விக்னேஷின் தீக்குளிப்பிற்கு யார் காரணம் தெரியுமா? கடுகடு சீமான்…!!

Read Time:16 Minute, 2 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-3நாம் தமிழர் கட்சி நடத்திய காவிரி உரிமை மீட்பு பேரணியில் பங்கேற்று தீக்குளித்த விக்னேஷ் என்ற இளைஞர் மரணமடைந்துவிட்டார். தமிழன் தாக்கப்படுவதற்கு எதிராக தமிழக அரசு கொந்தளித்திருந்தால், இதுபோன்ற தீக்குளிப்பு சம்பவங்கள் நடந்திருக்காது எனக் கதறுகிறார் சீமான்.

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, அ.தி.மு.கவைத் தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் போராட்டக் களத்தில் உள்ளன.

நேற்று காவிரி உரிமை மீட்புப் பேரணியை நடத்தினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதில், நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவரணி பாசறை செயலாளரான விக்னேஷ் கலந்து கொண்டார்.

ஆர்ப்பாட்டத்திற்கு வருவதற்கு முன்பே டீ சர்ட்டில் பெட்ரோலை நனைத்துவிட்டு வந்திருந்தார். அதற்கு முதல் நாள், தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில் “பேரணியில் தற்கொலை படையாக மாறுவோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், பேரணியின்போது உடலில் தீ பற்ற வைத்துக் கொண்டார் விக்னேஷ். 95 சதவீத தீக்காயங்களோடு போராடியவர், இன்று காலை மரணமடைந்துவிட்டார்.

காவிரிக்காக உயிர்நீத்த இளைஞரின் மரணம், தமிழகம் முழுவதும் சோக அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற தீக்குளிப்புகள் அவசியம்தானா? என சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இப்படியொரு காரியத்தில் விக்னேஷ் ஈடுபடுவான் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஒவ்வொருவரையும் பொத்திப் பொத்தித்தான் வளர்க்கிறேன். மனம் மிகுந்த சுமையாக இருக்கிறது. தமிழ் இன உணர்வோடு வளர்க்கப்பட்டவன்.

என்னுடைய பேச்சால் ஈர்க்கப்பட்டு, மன்னார் குடியில் கட்சி வேலை பார்த்துக் கொண்டிருந்தான். தேர்தல் நேரங்களில் கடுமையாக வேலை பார்த்தான். அதன்பிறகு வேலைக்காக சென்னை வந்தவன் அம்பத்தூரில் தங்கியிருக்கிறேன் என்றான். அங்கிருந்த பொறுப்பாளர்களிடம் தம்பியை சேர்த்துவிட்டேன்.

வேலை நேரம் போக கட்சி வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய முகநூல் பதிவுகளில் தமிழ்த் தேசிய முதிர்ச்சியை பார்க்க முடியும். முத்துக்குமாரைப் போல உணர்வோடு வளர்ந்தவன். ஏதோ ஓர் ஆர்வத்தில் அமைப்பிற்குள் வந்தவன் அல்ல. மிகப் பெரிய தலைவனாக வரவேண்டிய ஒருவன், இப்படியொரு நிலையை எடுத்துவிட்டான்.

அவருடைய முகநூல் பதிவை நீங்களோ, கட்சி நிர்வாகிகளோ கவனிக்கவே இல்லையா?

” முகநூலைப் பார்க்கும் வழக்கம் எனக்கு இல்லை. ‘விளையாட்டாகப் போட்டிருக்கான்’ என்று நினைத்துவிட்டார்கள். பேரணிக்குள் வந்துவிட்டு எனக்கு ஒரு வணக்கம் வைத்தான். அதன்பிறகு எங்கு போனான் என்று தெரியவில்லை.

