கடலில் தவித்த 30 பேரை கண்டுபிடித்த செயற்கைகோள்: இந்திய கடற்படை மீட்டது
பனாமா நாட்டைச் சேர்ந்த “குளோரி மூன்” எனும் கப்பல் ஒன்று இலங்கை கடல் பகுதியில் கடந்த 11-ந்தேதி சென்று கொண்டிருந்தது. அந்த கப்பலில் 30 பேர் இருந்தனர். நடுக்கடலில் கப்பலில் திடீரென தீ பிடித்தது. இதனால் கப்பலில் உள்ள தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதோடு கப்பலை இயக்கி செலுத்தும் கருவிகளும் பழுதடைந்தன. இதன் காரணமாக அந்த கப்பல் நடுக்கடலில் தத்தளித்தது.
அதிர்ஷ்டவசமாக அந்த கப்பலில் ஆபத்து காலத்தில் உதவி கோரும் சிக்னல் இயங்கி யது. கப்பல் ஊழியர்கள் அந்த சிக்னலை இயக்கி உதவி கோரினார்கள். அந்த சிக்னலை இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைகோளான இன்சாட் 3 ஏ பெற்றது.
மறு வினாடி அந்த தகவலை பெங்களூரில் உள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ. கட்டுப்பாட்டு அறைக்கு செயற்கைகோள் அனுப்பியது. இதன் மூலம் இலங்கை கடலில் 30 பேர் உதவி கேட்டு தத்தளித்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது.
இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய கடற்படை சென்று நடுக்கடலில் தத்தளித்த 30 பேரையும் தேடி கண்டுபிடித்து மீட்டது.
உலக அளவில் கடலில் தத்தளிப்பவர்களை செயற்கைகோள் உதவியுடன் கண்டுபிடித்து மீட்கும் நாடுகளில் இந்தியாவும் உறுப்பினராக உள்ளது. இதற்கான தகவல் தொடர்பு மையங்களை பெங்களூர் மற்றும் லக்னோவில் மத்திய அரசு நிறுவி உள்ளது. இதன் மூலம் கடலில் மட்டுமின்றி நாட்டின் எந்த பகுதியில் தத்தளிப்பவர்களையும் மீட்க முடியும்.