By 4 July 2016 0 Comments

வெடிக்குமா ‘கிளஸ்டர் குண்டு’?

article_1467346592-sanjayஇலண்டனிலிருந்து வெளியாகும், கார்டியன் நாளிதழ், கடந்த 20ஆம் திகதி போட்ட குண்டு, சரியான நேரத்தில் தான் வெடித்திருக்கிறது. இறுதிக்கட்டப் போரில் கிளஸ்டர் குண்டுகளை அரசபடைகள் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுத்தான், இப்போது ஜெனீவாவில் புதிய குண்டாக வெடித்திருக்கிறது. ஹலோ ட்ரஸ்ட் என்ற சர்வதேச கண்ணிவெடி அகற்றும் குழுவைச் சேர்ந்த ஒருவர், வழங்கிய நான்கு படங்களை ஆதாரமாகக் கொண்டும், கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட வெளிநாட்டு நிபுணர்கள் வெளியிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டும், இந்தக் குற்றச்சாட்டை கார்டியன் முன்வைத்திருந்தது.

இந்தக் குற்றச்சாட்டு வெளியான போது, அதனை அரசாங்கம் முறைப்படி நிராகரிக்காவிடினும், பாதுகாப்புச் செயலாளர், கருணாசேன ஹெட்டியாராச்சி, அமைச்சர் ராஜித சேனாரத்ன, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜெயவீர போன்றவர்கள் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்திருந்தனர். அதுமட்டுமட்டுமன்றி, இறுதிப்போர் நடந்த காலத்தில், பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவும் தான் பதவியில் இருந்த காலப்பகுதியில் கிளஸ்டர் குண்டுகளைக் கொள்வனவு செய்யவோ, பயன்படுத்தவோ இல்லை என்று கூறியிருந்தார்.

இவர்கள் எல்லோருமே, இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போது, இதனை நிராகரித்துள்ள அதேவேளை, இதுபோன்ற குற்றச்சாட்டுகள், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர்களுக்கு முன்னதாக வெளியிடப்படுவது வழக்கம் தான் என்றும் இப்போதும் அவ்வாறே வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

புலம்பெயர் தமிழர்கள், புலி ஆதரவாளர்கள் தான் இந்த வேலையைச் செய்கிறார்கள் என்பதும் இவர்களின் வழக்கமான குற்றச்சாட்டுத் தான். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தது, பிரித்தானியாவின் புகழ்பெற்ற கார்டியன் நாளிதழ். அதற்கான புகைப்பட ஆதாரங்களை வழங்கியது வெளிநாட்டு கண்ணிவெடி அகற்றும் நிபுணர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயம். எவ்வாறாயினும், சரியானதொரு சந்தர்ப்பத்தில் இந்தக் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டுள்ளதால்தான், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன்,

கடந்த புதன்கிழமை சமர்ப்பித்த இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையில், இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக முழுமையான சுதந்திரமான – நம்பகமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், 2012ஆம் ஆண்டு அலன் போஸ்டன் என்ற ஐ.நா அபிவிருத்தித் திட்ட, கண்ணிவெடி அகற்றும் பிரிவின் தொழில்நுட்ப ஆலோசகர், புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில், தாம் கிளஸ்டர் குண்டுகளை மீட்டதாகத் தகவல் வெளியிட்டிருந்தார். அப்போது அந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் நின்று போனது.

ஆனால் இப்போது தான், இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று, ஐ.நாவிடம் இருந்து முதல் முறையாக கோரிக்கை வந்திருக்கிறது. மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கை வெளியாகவிருந்த சமயத்தில் இந்த விவகாரம், வெளிப்படுத்தப்பட்டதால் தான், கிளஸ்டர் குண்டுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

அதுவும், மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனின் வாய்மூல அறிக்கையின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டிருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து நம்பகமான, சுதந்திரமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் உயர்ஸ்தானிகர் கூறியிருப்பது அரசாங்கத்திடம் தான். ஆனால், கிளஸ்டர் குண்டுக் குற்றச்சாட்டுகளை நிராகரித்த ஓர் அரசாங்கத்திடம் இருந்து, நம்பகமான சுதந்திரமான விசாரணைகளை, உயர்ஸ்தானிகர் ஹுஸைன் எவ்வாறு எதிர்பார்க்கிறார் என்பது தான் கேள்விக்குரிய விடயம்.

இறுதிக்கட்டப் போரில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்களை ஒளிப்படங்களாக கார்டியன் வெளியிட்ட போது, அதுகுறித்து விசாரிக்கப்படும் என்ற ஒரு பதிலை அரசாங்கம் கூறியிருந்தால், குறைந்தபட்ச நம்பகமான விசாரணை ஒன்றையேனும் எதிர்பார்த்திருக்கலாம்.

அது இலங்கையில் தான் கண்டுபிடிக்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம், அரசபடையினர் தான் பயன்படுத்தினர் என்பதற்கு என்ன ஆதாரம், இராணுவத்தின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததா, ஏன் புலிகள் கூட வீசியிருக்க முடியாதா என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தார். அவ்வாறு கேள்விகளை எழுப்பிய அரசாங்கத்திடம் போய், இப்படியொரு குற்றச்சாட்டு உள்ளது, அதுபற்றி நீங்களே விசாரியுங்கள் என்று கூறுவது அபத்தமான விடயமாகவே உள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, அமைச்சர் ராஜித சேனாரத்ன, பிரிகேடியர் ஜயநாத் ஜெயவீர உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினர் அனைவருமே, இது, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்துக்கு முன்பாக சுமத்தப்படும் வழக்கமான குற்றச்சாட்டுகள் தான் என்று அலட்சியமாக ஒதுக்கப் பார்த்தனர்.

அரசபடைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பொய்யானது, போலியாக சோடிக்கப்பட்டது என்பது போன்று எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கும் மனோபாவத்தைக் கொண்டதோர் அரசாங்கத்திடம் இருந்து, நியாயமான விசாரணைகளை மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் உயர்ஸ்தானிகர் எதிர்பார்ப்பது வேடிக்கையான விடயம். வெறும் ஒளிப்பட ஆதாரங்கள் போதாது, மேலதிக சான்றுகளும் தேவை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்ர் கோட்டாபய ராஜபக்ஷவும் கூறியிருக்கிறார்.

கிளஸ்டர் குண்டுகள் வீசப்பட்டதற்கு மேலதிக ஆதாரங்களை யார் தேட வேண்டும், பாதிக்கப்பட்ட தரப்பினரால் இது சாத்தியமான விடயமா, எல்லா ஆதாரங்களையும் மறைத்து விட்ட துணிச்சலில் தான் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். மறைக்கப்பட்ட எச்சங்களில் ஒரு சிலவற்றின் ஆதாரங்களைத் தான், கண்டுபிடிக்க முடிந்திருக்கின்ற சூழலில், இன்னும் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோருவது நகைப்புக்கிடமானது,

ஷெய்ட் ஹுஸைனின் அறிக்கையில், கிளஸ்டர் குண்டு குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமான நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது என்றால், அந்தக் குற்றச்சாட்டு உண்மையா, பொய்யா- அதற்கான ஆதாரங்கள் என்ன என்று தேட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பேயாகும்.

அத்தகைய பொறுப்பிலுள்ள அரசாங்கமே, அப்படியான தாக்குதல் ஏதும் நடத்தப்படவில்லை என்று கூறுகின்றதென்றால், எப்படி ஆதாரங்கள் வெளிப்படுத்தப்படும்?
சனல் 4 தொலைக்காட்சி போர்க்குற்ற வீடியோ ஆதாரங்களை வெளியிட்ட போதும், அவ்வாதாரங்கள் போலியானவையென்று தான் அரசாங்கம் கூறியது.

பின்னர் சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்த போது, ஒப்புக்காக இராணுவ விசாரணை நீதிமன்றத்தை, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், நியமித்தது. இப்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தலைமையிலான அந்த இராணுவ நீதிமன்றத்தின் முதல்கட்ட அறிக்கை பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. சனல் 4 குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது என்றும், அதுபற்றிய அறிக்கை இரண்டாவதாக கையளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இன்றுவரையில் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவேயில்லை.

சனல்-4 குற்றச்சாட்டு உண்மையா, பொய்யா என்ற இராணுவ நீதிமன்றத்தின் விசாரணை மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரும் வெளிப்படுத்தப்படாமல் இருக்கிறது. அப்படியான நிலையில், கிளஸ்டர் குண்டு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசாங்கம் எவ்வாறு நியாயமான விசாரணைகளை முன்னெடுத்து உண்மையைக் கண்டுபிடிக்கப் போகிறது?

போர்க்குற்ற விசாரணை விடயத்திலும் இதே நிலை தான் நீடிக்கிறது. போரின் போது, மீறல்கள் நடந்திருக்கலாம் என்பதையாவது, அரசாங்கம் ஒப்புக்கொண்டிருந்தது. அதனை வைத்தே, அதுபற்றி விசாரிக்க இணக்கமும் தெரிவித்தது.

ஆனால், கிளஸ்டர் குண்டுகளை விசவேயில்லை, பயன்படுத்தவேயில்லை என்று நிராகரிக்கும் ஓர் அரசாங்கத்தினால், எவ்வாறு நம்பகமான விசாரணைகளை முன்னெடுக்க முடியும். குற்றச்சாட்டுகளை திறந்த மனதுடன் அணுகும் ஓர் அரசாங்கத்திடம் இருந்து குறைந்தபட்சம் நம்பகமான ஒரு விசாரணையை எதிர்பார்க்க முடிந்தாலும், குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையையே ஆராயாமல் நிராகரிக்கும் ஒரு அரசாங்கத்திடம் அத்தகைய நேர்மையை எதிர்பார்க்க முடியாது,

ஆனாலும், மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் உயர்ஸ்தானிகர் மீண்டும் அந்தப் பொறுப்பை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏமாற்றத்தையே அளிக்கும். ஏற்கெனவே, காணாமற்போனவர்கள் விவகாரத்திலும் அரசியல் கைதிகள் விவகாரத்திலும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் விவகாரத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை அரசாங்கம் பெறத் தவறியிருக்கிறது.

கிளஸ்டர் குண்டு விவகாரத்திலும் அதுதான் நடக்கப் போகிறது. கசாப்புக் கடை நீதி எவ்வாறானதாக இருக்குமோ அதுபோலத் தான் இதுவும். கிளஸ்டர் குண்டு பயன்பாடு உறுதிப்படுத்தப்பட்டால் அது அரசாங்கத்தின் போர்க்குற்றமாகவே கருதப்படும். ஏனென்றால் அதனைக் கொள்வனவு செய்து கொடுத்தது அரசாங்கம் தான்.இப்போதைய அரசாங்கமோ மீறல்களை தனிநபர்களின் குற்றமாக மாற்றி, இராணுவத்தையும் அரசாங்கத்தையும் குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்ற முனைகிறது. இப்படியான நிலையில், எவ்வாறு அரசாங்கம் கிளஸ்டர் குண்டு பற்றிய விசாரணைகளை நியாயமாக முன்னெடுக்கும்?Post a Comment

Protected by WP Anti Spam