விவசாயத்தில் நஷ்டம்: தற்கொலைக்கு அனுமதி கேட்டு 35 விவசாயிகள் ஜனாதிபதிக்கு கடிதம்
மராட்டிய மாநிலம் விதர்பா பிராந்தியத்தில் விவசாயத்தில் ஏற்படும் நஷ்டத்தால் விவசாயிகள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. கடந்த 13 மாதத்தில் 658 பேர் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 45 நாளில் 104 பேர் தற்கொலை செய்து உள்ளனர். இந்த நிலையில் வதோனா என்ற கிராமத்தை சேர்ந்த 35 விவசாயிகள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்கள் ஊரில் ஓடும் ஆற்றில் வரும் வெள்ளத்தால் ஒவ்வொரு ஆண்டும் எங்கள் நிலத்தில் தண்ணீர் புகுந்து பயிர்களை அழித்து விடுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் பலத்த நஷ்டம் அடைகிறோம்.
அந்த ஆற்றில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் அரசு கண்டு கொள்ளவே இல்லை. ஏற்கனவே விவசாய நஷ்டத்தால் எங்கள் ஊரில் பலர் தற்கொலை செய்து இருக்கிறார்கள். இனியும் நஷ்டத்தை தாங்கி கொள்ள முடியாது. எனவே எங்களை தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறி உள்ளனர். கடித நகல் முதல்-மந்திரிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.