இஸ்ரேல் விமானங்கள் சரமாரி குண்டு வீச்சு: 9 லெபனான் வீரர்கள் பலி
லெபனானின் ஹெஸ் புல்லா இயக்கத்தினர் இஸ்ரெல் வீரர் ஒருவரை கடத்தி சென்றதை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் பீரங்கி படையும் லெபனானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துகிறது. கப்பல் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. முப்படைகளின் இந்த தாக்குதல் 5-வது நாளாக நீடிக்கிறது.
வடக்கு பகுதியில் உள்ள லெபனானின் 2 ராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் இன்று குண்டு வீசியதில் 9 லெபனான் வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த ராணுவ முகாம்கள் தாக்கப்பட்டன.
திரிபோலி, அட்தே ஆகிய பகுதிகளில் உள்ள துறை முகங்கள் மீதும் குண்டு வீசப்பட்டன. இதில் அந்த துறைமுகங்கள் பலத்த சேதம் அடைந்தன.
இஸ்ரேல் டாங்கிகள் தெற்கு பகுதியில் ஐ.நா. அமைதிப்படையினரின் முகாம் மீது குண்டு வீசியது. இதில் ஐ.நா. அமைதிப்படை முகாம் தகர்க்கப்பட்டது. ஐ.நா. அமைதிப்படையில் இடம் பெற்றிருந்த இந்திய வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.
5 நாட்களாக இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசியதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் பலியானார்கள்.
இதில் கனடா நாட்டை சேர்ந்த 8 பேர் பலியாகி விட்டனர். அங்குள்ள கனடா நாட்டவர்கள் மற்றும் இதர நாட்டவர்கள் வெளியேறி வருகிறார்கள். 16 ஆயிரம் கனடா நாட்டவர்கள் அங்கு உள்ளனர்.
லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் மீது எதிர்தாக்குதல் நடத்தியதில் 8 இஸ்ரேலியர்கள் உயிர் இழந்தனர்.
லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன காசா பகுதியில் உள்ள வெளியுறவு அலுவலகம் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதில் அந்த 8 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமாகி விட்டது.