வெளிநாட்டிலிருந்து எப்படி? பிரபாகரனின் மனைவி, பிள்ளைகள் பாதுகாப்புடன் வன்னிக்குத் திரும்பினார்கள் தெரியுமா…?

Read Time:47 Minute, 13 Second

timthumb (1)விசேட அதிரடிப் படையின் (எஸ்.ரி.எப்- STF- Special Task Force ) முன்னாள் தளபதியான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமால் லூக்கா (Nimal Lewke) சிலோன் ருடே உடனான ஒரு பிரத்தியேக நேர்காணலில் முதல் தடவையாக, எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் உட்பட மிகவும் முக்கிய நபர்களாக கருதப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ குழுவினருக்கு எப்படி தானும் மற்றும் எஸ்.ரி.எப் பும் பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை வெளிப்படுத்தினார்.

வெளிநாட்டிலிருந்து எப்படி? பிரபாகரனின் மனைவி, பிள்ளைகள் பாதுகாப்புடன் வன்னிக்குத் திரும்பினார்கள் தெரியுமா?? (சுவாரஸ்யமான பேட்டி)

அவரது நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:….

கேள்வி: நீங்கள் எந்த இடத்தை சேர்ந்தவர்?

பதில்: கண்டி

கேள்வி: உங்கள் பெற்றோர்?

பதில்: எனது தந்தை சிரோன் லூக்கா தொழிலால் ஒரு மருத்தவர். எனது தாய் மெத மகநுவரவில் உள்ள உடுக்காவெல வளவை சேர்ந்த ஒரு பண்டாரநாயக்கா. ஐந்து பேர் உள்ள குடும்பத்தில் நான்தான் இளையவன்.

கேள்வி: உங்கள் பாடசாலை?

பதில்: நான் புனித சில்வேஸ்டர் கல்லூரியில் படித்தேன் மற்றும் பாடசாலைக்காக கிரிக்கட்டும் விளையாடி உள்ளேன். நான் மத்திய மாகாண கிரிக்கட் குழுவில் ஒரு அங்கத்தவனாகவும் இருந்துள்ளேன்.

கண்டி குழுவுக்காக றக்பியும் விளையாடி உள்ளேன். பின்னர் நான் தேசிய றக்பி குழுவில் விளையாடியதுடன் தேசிய பயிற்சியாளனாகவும் பணியாற்றி உள்ளேன். ஆசிய றக்பி சங்கத்தின் தலைவராகவும் நான் பணியாற்றி உள்ளேன்.

கேள்வி: நிங்கள் ஒரு குத்துச்சண்டை வீரரா?

பதில்: அம். பாடசாலை விளையாட்டு வீரனாக இருந்தபோது குத்துச் சண்டையில் நான் தேசிய சாம்பியனாக தெரிவானேன் மற்றும் சர்வதேச போட்டிகளில் நான் ஸ்ரீலங்காவை பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளேன்.கேள்வி: உங்கள் உடன்பிறப்புகள்?

பதில்: எனது மூத்த சகோதரி ஒரு பாடசாலை அதிபர். மற்ற இரண்டு சகோதரிகளும் கூட பட்டதாரிகள் தான். எனது சகோதரர் மக்கள் வங்கியின் ஒரு ஓய்வுபெற்ற பொது முகாமையாளர்.

கேள்வி: பாடசாலையை விட்டு விலகியதின் பின்னர் நிங்கள் என்ன செய்தீர்கள்.

பதில்: 1972ல் நான் பாடசாலையை விட்டு விலகியதுமே காவல்துறையில் ஒரு காவல்துறை கண்காணிப்பாளராக (ஐபி) இணைந்து கொண்டேன். நான் விளையாட்டு துறையில் ஈடுபட்டிருந்ததால் கொழும்பிலேயே நிலை கொண்டிருந்தேன்.

நான் ஒரு காவல்துறை உத்தியோகத்தராக பயிற்சி பெறும் போது, திரு. ற்றிரில் குணதிலக எங்களை நேர்காணல் செய்தார் மற்றும் எங்களில் ஏழுபேர் மூன்று வருடங்களின் பின்னர் குற்றவியல் புலனாய்வு பிரிவுக்கு (சி.ஐ.டி) நியமிக்கப்பட்டோம்.

பலவருட சேவைக்குப் பின்னர் நான் துப்பாக்கிகளைப் பயன்படுத்தவது பற்றி இங்கிலாந்தில் சிறப்பு பயிற்சி பெற்றேன்.

கேள்வி: அது எந்த வருடம்?

பதில்: ம்ம்ம்…., நான் 1982ல் திருமணம் செய்தேன் மற்றும் 1983ல் நான் இங்கிலாந்துக்கு சென்றேன். நான் 1984 ஆகஸ்ட்டில் எஸ்.ரி.எப்பில் இணைந்தேன்.

கேள்வி: நீங்கள் யாரைத் திருமணம் செய்தீர்கள்?

பதில்: எனது தலைவர் எஸ்.எல். சில்வாவின் மகளை. அவர் ஆனந்தாக் கல்லூரியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இருந்துள்ளார்.

எனது மனைவி கிறிசாந்தி லூக்கா. எனக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். எனது மகன் ஒரு றோயல் கல்லூரி மாணவனாக ஸ்ரீலங்கா றக்பி குழுவை பிரதிநிதித்துவம் செய்கிறார்.

எனது மகள் ஒரு வழக்கறிஞர், அவரது முதுநிலை பட்டப்படிப்பை கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொடருகிறார். அவர் டயலொக் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். எனது மனைவி விசாகா பாலர் பாடசாலையின் அதிபர்.

கேள்வி: எஸ்.ரி.எப் (STF) பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்: அது முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் மகனான ரவி ஜெயவர்தனாவால் ஆரம்பிக்கப்பட்டது.

ஒவ்வொரு வார இறுதியிலும் களுத்துறை காவல்துறை பயிற்சிக் கல்லூரிக்கு எனது குறிபார்த்து சுடும் பயிற்சிக்காக நான் செல்வேன்.

