சுவீடன் தூதர் கோரிக்கை விடுதலைப்புலிகள் ஏற்க மறுப்பு
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. இதனை அடுத்து இலங்கையில் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவில் இடம் பெற்று இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம் பெற்றுள்ள டென்மார்க், பின்லாந்து, சுவீடன் நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என்று விடுதலைப்புலிகள் நிபந்தனை விதித்தனர். இதற்கு செப்டம்பர் 1-ந் தேதி வரை கெடு விதித்துள்ளனர்.
இந்த நிலையில் சுவீடன் நாட்டு தூதர் ஆண்ட்ரூஸ் ஒல்ஜிலுந்த் இலங்கை விரைந்தார். பின்னர் அவர் கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப்புலி இயக்கத்தினரை சந்தித்தார். கண்காணிப்பு குழு பிரதிநிதிகளை வாபஸ் பெற விதித்துள்ள கெடு பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க விடுதலைப்புலிகள் மறுத்து விட்டனர். அதே நேரத்தில் இலங்கை ராணுவம் தாக்குதலை நிறுத்தும்படி வலியுறுத்த வேண்டும் என தூதரிடம் விடுதலைப்புலிகள் தெரிவித்தனர்.
இது பற்றி விடுதலைப்புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் எஸ்.பி.தமிழ்செல்வன் கூறுகையில்,”இந்த பிரச்சினையில் எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை” என்றார். இந்த தகவலை விடுதலைப்புலிகள் இயக்க இணையதளம் வெளியிட்டுள்ளது.