பர்கூர் அருகே ஷேர் ஆட்டோ–பஸ் மோதல்: 6 பேர் பலி…!!
பர்கூர் அருகே ஷேர் ஆட்டோ–பஸ் மோதல் 6 பேர் பலி போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் இருந்து 15 பேர் ஒரு ஷேர் ஆட்டோவில் ஜெகதேவி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
கிருஷ்ணகிரியில் இருந்து ஜெகதேவி வழியாக பர்கூர் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று நேற்று இரவு 9 மணிக்கு சென்று கொண்டிருந்தது. டி.நாகமங்கலம் அருகே அக்ரகாரம் கூட்டுரோடு பகுதியில் சென்ற போது, ஒரு லாரியை ஷேர் ஆட்டோ டிரைவர் முந்திசெல்ல முயன்றார். அப்போது ஷேர் ஆட்டோ டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து அரசு டவுன் பஸ் மீது மோதியது.
இந்த கோரவிபத்தில், ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த ஒரு பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடிவந்தனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனங்களில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களில், ஜெகதேவியை சேர்ந்த ஷேர் ஆட்டோ டிரைவர் பிரகாஷ் (40), அதே பகுதியைச் சேர்ந்த துணிக்கடை ஊழியர் கார்த்திக் (27), ராணி (50), மாடரனஅள்ளியை சேர்ந்த சகாயராஜ் (35), ஐகுந்தம் கொத்தப்பள்ளியை சேர்ந்த சுகுமார் (35) ஆகியோர் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
விபத்தில் காயம் அடைந்த காசி (65), காளியப்பன் (60(, குட்டடியப்பன் (40), ரேணுகா (32), மகபூப்பாட்சா (16) ஆகியோர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்களில் அப்துல்கையூப் (18) என்பவர் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைத் தொடர்ந்து சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
மேலும் விபத்துக்குள்ளான ஷேர் ஆட்டோ மற்றும் டவுன் பஸ்சை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து நடந்த இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இந்த விபத்தில் டவுன்பஸ்சில் பயணம் செய்தயாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த கோர விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating