மாதம் ஒரு மொழி அழிந்து வருகிறது
உலகம் முழுவதும் இப்போது 7 ஆயிரம் மொழிகள் வழக்கில் உள்ளன. ஆனால் மாதம் ஒரு மொழி அழிந்து வருகிறது. இது இப்படியே நீடிக்குமானால் அடுத்த 100 ஆண்டுகளில் 2ஆயிரத்து 500 மொழிகள் மட்டுமே இருக்கும். பிரதேச மொழிகள் மீது விதிக்கப்படும் தடை, தொற்றுநோய், யுத்தம், இடம்பெயர்தல், கலாசார அழிவு ஆகியவை காரணமாக மொழிகள் அழிவதாக ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பு கூறி உள்ளது. சில நேரங்களில் ஒரு மொழியைப் பேசுபவர்களே தங்கள் மொழியைக் கைவிடுவதால் அந்த மொழி மறைந்து போய்விடுகிறது என்று அந்த அமைப்பு கூறி உள்ளது.
550 மொழிகள் 100 பேருக்கும் குறைவானவர்களால் பேசப்படுகிறது. இந்த மொழிகள் தான் விரைவில் அழியப்போகின்றன. 516 மொழிகள் கிட்டத்தட்ட அழிந்து விட்டதாக கருதப்படுகின்றன. இந்த மொழிகளை 50-க்கும் குறைவானவர்கள் பேசுவதாலேயே இவை அழிந்து விட்டதாக கருதப்படுகின்றன.
உலகின் 10 பெரிய மொழிகளில் இந்தி, வங்காளி ஆகியவை இடம்பெற்று உள்ளன. மற்ற 8 மொழிகள், மண்டரின் (சீனம்), ஆங்கிலம், ஸ்பானிஷ், ரஷியன், அரபி, போர்த்துக்கீசியம், மலாய், இந்தோனேஷியன், பிரஞ்சு ஆகியவை ஆகும். சீன மொழி 100 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படுகிறது. இந்தி 49 கோடியே 60 லட்சம் மக்களால் பேசப்படுகிறது. வங்காளி 21 கோடியே 50 லட்சம் மக்களால் பேசப்படுகிறது. ஆங்கிலம் 51 கோடியே 40 லட்சம் மக்களால் பேசப்படுகிறது.
ஆசியாவில் அதிகமான மொழிகள் வழக்கில் உள்ளன. இந்தியாவில் 427 மொழிகள் பேசப்படுகின்றன. அமெரிக்காவில் 311 மொழிகள் பேசப்படுகின்றன. உலகமொழிகளில் பாதி 8 நாடுகளில் மட்டும் பேசப்படுகின்றன.