பேரணியில் முன்னால் போய் நின்று, ஏற்கெனவே இடுப்பில் பெட்ரோலை நனைத்துவிட்டு, அதன் மேல் சட்டையைப் போட்டுக் கொண்டு வந்திருக்கான். யாரும் எதிர்பாராத நேரத்தில் கொளுத்திக் கொண்டான். மிகுந்த மனவேதனையில் இருக்கிறேன்.

முத்துக்குமார் மரணத்தைத் தொடர்ந்துதான், இதுபோன்ற செயல்கள் அதிகரிக்கின்றன. இதைத் தடுப்பதற்கு என்னதான் வழி?

வரலாற்றின் போக்கில் பயணித்தால், மானத்தோடும் வீரத்தோடும் இருந்த இனம், பிற்காலத்தில் தாழ்வு மனப்பான்மையால் போர்க்குணமற்று இருந்துள்ளது.

மாலிக் காபூர் படையெடுத்து வரும்போது, பல்லாயிரக்கணக்கான மக்கள், ‘தங்களைக் கொன்றுவிடுவார்’ என தீக்குளித்து இறந்து போனார்கள். அந்தப் பலகீனம் தொடர்கிறது. ஆழ்மனதில் உள்ள உணர்வுகளை அதிகாரவர்க்கம் அடக்கி ஒடுக்குகிறது.

அவன் உணர்வுகளை நான் வெளிக் கொண்டு வரும்போது நிறைவடைகிறான். வாகனம் ஓட்டி வந்த ஒரு பெரியவரை சாலையில் நிறுத்தி அடிக்கும்போது பார்க்கும் அனைவருக்கும் கொதிப்பு ஏற்படுகிறது. இது தமிழனின் அவமானமா? அல்லது தமிழ் தேசியத்தின் அவமானமா? ஒரு வாகனத்தில் வந்த இஸ்லாமிய பெண்ணைத் தாக்கும்போது அவர் அழுகிறார்.

அங்கு அவரை இஸ்லாமியராக பார்க்கவில்லை. தமிழராகத்தான் பார்க்கிறோம். இதைப் பார்க்கும் பிள்ளைகள், ‘ நம்மை அடிக்கிறார்களே…எதுவும் செய்ய முடியாதா?’ என்ற எண்ணம் வரும்போதுதான், முத்துக்குமார், செங்கொடி, ரவூப் போன்றவர்கள் வருகிறார்கள். இதுவே ஒரு ஜனநாயக வடிவமாக மாறிவிடுகிறது. வலுவான பிள்ளையாக இருந்தால் எதிர்தாக்குதல் நடத்தும்.

இந்திரா காந்தி சுட்டுக் கொன்றபோது, இறந்த 19 பேரும் தமிழர்கள். ஜெயலலிதா கைதுக்கு எத்தனை பேர் இறந்தார்கள்? இதை எப்படி எடுத்துக் கொள்வது? பலகீனத்தின் வெளிப்பாடுதான். விஜய் படம் தாமதமாகும்போதும் 2 பேர் சாகிறான்.

இதை ஒரு கட்டுப்பாடான ராணுவமாக மாற்றினால்தான் சரிப்படும்.

தொண்டர்கள் தீக்குளித்து சாவதை தனக்கான பெருமையாகக் கருதக்கூடிய தலைவர்கள்தானே இங்கிருக்கிறார்கள்?

நான் என் பிள்ளைகளை சொல்லிச் சொல்லி வளர்க்கிறேன். இதுபோன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது என்றுதான் நாள்தோறும் அவர்களிடம் பேசுகிறேன். எங்கள் கட்சியின் உறுப்பினர் படிவத்தில் உள்ள உறுதிமொழியில் இதையும் ஒன்றாக இணைக்க விரும்புகிறேன்.