ரவி ஜெயவர்தனாவும் கூட அங்கு வருவார். அவர் ஒரு அடக்கமான மனிதர், அவர் எங்களுடன் ஒரே வாகனத்தில் பயணம் செய்வார் மற்றும் வீதியோரத்தில் உள்ள எந்த உணவு விடுதியிலும் உணவு உண்பார்.

அப்போது எஸ்.ரி.எப் தலைவராக இருந்த சேர்ணி விஜேசூரியாவின் இடத்தில் நிற்பதை நாங்கள் தேர்வு செய்வோம்.

ஒருநாள் குறிபார்த்து சுடும் பயிற்சிக்கு முன்பாக நான் எனது துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தேன்.

அப்போது அவர் தாங்கள் எஸ்.ரி.எப் பிற்கு பயிற்சி அளித்து வருவதாகவும் அதற்கு பொறுப்பான ஒரு உத்தியோகத்தரை தேடி வருவதாக என்னிடம் சொன்னார்.

குறிபார்த்து சுடுவதற்காக ரவி ஜெயவர்தனா எனது அருகே நின்று கொண்டிருந்த போது, நான் எஸ்.ரி.எப் இல் இணைவதற்கு முடிவு செய்திருப்பதையிட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகச் சொன்னார்.

ஆனால் நான் அதுபற்றி இன்னமும் ஒன்றும் சொல்லவில்லையே என்று அவருக்கு பதிலளித்தேன்.

கேள்வி: ஏன் நீங்கள் உங்கள் சம்மதத்தை உடனடியாக வழங்கவில்லை?

பதில்: அப்போது எனது மனைவிக்கு 22 வயது எனது மகன் வெறும் ஆறுமாதக் குழந்தையாக இருந்தான். நான் திரு.ரவி ஜெயவாதனாவிடம் அவர்களைப் பற்றி சொல்லியிருந்தேன்.

“அவர்களைப் பார்த்துக் கொள்வோம், உங்களைப் போன்ற ஒருவரைத் தான் நாங்கள் தேடுகிறோம்” என்று அவர் சொன்னார்.

வீட்டில் இதைப்பற்றி நான் எனது மனைவியிடம் சொன்னபோது, ஒரு அதிசயமான சம்பவம் நடந்தது. அரை மணி நேரத்தின் பின் தரைப்படை காவல்துறை தளபதி என்னை அழைத்து உடனடியாக என்னை பணிக்கு வரும்படி கூறினார்.

இரத்மலானைக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்ட நான்கு எஸ்.ரி.எப் வீரர்களின் உடலைப் பொறுப்பேற்கும்படி அவர் எனக்கு கட்டளையிட்டார்.

அவர்கள் சம்பளப் பணத்தை கொண்டு வந்த வாகனம் யாழ்ப்பாணம் திக்கம் பகுதியில் வைத்து கண்ணிவெடியில் அகப்பட்டதினால் அவர்கள் மரணமடைந்தார்கள்.

தற்போதைய பொலிஸ் மா அதிபர் இலங்ககோன் அவாகள் அப்போது வல்வெட்டித்துறை எஸ்.ரி.எப்பில் இருந்தார். அது நான் வீட்டில் எஸ்.ரி.எப் பற்றிப் பேசிய அரை மணி நேரத்திற்குள் நடந்தது.

கேள்வி: இந்த கெட்ட சகுனத்தையும் பொருட்படுத்தாது நீங்கள் எஸ்.ரி.எப்பில் இணைந்தீர்களா?

பதில்: ஆம். ஓமானில் பணியாற்றிய பிரித்தானியாவின் முன்னாள் எஸ்.ஏ.எஸ் உத்தியோகத்தர்களைக் கொண்ட கினி மினி சேவை எங்களுக்கு பயிற்சி வழங்கியது.

ஓமானில் இருந்த காவல்துறை தலைவர் ஒரு ஸ்ரீலங்காவாசியும் மற்றும் ரவி ஜெயவர்தனாவின் நண்பரும் ஆவார். எஸ்.ரி.எப் நிறுவப்பட்டதும், காவல்துறையில் இருந்து ஒரு நிபுணத்துவம் வாய்ந்த படையை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தை ரவி ஜெயவர்தனா கொண்டிருந்தார்.

இது காலாட்படை வீரர்களின் யுத்தம், சிறிய அளவிலான கெரில்லா போர் அதனால் கெரில்லா யுத்தத்தில் பயிற்சி பெற்ற நிபுணத்துவம் பெற்ற படை அவசியம் என அவர் சொன்னார். பின் திரும்பி பார்க்கும் போது அது ஒரு மைல் கல்லான முடிவாகவே தெரிகிறது.

கேள்வி: அது 1984ல் நடந்ததா?

பதில்: ஆம். தற்போதைய பொலிஸ் மா அதிபர் இலங்ககோன் மற்றும் நான் ஆகியோர் தான் கிழக்கிற்குச் சென்ற முதல் எஸ்.ரி.எப் உத்தியோகத்தர்கள். அவர் கல்லடி முகாமின் தலைவராகவும் நான் களுவாஞ்சிக்குடி முகாமின் தலைவராகவும் இருந்தோம்.

எங்களிடம் இரண்டு முகாம்கள் மட்டுமே இருந்தன மற்றும் நாங்கள் இராணுவத்திடம் இருந்து முழு மாகாணத்தையும் பொறுப்பேற்றுக் கொண்டோம்.

அப்போதிருந்த சூழ்நிலையை விளங்கிக் கொள்ள வேண்டியவர்களாக நாங்கள் இருந்தோம். சிறிய பயங்கரவாத குழுக்கள் அப்போது இருந்தன.

புளொட்டுக்கு உமா மகேஸ்வரன் தலைமை தாங்கினார். ரெலோவுக்கு சிறீ சபாரத்னம் தலைவராகவும், ஈபிஆர்எல்எப் தலைவராக பத்மநாபாவும் மற்றும் ஈரோஸ் அமைப்புக்கு இளையதம்பி ரட்னசபாபதி தலைவராகவும் இருந்தார்கள்.

ரவி ஜெயவர்தனாவின் திட்டம் விசேட படையினரை கெரில்லாப் போரில் ஈடுபடுத்தும் விதத்தில் பயிற்றுவிப்பதாக இருந்தது.

இராணுவம் அத்தகைய போர்முறையில் பயிற்சி பெற்றதாக இருக்கவில்லை. அவர்கள் நேருக்கு நேராக யுத்தம் செய்யத் தயாராக இருந்தார்கள்.

நான் கிழக்குக்கு செல்வதற்கு முன்னர் லோங்டன் பிளேசில் இருந்த குற்றவியல் ஆவணப் பிரிவுக்கு(சி.ஆர்.டி) சென்றிருந்தேன்.

அங்கு பதிவு செய்யப்பட்டிருந்த அனைத்து பயங்கரவாதிகளின் புகைப்படங்களையும் தரும்படி நான் கேட்டேன். சி.ஆர்.டி யின் பணிப்பாளராக இருந்த பி.வி.டபிள்யு சில்வா, விக்டர் ஒஸ்கார், நித்தியானந்தா, டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களின் புகைப்படங்களை எனக்குத் தந்தார்.

பின்னர் நான் முன்பு பணியாற்றி குற்றவியல் புலனாய்வு பிரிவுக்கு (சி.ஐ.டி) சென்றேன். பயங்கரவாத எதிர்ப்பு பிரிவிற்கு அப்போது சிசிர மென்டிஸ் என்பவர் தான் பொறுப்பான உத்தியோகத்தராக இருந்தார்.

பின்னர் அவர் ஒரு பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றார். அவரிடமிருந்து பயங்கரவாதம் தொடர்பான செய்தித் தொகுப்புகளை நான் பெற்றுக் கொண்டேன்.

நாங்கள் மட்டக்களப்புக்குச் சென்றபோது ஈபிஆர்எல்எப் தான் அங்கு வலுவாக இருந்தது எல்.ரீ.ரீ.ஈ அல்ல. மட்டக்களப்பு பகுதிக்கான ஈபிஆர்எல்எப் தலைவராக சிவலிங்கம் இருந்தார்.

டக்ளஸ் தேவானந்தா மண்டூரில் மறைந்திருந்தார். அங்கு புளொட், ஈரோஸ் என்பனவும் மற்றும் அங்கு செல்லப்பா நாகராசா தலைமையில் முதன்முதலாக கண்ணிவெடியை பயன்படுத்திய மற்றொரு அமைப்பான தமிழ் மக்கள் படைப்பகம் என்கிற அமைப்பும் இருந்தன.

கேள்வி: நீங்கள் கிழக்குக்குச் செல்லும்போது அங்கத்தைய நிலமை பற்றி நல்ல அறிவை பெற்றுக் கொண்டு தான் சென்றதாகவா கூறுகிறீர்கள்?

பதில்: மிகச் சரியாகச் சொன்னீர்கள். என்னுடன் சென்ற எல்லா அதிகாரிகளுக்கும் நான் அறிந்வற்றை தெரிவித்திருந்தேன். எல்லா தமிழர்களுமே பயங்கரவாதிகள் என்று நாங்கள் ஒருபோதும் கருதவில்லை.

மக்களிடையே பயங்கரவாதிகளை நாங்கள் வேட்டையாடினோம். எட்டுப் பேரைக் கொண்ட எங்கள் சிறிய குழுவுக்கு எங்களின் கருத்து அறிமுகப் படுத்தப்பட்டது, பின்னர் அது ஏனைய படைகளினால் பின்பற்றப்பட்டது.

கேள்வி: முதலில் நீங்கள் களுவாஞ்சிக்குடியில் தான் நிலை கொண்டிருந்தீர்களா?

பதில்: நாங்கள் நீர்ப்பாசன திணைக்களத்துக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தில் நிலை கொண்டிருந்தோம், களுவாஞ்சிக் குடி காவல்துறையினர் எங்களுக்கு முன்னால் இருந்தார்கள்.

எங்களது முன் வேலியை நாங்கள் கட்டிக் கொண்டிருந்த போது, 6 மணியளவில் காவல்துறை பொறுப்பதிகாரியின் வாகனம் அங்கிருந்து புறப்படுவதை நான் கண்டேன். உடனடியாகவே நாங்கள் ஒரு பெரிய சத்தத்தை கேட்டோம். காவல் நிலையத்தில் அதுபற்றி நாங்கள் விசாரித்தோம்.

“சேர், எங்களது ஓ.ஐ.சி கொக்கட்டிச்சோலைக்கு சென்றுள்ளார். அங்கு ஏதாவது குழப்பங்கள் நடந்திருக்குமோ என நாங்கள் பயப்படுகிறோம்” என அங்குள்ள அலுவலர்கள் தெரிவித்தார்கள்.

அது எங்களின் இரண்டாவது நாள் மற்றும் நாங்கள் எங்கள் முகாமைக் கட்டிக் கொண்டிருக்கிறோம். கொக்கட்டிச்சோலை எங்கிருக்கிறது என்பது தெரியாததால், அங்கு போவதற்கு எங்களுடன் யாராவது உடன் வரும்படி நாங்கள் கேட்டுக் கொண்டோம்.

கொக்கட்டிச்சோலைக்கு செல்லும் வழியில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் ஓ.ஐ.சி மசாம்ஜாவும் ஏனைய அலுவலர்களும் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டோம், அவர்களின் வாகனம் ஒரு கண்ணிவெடியில் அகப்பட்டிருந்தது. அத்தகைய ஒரு கொடூரமான ஒரு காட்சியை நான் கண்டது அதுதான் முதல்தடவை.

கேள்வி: அப்போது அறிவிக்கப் பட்டதின்படி நீங்கள் மொசாட்டிடம் பயிற்சி பெற்றீர்களா?

பதில்: ஆம். முதலில் நான் இங்கு மூன்று வருடங்கள் பயிற்சி பெற்றேன். பின்னர் நான் இஸ்ராயேலில் அந்த மொசாட் பயிற்சியை பெற்றேன்.

எங்களுக்கு விசேடமாக வெடிமருந்துகள் பற்றி பயிற்சி வழங்கப்பட்டது. நான் இஸ்ராயேல் மற்றும் அமெரிக்காவில் விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விசேட பயிற்சியை பெற்றுள்ளேன்.

