எல்.ரீ.ரீ.ஈ. யினரின் பிடிவாதத்தினால் கண்காணிப்புக் குழு செயற்பாடற்றுப் போகும் அபாயம்!
எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தினரால் கண்காணிப்புக் குழவினருக்குரிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியாவிட்டால் அவர்கள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை என்றே அர்த்தமாகும் என்று கொழும்பிலுள்ள சுவீடன் தூதரகத்தின் பிரதித் தலைவர் லொட்டா ஜஹொட்சன் தெரிவித்துள்ளார்.
இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிலிருந்து ஜரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் அகற்றப்பட வேண்டுமென்ற தமது நிலைப்பாட்டில் மாற்றங்கள் எதுவும் இல்லை என்று புலிகள் மீண்டும் தெரிவித்துள்ளதையடுத்தே லொட்டா ஜஹொட்சன் இவ்வாறு கூறியுள்ளார்.
சுவீடனின் விசேட பிரதிநிதியான அன்றூ ஒல்ஜலன் கிளிநொச்சி சென்றிருந்த போதே புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ் செல்வன் தமது இந்த நிலைப்பாட்டை மீளவும் வலியுறுத்தியிருந்தார். ஜரோப்பிய ஒன்றிய நாடுகளின் உறுப்பினர்கள் அகற்றப்பட வேண்டுமென்ற புலிகளின் நிலைப்பாட்டில் மாற்றங்களை கோருவதற்காகவே சுவீடனின் பிரதிநிதி கிளிநொச்சிக்கு நேற்று பயணமாகியிருந்தார்.
யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் மொத்தமாக 57 பேர் கடமையாற்றுகின்றனர். இவர்களில் 37 பேர் ஜரோப்பிய நாடுகளின் பிரஜைகளாவர். புலிகள் கூறுவது போல் இந்த 37 பேரும் வெளியேறினால், கண்காணிப்புக் குழவின் செயற்பாடுகள் முடங்கி விடக்கூடிய நிலை தோன்றி விடக்கூடும் என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.