ஒவ்வொரு தமிழனையும் பாதுகாக்க வேண்டும். உயிரைக் கொடுத்து சாதிக்க முடியும் என்றால், நானே உயிர் கொடுக்க முன் வருவேன். எந்தத் தீர்வும் ஆட்சியாளர்களால் ஏற்படப் போவதில்லை. மொழிக்காக, இனவிடுதலைக்காக, முல்லை பெரியாறுக்காக என எவ்வளவோ பேர் உயிரிழந்தார்கள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதானே வருகிறோம். இந்த உயிரிழப்புகள் திராவிடக் கட்சி ஆட்சியாளர்களால், மறக்கடிக்கப்பட்டுவிடுகிறது. இது நினைவூட்டப்பட்டு, வார்த்தெடுக்கப்படுவதில்லை. என்னிடம் பேசிய தமிழ்த் தேசிய தலைவர் பெரியார் அண்ணா பேச்சைக் கேட்டு வந்த நாங்கள் எல்லாம் போராளியாக மாறிவிட்டோம்.

நீங்கள் வாக்காளிகளாக மாறிவிட்டீர்கள். எதிரியிடம் அகப்பட்டாலும் சைனைட் குப்பியைக் கடித்து நொடியில் உயிர்விடுவோம். தமிழ்நாட்டில் ஒரு நொடியில் மரணிப்பதைவிட, மரணத்தை ரசித்து ருசித்து மரணிப்பவன்தான் உண்மையான வீரன்.

அப்படி ஒரு வீரம் செறிந்த மாநிலத்தில், ஏன் நல்ல வீரர்களை உருவாக்கவில்லை என வேதனைப்பட்டார். தம்பி விக்னேஷ் இறந்தது கட்சிக்காகவோ, எனக்காகவோ இல்லை. தமிழ் வாழ்க என்று சொல்லிவிட்டுத்தான் உயிர் நீத்திருக்கிறான். இது ஓர் உயர்ந்த நோக்கம்.

தமிழ்த் தேசிய உணர்வுகள் தூண்டப்படும்போது தற்கொலை நிகழ்க்கிறது என்றால் அதற்கு காரணம் யார்?

பந்தை தண்ணீருக்குள் அழுத்தி வைக்கப்படும்போது, அதுவாக பிய்த்துக் கொண்டு வெளியில் வரும். நான் பேசியதை ஜெயலலிதா பேசியிருந்தால், தமிழனுக்கு ஆறுதல் வந்திருக்கும்.

மூன்று பேரை நிறுத்தி வைத்து அடிப்பதை காணொலியில் பார்க்கும்போது என்ன மனநிலையில் நமது பிள்ளைகள் இருப்பார்கள்? தமிழர்கள் தாக்கப்படுவதை, கொல்லப்படுதை தினம்தோறும் பார்ப்பவன் எப்படி வளர்வான்?

மற்ற தேசிய இனங்களைப் பார்த்து ‘ என்னுடைய இனம் ஏன் வளரவில்லை’ என்ற சிந்தனையோடு வளர்க்கப்படுபவன், புறச்சூழலில் உள்ள நிலையைக் கவனிக்கிறான். அதுவே, தவிர்க்க முடியாமல் இதுபோன்ற சூழல்களை நோக்கி அழைத்துச் செல்கிறது.

விக்னேஷ் போன்று பல இலட்சக்கணக்கான இளைஞர்கள், அதே கொதிநிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களை அடக்கினால், இப்படித்தான் நடக்கும்.

தீக்குளிப்பு என்பது பலகீனத்தின் வெளிப்பாடு என்கிறீர்கள். ஆளும் அரசின் செயல்பாடுகள்தான் இவற்றைத் தீர்மானிக்கிறதா?

“என் மரணமாவது உசுப்பட்டும்” என்று சொல்லித்தான் விக்னேஷ் இறந்தான். ஈழப் படுகொலையின்போது முத்துக்குமார் உணர்வை சூடேற்றிவிட்டான். மூன்று பேரும் தூக்குக்கு வந்துவிடுவார்களோ எனப் பயந்து செங்கொடி ஒரு கொதிநிலையை உருவாக்கினார்.