கேள்வி: மொசாட் எல்.ரீ.ரீ.ஈக்கும் பயிற்சி அளித்துள்ளது என்பது உண்மையா?

பதில்: இல்லை அது தவறான ஒரு யோசனை அது தமிழ் புலம் பெயாந்தவர்களால் பரப்பப்பட்டது. எனக்குத் தெரிந்தவரை இஸ்ராயேல் பயங்கரவாதிகளுக்கு பயிற்சிகளை அளிப்பதில்லை. அந்தப் பயிற்சி மிகவும் கடினமானது.

இது பிரித்தானிய பயிற்சியைப் போன்றதல்ல. அவர்கள் எங்களுக்கு காலை 7 மணிமுதல் 10 மணிவரை பயிற்சி தருவார்கள்.

திரும்பவும் பயிற்சி அடுத்த நாள் காலை 7 மணிக்கு ஆரம்பிக்கும். அந்தப் பயிற்சியின் உத்தியின்படி அது பாரிய உளவியல் மற்றும் உடல் ரீதியான அழுத்தங்களின் கீழ் வழங்கப்படுவது என்று நான் நினைக்கிறேன்.

வெடிபொருட்களைப் பற்றிய எங்கள் அறிவின் காரணமாக பயங்கரவாதிகள் செயற்படும் பிரதேசங்களில் எஸ்.ரி.எப் இனால் பலத்துடன் இருக்க முடிந்தது. பயங்கரவாதிகள் கண்ணிவெடிகள், அழுத்தவெடிகள், பக்கவெடிகள் போன்றவற்றை பயன்படுத்தினார்கள்.

ஒருநாள் இரண்டு குழுக்களாகக் காட்டில் தேடுதல் செயற்பாட்டை மேற்கொண்டிருந்த போது, மற்றைய குழுவின் தலைவர் வானொலி மூலமாக தாங்கள் மாட்டுடன் கூடிய ஒரு வண்டிலை கண்டிருப்பதாக என்னிடம் தெரிவித்தார்.

நான் அவரிடம் அதைத் தொட வேண்டாம் என்றும் தூரத்தில் இருந்தபடியே கயிறு மற்றும் கொக்கியை பாவித்து அதை இழுக்கும்படியும் கூறினேன்.

சில நிமிடங்களுக்குப் பிறகு காட்டினுள் ஒரு பயங்கர வெடி ஓசையை நாங்கள் கேட்டோம். அது தொட்டவுடனே வெடிக்கும் ஒரு பொறி.

நான் கண்ணாடிக்கு கீழ் வைத்திருக்கும் இந்த புகைப்படத்தை பாருங்கள். இதுதான் முதன்முதலாக தானியங்கியாக வெடிக்கும் கண்ணிவெடிக்கு வேண்டி தயாரிக்கப்பட்ட குழி. 1987ல் வெல்லாவெளியில் எங்கள் பபல் வாகனங்களில் ஒன்று அதில் சிக்கிக் கொண்டது.

கேள்வி: எஸ்.ரி.எப் சீருடைகளுக்கு உருமறைப்பு தன்மையை அறிமுகப்படுத்தியது யார்?

பதில்: அது பிரித்தானியர்களால் முன்மொழியப்பட்டது. அவர்களின் எஸ்.எஸ்.ஏ யும் இதே நிறத்திலான உடைகளையே அணிந்தார்கள்.

கிழக்கில் நடந்த யுத்தம் நேருக்கு நேரான ஒரு யுத்தம் அல்ல, ஆனால் அது மூளையை பயன்படுத்திய ஒரு யுத்தம். நாங்கள் எதிரிகளின் உத்திகளை அடையாளம் கண்டு அவர்களை கவனமாக பிடிக்க வேண்டி இருந்தது.

கேள்வி: எல்.ரீ.ரீ.ஈ க்கு இராணுவ திறன்களை யார் வழங்கியிருக்க முடியும்?

பதில்: அனைத்து தீவிரவாதக்குழுக்களுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினாலேயே பயிற்சி வழங்கப்பட்டது. ஈரோஸ் தான் முதன்முதலாக ஸ்ரீலங்காவில் வெடிபொருட்களைப் பயன்படுத்தியது.

வெடிமருந்துகளை பயன்படுத்துவதில் ஈரோசுக்கு நல்ல அறிவு இருந்தது. சபாரட்னம், பத்மநாபா போன்றவர்கள் படித்தவர்கள். உமா மகேஸ்வரன் ஒரு நில அளவையாளர்.

கேள்வி: எல்.ரீ.ரீ.ஈ கிழக்கில் அதிகாரத்தைப் பிடிக்க எஸ்.ரி.எப் நீண்ட காலமாக அனுமதிக்கவில்லை என்றா நீங்கள் அர்த்தப் படுத்துகிறீர்கள்?

பதில்: எங்கள் உத்தியானது அவர்களை காட்டுக்குள் தள்ளும் அதேவேளை நாங்கள் மக்களின் மத்தியில் இருப்பது என்பதாக இருந்தது.

பயங்கரவாதிகள் மற்றும் மக்கள் ஆகியோருக்கு இடையில் நிலத்தை நாங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். அவர்களை வேட்டையாடுவதற்காக நாங்கள் எங்கள் பகுதிக்கு வெளியே சென்றோம். எல்.ரீ.ரீ.ஈ ஒரு பகுதியை பிடித்து வைத்திருப்பதற்கு நாங்கள் விடவில்லை.

கேள்வி: கிழக்கில் கருணாஅம்மான் ஒரு தலைவராக இருந்தாரா?

பதில்: அவர் வெளியே வர முடியாதபடி காட்டுக்குள் பதுங்கியிருந்தார். என்னுடன் விவாதத்துக்கு வரும்படி அவரிடம் கேளுங்கள்.

சி.ஐ.டியின் பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன அப்போது என்னுடன் இருந்தார். சிவப்பு அம்பு எனும் நடவடிக்கையின் போது நாங்கள் அவரைச் சுட்டோம்.

