை டெல்லி அப்போலோ ஆஸ்பத்திரி நிர்வாகமும், 20 லட்சம் ரூபாயை பிரசவம் பார்த்த டாக்டரான மகப்பேறு நிபுனர் சோஹினி வர்மாவும் வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதி மன்றம், தொழில் தர்மத்தை மீறிய வகையில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட அந்த ஆஸ்பத்திரிக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் அவற்றில் பணியாற்றும் டாக்டர்கள் மற்ற ஆஸ்பத்திரிகளை விட மிக சிறப்பான-உயர்வான சிகிச்சையை அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் உங்களை நாடி வருபவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது உங்களது முக்கிய கடமையாகும், அந்த கடமையில் இருந்து விலகும்போது, இதைப்போன்ற தீர்ப்புகளும், அபராதமும் தவிர்க்க முடியாதவை என இந்த தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.