பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த, கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை.. காரணம் என்ன? (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -20)

Read Time:22 Minute, 39 Second

timthumb• தலைவர் பிரபாகரன், கருணா அம்மான் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார்!: கருணா பிளவுக்கு பொட்டமன் காரணமா??

• ‘கிழக்கு மாகாணப் போராளிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள்’ என்ற பெயரில் இயக்கத்திற்குள்ளே ஒரு கொடூரமான ‘சகோதர யுத்தம்’ முன்னெடுக்கப்பட்டது.

• முப்பது வருட காலப் போராட்டத்தின் எச்சங்களாகக் காயமடைந்த போராளிகளும், கடினப் பயிற்சிகளில் ஈடுபட முடியாத வயதடைந்த போராளிகளுமே எஞ்சியிருந்தனர்.

…..முன்னயை தொடரின் தொடர்ச்சி…

வன்னியில் சில வாரங்களாகத் தங்கியிருந்த அன்ரன் பாலசிங்கம் பல முக்கியச் சந்திப்புக்களை முடித்துக்கொண்டு லண்டன் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தார்.

அப்போது அவரை உலங்கு வானூர்தியில் வழியனுப்பி வைப்பதற்காகப் பல பொறுப்பாளர்களும் அவரது வீட்டிற்கு வந்திருந்தனர். நானும் அங்கிருந்தேன். சற்று நேரத்தில் தலைவர் பிரபாகரன் அங்கு வந்து இறங்கினார்.

அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த சற்று நேரத்தில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை பெரும் பதற்றத்தோடு அங்கு வந்து சேர்ந்தார்.
இனி…..

வந்தவர் நேரடியாகத் தலைவரும் அன்ரன் பாலசிங்கமும் பேசிக்கொண்டிருந்த இடத்திற்குப் போய் சீரியசாக எதையோ கூறினார். சற்று நேரத்தில் அவர்கள் பரபரப்பாக உரத்துப் பேசிக்கொண்டார்கள்.

முல்லைத்தீவு ஆழ்கடற் பரப்பில் இலங்கை கடற்படையினரின் ‘டோரா’ அதிவேக விசைப் படகுகளின் நடமாட்டம் தென்படுவதாகப் புலிகளின் ‘ரேடர்’ நிலையம் அறிவித்ததையடுத்து, கடற்புலிகளின் தாக்குதல் படகுகளைத் தயார்படுத்திவிட்டு, நிலைமையை நேரடியாகத் தலைவரிடம் பேசித் தாக்குதலுக்கான உத்தரவைப் பெற்றுக்கொள்வதற்காகவே தளபதி சூசை அவசரமாக அங்கு வந்திருந்தார்.

அவரைச் சற்று நேரம் பொறுமையாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட அன்ரன் பாலசிங்கம், புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளராக இருந்த புலித்தேவனை உடனே அழைத்து, கொழும்பு சமாதான செயலகத்துடனும், போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுடனும் அவசர தொடர்புகளை ஏற்படுத்திப் பேசினார்.

அவர்கள் உரிய இடங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திப் பேசுவதன் மூலம் போர்ப்படகுகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதாக வாக்குறுதியளித்துள்ளனர் என்பதைத் தலைவரிடம் அன்ரன் பாலசிங்கம் கூறினார்.

குறிப்பிட்ட சில மணித் தியாலங்களுக்கு அந்த இடம் பதற்றமாகவே இருந்தது. இலங்கை கடற்படைக்குரிய டோரா படகுகளின் நடமாட்டம் பற்றிய தகவல்களைத் தளபதி சூசை கேட்டறிந்து கொண்டிருந்தார்.

அன்ரன் பாலசிங்கம், போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவருடன் தொடர்பில் இருந்தார். “பாலா அண்ணை! இப்பவும் டோராக்காரன் ஓடித்தான் திரியுறான், கரைக்குக் கிட்ட வந்தானென்டால் கட்டாயம் அடிப்பம் எண்டு சொல்லுங்கோ” என சூசை அச்சுறுத்திக் கொண்டிருந்தார்.

“கொஞ்சம் பொறு. போர்நிறுத்த கண்காணிப்பு குழுத் தலைவர் கடற்படைக் கட்டளை அதிகாரியோடு கதைத்துக் கொண்டிருக்கிறார், இப்ப முடிவு சொல்லுவாங்கள்” எனக் கூறிய அன்ரன் பாலசிங்கம் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்துக்கொண்டிருந்தார்.

சற்று நேரத்தில் புலிகளின் ‘ராடர்’ திரைகளிலிருந்து இலங்கைக் கடற்படையின் ‘டோரா’ப் படகுகள் மறைந்துவிட்டதாகத் தளபதி சூசைக்கு அறிவிக்கப்பட்டது.

அவரும் கடற்புலியின் தாக்குதலணிகளை முகாம்களுக்குத் திரும்பும் படி கட்டளையிட்டார். அதுவரை இறுக்கமான முகத்துடன் யோசனையிலிருந்த தலைவர், தனது வழமையான சிரிப்புடன் அனைவருடனும் பகிடிகளை விட்டுப் பேசத் தொடங்கினார்.

ஒரு சினிமா காட்சிபோல அங்கு நடந்தவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்கும் நிம்மதிப் பெருமூச்சு வெளியேறியது. இன்னும் சற்றுநேரம் தாமதமாகியிருந்தால் நிலைமை தலைகீழாக மாறியிருந்திருக்கும்.

தளபதி சூசையிடம் தாக்குதல் நடத்துவதற்கான உத்தரவைத் தலைவரே வழங்கியிருப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஏனெனில் இலங்கைத் தீவில் போரா சமாதானமா என்பதைத் தீர்மானிக்கக்கூடிய சக்தி மிக்க மனிதராகத் திகழ்ந்தார் பிரபாகரன்.

ஆமை வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த சமாதான முன்னெடுப்புகள் ஒருபுறமிருக்க, இயக்கத்தின் உள் கட்டமைப்புகளில் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

அதில் முக்கியமானது இயக்கத்தின் ஆளணி பலத்துடன் தொடர்புடையது. இயக்கத்தின் ஆணிவேரே அதில்தான் அடங்கியிருந்தது.

அது கொஞ்சம்கொஞ்சமாக ஆட்டம் காணத் தொடங்கியிருந்தது.

கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கருணா அம்மான் தன்னுடைய கட்டுப்பாட்டிலிருந்த ஆயிரக்கணக்கான போராளிகளுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து செல்வதாக அறிவித்திருந்தார்.

அதிகம் வெளியே காட்டிக்கொள்ளப்படாது விட்டாலும், அந்நிகழ்வானது இயக்கத்துக்குள்ளே பேரதிர்வினையே ஏற்படுத்தியிருந்தது.

இயக்கத்தின் செல்வாக்குமிக்க முதன் நிலைத் தளபதியாகக் கருணா அம்மான் இருந்தார். அவருடன் செயல்திறன்மிக்க போராளிகள் மற்றும் இளநிலைத் தளபதிகள் பலர் இருந்தனர்.

வன்னிக் களமுனைகளின் பல வெற்றிகளில் அவர்கள் தமது பலமான முத்திரைகளைப் பொறித்திருந்தார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்நிலையில் இயக்கத்தில் அரைப்பங்கு இராணுவ பலம் கருணா அம்மானின் பிரிவோடு இழக்கப்பட்டுவிட்டது.

2004 ஏப்ரலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கருணா அம்மானின் பிரிவு ஏற்பட்டபோது, அம்மாதம் நடக்கவிருந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார வேலைகளில் நான் யாழ்ப்பாணத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன்.

தமிழ்க் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்திப் புலிகளின் ஆதரவுடன் அவர்களைத் தேர்தலில் வெற்றியடையச் செய்வதன் மூலம் தமிழ் மக்களின் சக்தி புலிகளுக்குப் பின்னால் இருக்கின்றது என்கிற செய்தியை வெளிப்படுத்துவதுடன் பாராளுமன்றத் தீர்மானங்களில் தமது செல்வாக்கையும் நிலைநிறுத்தலாம் எனப் புலிகள் கருதினார்கள்.

இளம்பரிதி

அப்போது யாழ்ப்பாண மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இளம்பரிதி இருந்தார். அவருக்கு உதவியாக வன்னியிலிருந்து நானும் வேறு பல போராளிகளும் அனுப்பப்பட்டிருந்தோம்.

ஞாபகமில்லாத ஒரு நாளின் அதிகாலை ஆறு மணியளவில் போராளிகளுக்கான இரகசிய கூட்டமொன்றை இளம்பரிதி அவசரமாகக் கூட்டியிருந்தார்.

“ஒரு முக்கியமான விடயத்தை உங்களுக்குச் சொல்லும்படி கிளிநொச்சியிலயிருந்து அவசரமா அறிவிக்கப்பட்டிருக்கிறது. எங்கட இயக்கத்தின்ர மட்டக்களப்பு – அம்பாறை தளபதி கருணா அம்மான் தன்னோடு இருக்கின்ற ஆறாயிரம் போராளிகளோடு இயக்கத்தில இருந்து பிரிந்துபோறதாக அறிவித்திருக்கிறார்” என்ற செய்தியை இளம்பரிதி அங்கிருந்த அனைத்துப் போராளிகளுக்கும் தெரிவித்தார்.

அனைவரும் விறைத்துப்போனவர்கள் போல் அசைவேதுமின்றி உட்கார்ந்திருந்தார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்டதன் பின்பு அங்குப் பேசப்பட்ட வேறு எந்த விடயங்களும் என்னுடைய காதுகளுக்குள் ஏறவே இல்லை.

அந்த நிமிடம் இயக்கமே அழிந்துபோனது போன்ற உணர்வுதான் எனக்குள் ஏற்பட்டிருந்தது.

ஏனென்றால் அத்தகைய பலமான சக்தியாகக் கிழக்கு மாகாணப் போராளிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவத்தில் இடம் பிடித்திருந்தார்கள்.

கிளிநொச்சியிலிருந்து அடுத்த தகவல் வரும்வரை தேர்தல் பொதுக் கூட்டங்களை நிறுத்திவைக்கும்படி அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டு முழு நாட்கள் கொக்குவில் பொற்பதி வீதியில் அமைந்திருந்த எமது முகாமுக்குள் எதுவும் செய்ய மனமின்றியும், பொதுமக்களது கேள்விக் கணைகளுக்கு முகம்கொடுக்க முடியாமலும் முடங்கிக் கிடந்தோம்.

மக்களுக்கு என்ன பதில் சொல்வது என்பது மிகவும் புரிபடாத குழப்பமான நிலையாக இருந்தது.

அடுத்த நாள் கிளிநொச்சியில் அரசியல்துறைப் பொறுப்பாளரின் கூட்டத்திற்காக அழைக்கப்பட்டிருந்தோம்.

அங்கு நடைபெற்ற கூட்டத்தில் ‘நிதிப் பிரச்சனை மற்றும் தனிப்பட்ட ஒழுக்கப் பிரச்சனை காரணமாக மட்டு-அம்பாறை தளபதியை விசாரணை செய்வதற்கு வன்னிக்கு வரும்படி தலைவர் அறிவித்திருந்தபோது, அதனை மறுத்து அவர் இத்தகையவொரு அறிவித்தலைச் செய்திருப்பதாகவும், ஆகவே அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள போராளிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் இயக்கம் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

இதற்காகப் போராளிகள் குழப்பமடையத் தேவையில்லையெனவும், தனது போராட்ட வாழ்வில் இதுபோன்ற எத்தனையோ நெருக்கடிகளை வெற்றிகரமாகத் தாண்டி வந்த தலைவர் பிரபாகரன் இந்த நெருக்கடியையும் வெற்றிகரமாகத் தாண்டி வருவார் என்ற நம்பிக்கையோடு, மக்களின் கேள்விகளுக்குத் தெளிவுடன் பதிலளிக்குமாறும் அரசியல் துறைப் பொறுப்பாளரால் எமக்கு அறிவுறுத்தப்பட்டது.

அச்சந்தர்ப்பத்தில் இயக்கத்தின் பிரதித் தலைவராக இருந்து கைது செய்யப்பட்டு, பின்னர் இல்லாமலாக்கப்பட்ட மாத்தையா அண்ணருடைய நினைவுகள் மீண்டும் எனக்குள் ஏற்பட்டன.

ஒருவருக்கான தண்டனை இதுதான் என இயக்கம் தீர்மானித்துவிட்டால், அவர்மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுகள், தலைவருக்கெதிராகச் சதி செய்தார், இயக்கத்தின் நிதியை மோசடி செய்தார், பாலியல் குற்றமிழைத்தார் என்பவைகளே ஆகும்.

ஆரம்பத்தில் ஏனைய விடுதலைப் போராட்ட இயக்கங்களைத் தடைசெய்வதற்கும் இவ்வாறான குற்றச்செயல்களே அவர்கள் மீதும் சுமத்தப்பட்டிருந்தன என்பதையும் அறிந்திருக்கிறேன்.

உண்மையாகவே கிழக்கு மாகாணத் தளபதிக்கும் இயக்கத்தின் தலைவருக்கும் இடையே என்ன நடந்தது என்பது எனக்கு மட்டுமல்ல, பெரும்பாலான போராளிகளுக்கும்கூடச் சரிவரத் தெரியாத மர்மமாகவே இருந்தது.

ஆனால் தலைவர் பிரபாகரன், கருணா அம்மான் மீது அளவற்ற நம்பிக்கையும் தனிப்பட்ட முறையிலான பாசமும் வைத்திருந்தார் என்பதை ஓரளவுக்கு என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

ஒருநாள் நானும் தளபதிகள் விதுஷாவும், துர்காவும் தலைவரைச் சந்திப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தோம்.

அது சமாதானம் தொடங்கிய ஆரம்பகாலக் கட்டம். அந்தச் சந்திப்பில் தலைவர் பல விடயங்கள் பற்றியும் எம்மோடு பேசிக்கொண்டிருந்தார்.

அதில் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்; “மட்டக்களப்பு, அம்பாறைப் போராளிகள் போராட்டத்தில எவ்வளவோ கஷ்டங்களைப் பட்டிருக்கிறாங்கள்.

அவங்கட குடும்பங்களுக்கும் அந்த மக்களுக்கும் நிறைய வேலைகள் செய்யவேணும். நிதித்துறை மூலமா ஓரளவு பண உதவியையும் செய்து கருணாவுக்கும் சொல்லியிருக்கிறன், அந்தச் சனத்திற்கு நிறைய உதவிகள் செய்யச் சொல்லி.

அவன் செய்யிறான், இவங்கள் பொட்டு ஆக்கள் என்னட்ட வந்து அங்க அது பிழை இது பிழை எண்டு சொல்லிக்கொண்டு நிக்கிறாங்கள்.

தளபதிமாருக்குள்ள முதலில ஒற்றுமை இருக்கவேணும்” என்று குறிப்பிட்டார்.

மட்டு-அம்பாறைத் தளபதியான கருணாவுக்குப் புலிகள் இயக்கத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகளின் பின்னர், அங்கிருந்து சில போராளிகள் இயக்கத் தலைமை மீது கொண்டிருந்த விசுவாசம் காரணமாக வன்னிக்கு வந்து சேர்ந்திருந்தனர்.

அவர்களையும் இணைத்துக்கொண்டு ‘கிழக்கு மாகாணப் போராளிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள்’ என்ற பெயரில் இயக்கத்திற்குள்ளே ஒரு கொடூரமான‘சகோதர யுத்தம்‘ முன்னெடுக்கப்பட்டது.

பல வருட காலமாக என்னுடன் பழகிய பல போராளிகள் இரு தரப்பிலும் உயிரிழந்து போயிருந்தனர். இயக்கத்தை நம்பிச் சரணடைந்திருந்த மட்டு-அம்பாறை மகளிர் தளபதியாகவிருந்த சப்தகி (சாளி) உட்பட நான்கு பெண் போராளிகளும் பல ஆண் தளபதிகளும் இயக்கத்தின் புலனாய்வுத் துறையினரின் சிறைகளில் அடைக்கப்பட்டுப் பின்னர் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டதாக அறிய முடிந்தது.

இயக்கத்தின் போரிடும் வல்லமையானது இத்தகைய மூர்க்கத்தனமான களையெடுப்புக்களாலும் சிதையத் தொடங்கியிருந்தது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நீண்ட காலப் போராளிகள் பலர் போர்களில் பலத்த காயமடைந்திருந்தனர். அத்துடன் பல இடைநிலைப் பொறுப்பாளர்களும் போராளிகளும் தனிப்பட்ட காரணங்களை முன்வைத்து இயக்கத்திலிருந்து விலகிச் சென்றார்கள்.

நானறிந்த வரையில் பல ஆண் மற்றும் பெண் போராளிகள் தமது குடும்ப வறுமை காரணமாகவும் பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாகவும் இயக்கத்திலிருந்து விலகினார்கள்.

வேறு பல போராளிகள் காதல், திருமணம் போன்ற உறவுகளில் தம்மை இணைத்துக் கொண்டார்கள். தாக்குதலணிகளில் அனுபவம் வாய்ந்த போராளிகளின் வீதம் இக்காரணங்களால் குறைவடைந்து கொண்டே சென்றது.

முப்பது வருட காலப் போராட்டத்தின் எச்சங்களாகக் காயமடைந்த போராளிகளும், கடினப் பயிற்சிகளில் ஈடுபட முடியாத வயதடைந்த போராளிகளுமே எஞ்சியிருந்தனர்.

அவர்கள் தமது இளமையையும் உடல் வலிமையையும் நாட்டு விடுதலைக்காக உழைத்துத் தொலைத்திருந்தார்கள். பல பாரிய காயங்களை அடைந்து செயற்பட முடியாத நிலையிலிருந்த ஆண், பெண் போராளிகள் பலர் “யார் எங்களை கைவிட்டாலும் அண்ணை கைவிடமாட்டார்” என்ற ஒரே பற்றுதலிலும், நம்பிக்கையிலும் உயிர் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.

இயக்கத்தால் கட்டளையிடப்படும் வேலைகள் சில சந்தர்ப்பங்களில் மனதிற்கு ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாக இருந்தபோதிலும்கூட, பல பொறுப்பாளர்கள், போராளிகள் சொல்லும் வசனம், “அண்ணை சொல்லுறார், செய்யத்தானே வேணும்”,“எல்லாத்திற்கும் அண்ணை ஒரு திட்டம் வைத்திருப்பார்” என்பவையாகவே இருந்தன.

இதனைப் பலரும் தனிமனித வழிபாடு எனக் குறை கூறினார்கள். உண்மையும் அதுதான்.

இது எமது பண்பாட்டோடும் பழக்கவழக்கத்தோடும் கூடி வந்த விஷயமாகவே நான் கருதுகிறேன்.

எத்தனையோ நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து, ஒரு போராட்டத்தை முப்பது வருடத்திற்கும் மேலாகப் பெரும் படைபலத்துடன் கட்டி வளர்த்தவர் என்ற பிரமிப்போடுதான், என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான போராளிகளும் தலைவரைப் பார்த்தோம்.

தலைவர் எடுத்த முடிவுகள் பல சந்தர்ப்பங்களில் விமர்சனத்திற்குள்ளாகும்போதும் அவர் மக்களின் நலனுக்காகவும் நாட்டின் விடுதலைக்காகவும்தான் இப்படியான முடிவுகளை எடுத்திருக்கிறார் எனவும், தலைவர் ஒரு முடிவு எடுத்தால் அதில் நிச்சயமாக ஒரு நியாயம் இருக்கும் எனவும், ஒவ்வொரு போராளியும் எவ்வித ஐயப்பாடுமின்றி நம்பினோம்.

தலைவர் எடுக்கும் முடிவுகளை விமர்சிப்பதோ, கேள்வி கேட்பதோ தெய்வ குற்றம் இழைப்பதற்குச் சமமானதாக இயக்கத்தினுள்ளே கருதப்பட்டது.

இந்தப் போக்கின் வளர்ச்சியே இயக்கத்தின் உள்ளேயான விவாதத்தையும் விமர்சனத்தையும் இல்லாதொழித்து அதன் மிக அவலகரமான முடிவுக்கும் வழி வகுத்தது.

தாக்குதல் படையணிகளின் சிறப்புத் தளபதிகள், கட்டளைத் தளபதிகள் மற்றும் துறைப்பொறுப்பாளர்கள் தொடக்கம் சாதாரண போராளிகள் வரை இயக்கத் தலைமை சொல்வதையே செய்யவேண்டும் என்ற

இராணுவ ஒழுங்குக்குக் கட்டுப்பட்டவர்களாகவே நாம் வளர்க்கப்பட்டிருந்தோம். சாதாரணமாக எமக்குத் தெரிந்தவரை இயக்கத்தின் மூத்த, முக்கிய உறுப்பினர்களாக அன்ரன் பாலசிங்கம், முன்னாள் ஈரோஸ் தலைவர் பாலகுமாரன், நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தி ஆகியோரும் மூத்த தளபதி என்கிற தரத்தில் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் ஆகியோருமே இருந்தனர்.

அவர்களிலும் தலைவருக்குத் தனது கருத்துக்களை ஓரளவுக்குத் துணிந்து சொல்லக்கூடியவராக இருந்தவர் அன்ரன் பாலசிங்கம் மட்டுமே.

தொடரும்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெட்டும் மரத்திலிருந்து சீறி பாயும் இரத்தம்… இரத்த காட்டேரியின் வேலையாக இருக்குமோ…!! வீடியோ
Next post வாவ்!… என்னவொரு அட்டகாசமான உணவகம்… முதல்ல சாப்பாடு எங்கிருந்து வருதுனு பாருங்க…!! வீடியோ