கொழும்பிலிருந்து கமான்டர் கருணசேன, கருணா சுடப்பட்டுள்ளார் மற்றும் அவர் ஒளிவில் சென்றிருக்கலாம் ஏனையோர் பின்வாங்கி விட்டார்கள் என என்னிடம் தெரிவித்தார்.

அன்றைய தினம் எங்களால் அவரைப் பிடிக்க முடியவில்லை. தனக்கு முதுகில் சூடு பட்டதை பின்னாளில் அவர் ஏற்றுக் கொண்டார்.

அவர்கள் சொல்வதைப் போல கருணாவுக்கு அதிக பலம் இருக்கவில்லை. யுத்தநிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னரே அவர்கள் ஒரு வலிமையான நிலையைப் பெற்றார்கள்.

அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அவர்கள் காட்டை விட்டு வெளியில் வந்தார்கள். நாங்கள் காட்டினுள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

கிழக்கில் அவர்களின் சரிவுக்கு பிரதான காரணம் எஸ்.ரி.எப். அதற்கான முக்கிய காரணமாக இருந்தது என்னவென்றால் ரவி ஜெயவர்தனா இப்படியான ஒரு படையை உருவாக்கியது தான்.

கேள்வி: எஸ்.ரி.எப் இனது பிரதான செயற்பாடு எதுவும் உங்களுக்கு ஞ}பகம் உள்ளதா?

பதில்: 1984ல் இருந்தே அதில் பணியாற்ற உத்தியோகத்தர் என்கிற வகையில், கஞ்சிகுடிஆறு பகுதியில் பயங்கரவாதிகளின் நான்கு எட்டு தளத்தை கைப்பற்றியதை என்னால் சொல்ல முடியும். (ஒரு புகைப்படத்தை காண்பிக்கிறார்) இந்தப் புகைப்படம் அந்த முகாமைக் கைப்பற்றிய அன்று எடுக்கப்பட்டது.

இது நீல்டயஸ். நாங்கள் முழு நாளும் காட்டுக்குள்ளேயே இருந்தோம் மற்றும் நாங்கள் நீரின்றி உலர்ந்து போய்க் கொண்டிருந்தோம்.

நான் நீல்டயசுக்கு வானொலியில் அறிவித்த போது அவர் உலங்கு வானூர்தியில் தண்ணீர் கொண்டு வந்தார். எல்.ரீ.ரீ.ஈ யினது பேக்கரி அங்கிருந்ததால், அது பேக்கரி முகாம் என்றும் அழைக்கப்பட்டது. அது ஒரு பயிற்சி முகாமும் கூட. நாங்கள் அதைக் கைப்பற்றினோம்.

1987ல் பெய்ரூட் முகாமையும் எனது தலைமையின் கீழ் கைப்பற்றினோம். அந்த முகாம் குமார் அப்பன் தலைமையின் கீழ் இயங்கியது.

கருணா அம்மான் மயிலவெட்டானில் உள்ள நாலஆறு முகாமில் இருந்தார். நாங்கள் இந்த மூன்று முகாம்களையும் ஆக்கிரமித்தோம்.

அந்த நடவடிக்கைகளுக்கு நான் தலைமை தாங்கினேன். எமது தரப்பினர் காயமடைந்தார்கள் ஆனால் யாரும் இறக்கவில்லை. கொக்கட்டிச்சோலையில் இருந்த பெய்ரூட் முகாமுக்காக நடந்த சண்டையில் எங்கள் பபல் வாகனங்களில் ஒன்று கண்ணிவெடியால் தாக்கப்பட்டதில் 13 பேர்கள் இறந்தார்கள்.

அது 1987 ஏப்ரல் 27ல் நடந்தது. வெளிநாட்டவர்களால் இயக்கப்பட்ட ஐந்து உலங்கு வானூர்திகளில் நாங்கள் அங்கு சென்று இறங்கினோம்.

கப்டன் நிமால் பெனாண்டோ எனது உலங்கு வானூர்தியின் துணை விமானஓட்டியாக இருந்தார், அதுதான் முதலில் இறங்கியது.

தற்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப் இரண்டாவது உலங்கு வானூர்தியில் இருந்தார். அவர் ஒரு துணிச்சலான போராளி.

நாங்கள் இறங்கிய சமயம் குமார் அப்பன் ஒரு வாகனத்தில் வந்தார். நாங்கள் அதைக் கண்டோம் ஆனால் வெள்ளைக்கார விமானியால் நாங்கள் சொன்னதை புரிந்து கொள்ள முடியவில்லை.

நாங்கள் இறங்கும் போது அவர்கள் சுட்டார்கள். பி.சி 6300 சுடப்பட்டது. உதவிப் பொலிஸ் பரிசோதகராக இருந்த தேஸ்டன் கல்லூரியின் கிறிக்கட் குழு தலைவர் அஜித் அல்விஸின் தலையில் சூடு பட்டு அவர் இறந்து போனார்.

கொக்கட்டிச்சோலை ஒரு சிறிய தீவைப் போன்றது. அது சின்ன யாழ்ப்பாணம் என்று அழைக்கப்பட்டது. அங்கு நாங்கள் ஒரு பிரதான புலி முகாமைக் கைப்பற்றினோம்.

நாங்கள் மூன்று குழுவினரை பபல் வாகனத்தில் தரைவழியாக வரும்படி ஏற்பாடு செய்திருந்தோம். அதிகாலை 5.30 மணியளவில் அதில் ஒன்று கண்ணிவெடி தாக்குதலுக்கு இலக்கானது.

கேள்வி: இந்திய இராணுவம் கிழக்கில் எப்படிச் செயற்பட்டது?

பதில்: அவர்கள் வந்தபோது எங்களை கொழும்புக்கு அழைத்துச் செல்லுமாறு நான் எங்கள் தளபதியிடம் முறையிட்டேன். விஐபி க்களின் பாதுகாப்புச் சேவையில் நான் இணைந்து கொண்டேன்.

அங்கிருந்த 600 காவல்துறையினரையும் எல்.ரீ.ரீ.ஈ கொன்றது மற்றும் கட்டளை தளபதி எங்களைத் திரும்பி வரும்படி சொன்னார்.

கேள்வி: அப்போது யார் தளபதியாக இருந்தார்?

பதில்: லயனல் கருணசேன. ஒரு காவல்துறை குழுவினர் அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர் எங்களால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவர் சொன்னார்.

கேள்வி: நீங்கள் திரும்பினீர்களா?

பதில்: ஆம். நாங்கள் சிறுசிறு குழுக்களாக அமைத்துக்கொண்டு காடுகளுக்குள் சென்றோம். உதய குமார என்னுடன் இருந்தார். ரூபாஸ் குளம் காட்டுக்குள் வைத்து ஓரிடத்தில் 295 காவல்துறையினர் கொல்லப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம்.

அவர்கள் கொல்லப்பட்டதின் பின்னர் ஆங்கில எழுத்தான எல் வடிவத்தில் கட்டப்பட்டு கீழே கிடப்பதைக் கண்டோம். அவர்களின் கைகள் தும்புக் கயிறுகளால் பின்னால் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன.

ஒருவர் காட்டுக்குள் உருண்டு போயிருந்த போதும் அவரும் கூட சுடப்பட்டிருந்தார். நான் இந்த உடல்களைக் கண்டேன். நான் மிகவும் நெருங்கிப் பழகிய கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லயனல் பொத்தேஜூவும் அவர்கள் மத்தியில் காணப்பட்டார்.

அவர் புனித அந்தோனியார் கல்லூரியின் திறமையான விளையாட்டு வீரர், 400 மீற்றர் ஓட்டத்தில் சாதனை பதித்தவர். அவர் எங்களுக்கு மூத்த அதிகாரி. அவரது சீருந்துவும் காட்டுக்குள் காணப்பட்டது.

காவல்துறை உத்தியோகத்தர்கள் அனைவரையும் மேகலா திரையரங்கில் கூடச்செய்து லொறிகள் மற்றும் பேரூந்துகளில் ஏற்றி காட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவாகள் கரங்கள் கட்டப்பட்டு கொல்லப்பட்டார்கள். அப்போது தலைவராக இருந்தவர் கருணா தான், அவரால் அதை மறுக்க முடியாது.

கேள்வி: கருணாதான் அதற்கான கட்டளையை பிறப்பித்தாரா?

பதில்: அவருக்கு அது தெரியும். அவர் இப்போது ஒன்றும் தெரியாத ஒரு குழந்தையை போல நடிக்கிறார்.

ஒரு நாள் நான் ஓடல்வளைவை கடந்து சென்று கொண்டிருந்த போது, ஒரு வாகனத்துக்கு எஸ்.ரி.எப் முன்னாலும் பின்னாலும் பாதுகாப்பு வழங்கியபடி அழைத்துச் சென்று கொண்டிருந்தது.

நான் எனது பாதையில் சரியாக வாகனத்தை ஓட்டிச் சென்ற போதும் என்னை விலகிச் செல்லும்படி அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அவர்கள் யாருக்கு பாதுகாப்பு வழங்குகிறார்கள் என்று நான் பார்த்தேன். அது கருணாஅம்மான். ஆட்களுக்கு என்னவெல்லாம் நடக்கிறது என்று பாருங்கள்.

கேள்வி: அந்த 295 காவல்துறையினரும் யார்?

பதில்: அவர்கள்; கல்முனை, அக்கரைப்பற்று, மற்றும் திருக்கோவில், மட்டக்களப்பு தெற்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களைப்பற்றி எந்த விசாரணையும் மேற்கொள்ளப் படவில்லை.

கேள்வி: அது விசாரிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: மிகச் சரியாகச் சொன்னீர்கள். அந்த அதிகாரிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்களை யுத்த வீரர்கள் என்று பெயரிட்டு அவர்களுக்கு நினைவுச்சின்னம் எழுப்பினால் மட்டும் போதாது.

ஒரு யுத்த வீரனாவதற்கு ஒருவர் மரணமடைந்து, காயம்பட்டு அல்லது அங்கவீனமடைந்து தான் இருக்கவேண்டுமா? என்னுடன் இருந்த பலபேர் யுத்தத்தில் இறந்துபோனார்கள். நான் வெறுமே எனது அனுபவத்தை தான் சொல்கிறேன், எனக்கு மதிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை.

கேள்வி: விஐபிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் நீங்கள் ஒரு நிபுணரா?

பதில்: 1988ல் பாராளுமன்றத்தில் குண்டுத் தாக்குதல் நடைபெற்றதின் பின்னர் ஜனாதிபதியின் பாதுகாப்பு பணியில் நான் அமர்த்தப்பட்டேன்.

அது ஜேவிபி மற்றும் எல்.ரீ.ரீ.ஈ ஆகிய இரண்டுமே வலிமை பெற்றிருந்த காலம். இரண்டுமே விஐபிக்களை கொல்வதை இலக்காகக் கொண்டிருந்தன.

ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக இளம் அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவை நான் தேர்வு செய்திருந்தேன். நாங்கள் ஜனாதிபதியின் நெருங்கிய பாதுகாப்பை கையாண்ட அதேவேளை திரு.சுமித் சில்வாவின் கீழிருந்த ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவும் செயற்பட்டு வந்தது. அந்த விஐபி பிரிவிற்கு நான்தான் தலைமை தாங்கினேன்.

கேள்வி: அதன்பின் என்ன நடந்தது?

பதில்: ஜனாதிபதி பிரேமதாஸ கொல்லப்பட்டதின் பின்னர் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்காவின் பாதுகாப்புக்காக திரும்பவும் எஸ்.ரி.எப் கொண்டு வரப்பட்டது.

அப்போது நான் அதன் பணிப்பாளராக இருந்தேன். எஸ்.ரி.எப் யுத்தத்திற்காக மட்டுமல்லாது விஐபிக்களின் பாதுகாப்புக்காகவும் பயிற்றப்பட்டது. பொருளாதார மூல நாடிகளான இடங்களை எஸ்.ரி.எப் பாதுகாத்து வந்தது.

அதற்கான பாதுகாப்பை நான் திட்டமிட்டேன். நாங்கள் பாராளுமன்றம், விமானநிலையம், சப்புக்கஸ்கந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் போன்றவற்றுக்கான பாதுகாப்பு திட்டத்தை தயாரித்தோம்.

கேள்வி: எஸ்.ரி.எப் இற்கு ஏன் அத்தகைய பொறுப்புகள் தரப்பட்டன?

பதில்: அதற்கான முதலாவது காரணம் பயிற்சி. இரண்டாவது ஒழுங்கு. மூன்றாவது காரணி அர்ப்பணிப்பு. நாங்கள் இன்னும் அதனைக் கொண்டிருக்கிறோம். ஏனைய படையினர் யுத்த வீரர்களாக கௌரவிக்கப் படுகிறார்கள் மற்றும் இராஜதந்திர பதவிகள் போன்றவை வழங்கப் படுகின்றன.

எஸ்.ரி.எப் இற்கு ஏன் அத்தகைய சலுகைகள் வழங்கப்படுவதில்லை? ஆனால் இன்னும் ஏதாவது அவசரத்தின் போது எஸ்.ரி.எப் இன் சேவை அவர்களுக்கு தேவையாக உள்ளது.

கடந்த பத்து வருடங்களாக எஸ்.ரி.எப் இற்கு உரிய முக்கியத்துவம்; தரப்படவில்லை. எனக்கு அரசியல் கிடையாது. அதனால் நான் நேரடியாகவே அப்படிச் சொல்கிறேன்.

தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தங்கள் பாதுகாப்புக்காக எஸ்.ரி.எப் இனை பணிக்கு அமர்த்தி உள்ளதில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் எஸ்.ரி.எப் ஏன் பாராட்டப் படவில்லை?. அது நல்லதல்ல.

கேள்வி: ஜனாதிபதி பிரேமதாஸ எல்.ரீ.ரீ.ஈ உடன் பேச்சுக்களை நடத்திய போது, உங்களுக்கு விசேட பொறுப்புகள் வழங்கப்பட்டதாக நாங்கள் கேள்விப்பட்டோம்

பதில்: 1990 ல் நான் மட்டக்களப்பில் இருந்தேன் மற்றும் தளபதி லயனல் கருணசேனவினால் நான் உடனடியாக அழைக்கப்பட்டேன். தலைமையகத்தில் அவரை நான் சந்தித்தேன்.

“நிமால், எங்களுக்கு ஒரு விசேட கடமை உள்ளது”

“அது என்ன ஐயா”

“ஜனாதிபதியுடன் ஒரு எல்.ரீ.ரீ.ஈ குழு கலந்துரையாட வருகிறது. நாங்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்”

நான் எதுவும் பேசவில்லை…

“அந்தப் பொறுப்பை நீங்கள் தான் ஏற்கவேண்டும்” என்று அவர் சொன்னார்

“ ஐயா, அதை நான் எப்படிச் செய்ய முடியும்?”

“ஏன்?”

“எங்களிடையே பிரச்சினைகள் உள்ளன”

“ஆனால் நீங்கள் கட்டாயம் இதைச் செய்ய வேண்டும்”

“ஐயா தயவுசெய்து எஸ்.ரி.எப் இனை இதில் சேர்க்க வேண்டாம்”

“நிமால் இதைப் புரிந்து கொள். நாங்கள் இல்லை, எல்.ரீ.ரீ.ஈதான் இதைக் கேட்கிறது. தங்கள் உயிர்களைப் பாதுகாக்க எஸ்.ரி.எப் இனை மட்டுமே நம்ப முடியும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

தங்களுக்கு எஸ்.ரி.எப் பாதுகாப்பு வழங்கினால் மட்டுமே அவர்கள் கலந்துரையாடல்களுக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளார்கள், ஆதலால் எப்படியாவது நாங்கள் இதைச் செய்ய வேண்டும்”

நான் எனது தனிப்பட்ட வெறுப்பை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு அந்தக் கடமையை ஏற்க வேண்டியவனானேன்.

கேள்வி: அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?

பதில்: அவர்கள் சுவீடனில் இருந்து வந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்களில் அன்ரன் பாலிங்கம், அடேலா, கேபி, மதிவதனி மற்றும் பிரபாகரனின் இரண்டு பிள்ளைகள் – சாள்ஸ் அன்ரனி அவன் ஒரு சிறு பையனாக இருந்தான் மற்றும் பிரபாகரனின் மகள் உட்பட ஒரு குழுவினர் இருந்தார்கள்.

அன்ரன் பாலசிங்கம் பயத்தில் ஒன்றின் பின் ஒன்றாக சிகரட்டுகளை ஊதிக் கொண்டிருந்தார். நான் என்னை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன்.

முதலில் அவர்களை விமான நிலையத்தில் இருந்த ஒரு வீட்டில் வைத்திருந்தோம். பின்னர் அவர்களை ஹில்டன் ஹோட்டலுக்கு மாற்றினோம். நாங்கள் அதிகம் பேசினோம் அதிலிருந்து அன்ரன் பாலசிங்கம் என்னைப்பற்றி அதிகம் தெரிந்து வைத்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்டேன்.

கேள்வி: எப்படி நீங்கள் அவ்வாறு விளங்கிக் கொண்டீர்கள்?

பதில்: அவர் என்னிடம் “நிமால் அவர்களே, உங்கள் றக்பி குழு எப்படி உள்ளது” என்று கேட்டார். அப்போது நான் ஹவ்லொக்கின் பயிற்சியாளராக இருந்தேன். அவர் எல்லாவற்றினதும் உள் விபரங்களைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்.

கேள்வி: பிரபாகரனது மனைவி மற்றும் பிள்ளைகள் எங்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்?

பதில்: அவர்கள் கலந்துரையாடலில் பங்குபற்றவில்லை. அவர்கள் வடக்கிற்கு விமானத்தில் சென்று விட்டார்கள்.

கேள்வி: எங்கே?

பதில்: நான் உடன் செல்லவில்லை. எரிக் சில்வா மற்றும் தேசிய புலனாய்வு பிரிவினர் அங்கு சென்றார்கள். அவர்கள் நெடுங்கேணிக்கு சென்றார்கள்.