அந்த மாதிரி கொதிநிலையை உருவாக்க முடியாதா என விக்னேஷ் எண்ணிவிட்டான். தமிழ்த் தேசிய அரசியலை சி.பா.ஆதித்தனார், ம.பொ.சி போன்றவர்கள் வலிமையோடு முன்னெடுத்தார்கள். இப்போதுள்ள புறச்சூழல் வேறு. கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படும்போது, தாக்குதலில் ஈடுபட்டவர்களை அந்த மாநில அரசு பாதுகாக்கிறது.

‘ தமிழர்கள் காப்பாற்றப்பட்டார்கள்’ என்ற செய்தி வந்திருந்தால், இவன் மனம் ஆறுதல் அடைந்திருக்கும். அந்த அதிகாரம் அடிப்பவனைப் பாதுகாக்கிறது. மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. இறையாண்மை, ஒருமைப்பாடு என்று பேசிவிட்டு அமைதியாக இருக்கிறார்கள்.

இவ்வளவு தாக்குதல் நடந்த பிறகும், பத்திரிகையாளர்களை அழைத்து ஏன் ஜெயலலிதா பேசவில்லை? வெள்ளத்தின்போது வாட்ஸ்அப்பில் பேசியதுபோலகூட பேசவில்லை.

அங்கு அடிக்கிற காட்சிகளை தமிழக முதல்வர் பார்க்கிறார். இதைப் பார்த்து என்ன சொல்லியிருக்க வேண்டும்? மக்களுக்குள் கொதிநிலை உருவாகும். மாபெரும் போராட்ட வடிவமாக மாறும்.

கன்னட மக்களுக்கு எதிராக திரும்பும் என கர்நாடக அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், என்னுடைய உயிர்மேல் தமிழக அரசுக்கு அக்கறை உள்ளது என்ற எண்ணம் மக்களுக்கு வந்திருக்கும்.

அதையே செய்யாமல், இதெல்லாம் ஒரு பிரச்னையா என 91,308 பேர் கட்சியில் சேரும் விழாவில், வாழை மரம், தோரணம் எனக் கொண்டாட்டம் வேறு. பத்து நாளைக்குப் பிறகு கொண்டாட வேண்டியதுதானே?

இந்த நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நகர்வு ஏன்? நீங்கள் பேசியிருந்தால் ஏன் இவ்வாறு நடக்கப் போகிறது? தேர்தல் வெற்றிக்காக, தேசிய இனத்தின் உரிமையை விட்டுக் கொடுப்பதை எப்படி சகித்துக் கொள்ள முடியும்?

காவிரி என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக என் உடம்பில் ஓடும் இரத்தம். அதைப் பற்றிக்கூட ஆளும் அரசுக்கு என்ன அக்கறை இருக்கிறது? நாதியற்றுக் கிடக்கிறோம் என்ற மனநிலை வரும்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் காரணமாகிவிடுகிறது.

எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடக்காமல் தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்?

“உயிரிழப்பதால் யாருடயை கவனத்தையும் ஈர்க்க முடியாது. கண்ணீiரைத் துடைக்கக் கரம் இல்லாத தனித்துவிடப்பட்ட இனமாக நாம் இருக்கிறோம். இலட்சக்கணக்கான தமிழ்த் தேசிய இளைஞர்களை உருவாக்க வேண்டிய விக்னேஷ், தீக்குளித்து மரணித்துவிட்டான்.

மிகப் பெரிய இழப்பு. இதுபோன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது என தம்பிகளிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். கட்சியின் உறுதிமொழி ஏற்பிலும் கட்டாயப்படுத்துவோம் என்றார் சோகம் கலந்த முகத்துடன்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் அருந்தும் பியரும் ஆண்களின் ‘கவலையும்’…!!
Next post கிணற்றில் விழுந்து சிறுவன் பலி…!!