கல்முனையில் துப்பாக்கிச்சூடு ஆரம்பித்த போது, எல்.ரீ.ரீ.ஈயின் தூதுக்குழு இங்குதான் இருந்தது. அவர்களைத் திருப்பி அனுப்பும்படி வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீட் அவர்களை நான் வற்புறுத்தினேன்.

நான் பிள்ளைகளை பார்சன் வீதியில் உள்ள விமானப்படை முகாமுக்கு கூட்டிப் போனபோது, அவர்கள் எங்கள் மீது கோபமாக இருந்தார்கள்.

நான் அவர்களிடம் நீங்கள் எங்களுடன் கோபப்பட வேண்டிய அவசியம் இல்லை, நீங்கள் விரும்பினால் விமானத்தில் இருந்து கீழே தள்ளிவிட முடியும்; என்று சொன்னேன்.

பாலசிங்கம் ஹில்ரனில் இருந்த போது இரவில் மது அருந்தியபடி என்னுடன் பேசினார்.

கேள்வி: அவர் என்ன குடித்தார்.

பதில்: அவர் அதி விசேட பழைய சாராயம் (வீ.எஸ்.ஓ.ஏ) குடித்தார். நாங்கள் குடிக்கவில்லை. மது எல்லா விசேட அதிரடிப்படை முகாம்களிலும் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது.

கேள்வி: பாலசிங்கம் உங்களுடன் என்ன பேசினார்?

பதில்: அவர் லலித் அத்துலத்முதலியைப் பற்றிப் பேசினார். உங்களுக்கு நினைவிருக்கிறதா, குமரப்பன், புலேந்திரன், மற்றும் கரிகாலன் உட்பட எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள் குழுவொன்று, கடற்படை அவர்களைக் கைது செய்ததின் பின்னர் அவர்களைக் கொழும்புக்கு கொண்டு செல்ல முயன்றபோது பலாலி விமான நிலையத்தில் வைத்து சயனைட் வில்லைகளை விழுங்கி தற்கொலை செய்தது?

நான் நடத்திய ஒரு நடவடிக்கையின்போது குமரப்பன் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார். பாலசிங்கம் அவர்களைப் பற்றிப் பேசினார்.

அவர்கள் சயனைட்டை விழுங்கியது செப்ரம்பர் 12ல். குமரப்பன் ஆகஸ்ட் 5ம் திகதிதான் திருமணம் முடித்தார் என்றும் அதற்கு தானும் ஒரு சாட்சியாக இருந்ததாக பாலசிங்கம் சொன்னார்.

குமரப்பன் ஒரு கடற்படை பொறியியலாளர் என்றும் அமெரிக்காவில் இருந்த அவரை தான்தான் திரும்ப அழைத்து வந்ததாக பாலசிங்கம் சொன்னார்.

ஒரு யுத்தம்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருப்பதால் அவர்கள் கொழும்புக்கு கொண்டு செல்லப்படுவதை தடுக்க பிரபாகரன் விரும்பினார்.

பாலசிங்கம் என்னிடம் சொன்னது, “ஜே.ஆருடன் எனக்கு தொடர்பு கிடையாது. நான் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன்.

ஆனால் அதைச் செய்ய வேண்டாம் என அவர் படையினரிடம் கூறவில்லை. ஆனால் இதன் பின்னால் இருந்தவர் லலித் தான் எனபது எனக்குத் தெரியும். இதற்காக பிரபாகரன் லலித்தை என்றைக்கும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்” என்று.

கேள்வி: இதை நீங்கள் திரு. அத்துலத்முதலியிடம் சொன்னீர்களா?

பதில்: ஆம். அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

கேள்வி: நீங்கள் இதை அத்துலத்முதலியிடம் தெரிவித்த போது பாலசிங்கம் ஹில்டனில் தான் இருந்தாரா?

பதில்: ஆம். ஆச்சரியப்படும் வகையில் அடுத்தநாள் நான் ஹில்டனுக்குச் சென்ற போது, திரு.அத்துலத்முதலி அங்கு ஒரு திருமணத்தில் கலந்து விட்டு அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருந்தார்.

அவர் என்னைக் கண்டதும் “நிமால் இங்கு நீ என்ன செய்கிறாய்?” என்று கேட்டார். நான் செய்வதை அவரிடம் சொல்லிவிட்டு பாலசிங்கத்தின் அறிவித்தலையும் அவரிடம் சொன்னேன்.

கேள்வி: பாலசிங்கம் அமைச்சர் அத்துலத்முதலியை பற்றி மட்டும் தான் உங்கிடம் பேசினாரா?

பதில்: அவர் அமைச்சர் காமினி திசாநாயக்கா பற்றியும் பேசினார். அமைச்சரை அவர் ஒரு ரோ அமைப்பின் முகவர் என அடையாளம் கண்டு இவை அனைத்தினதும் பின்னணியல் அவர்தான் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

லலித் மற்றும் காமினி பற்றி அவர் சாதகமாக கருத்து தெரிவிக்கவில்லை. நான் கேள்விப்பட்டதை அவர்கள் இருவரிடமும் தெரிவித்தேன்.

தனக்கும் எல்.ரீ.ரீ.ஈ தூதுக்குழுவினருக்கும் இடையேயான கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி பிரேமதாஸ சில கருத்துக்களை தெரிவித்தார் என நான் நினைக்கிறேன்.

அவரது கருத்தை அவர்கள் அறிவார்கள். பாபு ஜனாதிபதி பிரேமதாஸவுக்கு மிகவும் நெருக்கமானவன். அவர்களுக்கு பேச்சுக்களில் ஆர்வம் இருக்கவில்லை. ஒரு கடமைக்காக அதைச் செய்தார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியாவிடம் ‘சாம்-7’ ஏவுகணைகள் கேட்ட இயக்கங்கள்!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 71) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!
Next post பிரான்ஸில் புலிகள் இயக்கப் பிரிவினரிடையே மீண்டும் மோதல்!: ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி…!!