தமிழக உள்ளூராட்சி தேர்தல் தள்ளி வைக்கப்படுமா?

Read Time:14 Minute, 29 Second

article_1474259498-kasinathதமிழக உள்ளூராட்சி மன்றத் தேர்தல், மிகவும் பரபரப்பான காலகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. “எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில், தமிழகத்தில் உள்ள உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்”; “மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்த வேண்டும்”; “மத்திய அரசாங்க பணியாளர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்” என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்கட்சிகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. அந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்கான திகதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி தேர்தல்களில் முறைகேடு நடக்கும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே உயர்நீதிமன்றத்தில், இவ்வாறான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என்று, அடுத்தடுத்து மூன்று தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆளுங்கட்சியாக இருப்பதால், உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தேர்தலிலும் வெற்றி பெற, யுக்தி வகுத்து செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த அதிக எம்.எல்.ஏக்கள் பலம் தி.மு.கவுக்குக் கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்தி அக்கட்சியும் அதிக இடங்களை, உள்ளூராட்சி அமைப்புகளில் கைப்பற்றி விட வேண்டும் என்று வியூகம் வகுத்துள்ளது.

இரு முக்கிய கட்சிகளுமே, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களைப் பெறத் தொடங்கி விட்டன. இதுவரை, மேயர் பதவியை மக்களே நேரடியாக தேர்வு செய்தார்கள். ஆனால் இப்போது, உள்ளூராட்சி அமைப்புத் தேர்தலே கவுன்சிலர்களுக்கு நடைபெறும் தேர்தலாக மாற்றப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் கூடித்தான், உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு 12 மாநகராட்சிகளுக்கும் மேயர்களை தெரிவு செய்யப்போகிறார்கள். அதேபோல்த்தான் நகரசபைத் தலைவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள். ஜனநாயக முறையில், கிராமராஜ்யம் உருவாக்குவதற்கென கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்து ராஜ் தேர்தல் முறை, தமிழகத்தைப் பொறுத்தவரை, முழுக்க முழுக்க ஒரு மறைமுகத் தேர்தலாக இப்போது மாறியிருக்கிறது.

இரு முக்கிய கட்சிகளான அ.தி.மு.க மற்றும் தி.மு.க தவிர்த்து, மற்றக் கட்சிகள் எல்லாம் திக்குத் தெரியாத காட்டில் நிற்பது போல் திகைத்துக் கொண்டிருக்கின்றன. உள்ளூராட்சித் தேர்தல் கூட்டணியும் அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை. வெற்றி வாய்ப்பும் புலப்படவில்லை. அகில இந்தியக் கட்சிகளான பாரதீய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியுமே, இந்த நிலையில்தான் தவிக்கின்றன. நான்கு மாதங்களாக நியமிக்கப்படாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பதவிக்கு, இப்போதுதான் அ.தி.மு.கவிலிருந்து விலகி வந்த திருநாவுக்கரசர், தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, காங்கிரஸ் கட்சிக்குள் உருவாகியிருக்கும் கோஷ்டிகளைச் சரி செய்து, உள்ளூராட்சித் தேர்தலைச் சந்திப்பதே, பெரும் சவாலாக அமையும். காவேரி பிரச்சினையில் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை என்ற பெயரை, இந்த முறை பாரதீய ஜனதாக் கட்சி பெற்றுவிட்டது.

இந்த இமேஜை நீக்கி, அக்கட்சி உள்ளூராட்சித் தேர்தலில் ஒரு சில இடங்களிலாவது வெற்றி பெற, பாடுபட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. தி.மு.க மற்றும் அ.தி.மு.கவுக்கு மாற்றாக உருவான தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், எதிர்காலம் இருண்டு விட்ட நிலையை எண்ணிப் பார்த்து வருந்திக்கொண்டிருக்கிறது. அதே வரிசையில்தான், ம.தி.மு.கவின் தலைவர் வைகோ இருக்கிறார். இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் உள்ளூராட்சித் தேர்தலுக்காக புதிய கூட்டணி அமைப்பதைத் தவிர்த்து, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தப் பாதையை தெரிவு செய்யலாம் என்ற எண்ணவோட்டத்தில் காத்திருக்கின்றன.

பாட்டாளி மக்கள் கட்சியோ, அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக அறிமுகம் செய்தே, வன்னியர்கள் அதிகம் உள்ள வட மாவட்டங்களில், வெற்றி பெற முடியாத சோகத்தில் இருக்கிறது. அக்கட்சியும் உள்ளூராட்சித் தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்க விரும்பாது. இன்னொரு முறை, தன்னந்தனியாக களத்தில் நின்று உள்ளூராட்சித் தேர்தலைச் சந்திக்க வேண்டிய தர்மசங்கடத்தில், பாட்டாளி மக்கள் கட்சியும் அதன் தலைவர் டாக்டர் ராமதாஸும் இருக்கிறார்கள். ஏறக்குறைய எப்பக்கமும் போக முடியாத இடியப்பச் சிக்கலில், திருமாவளவன் மாட்டிக் கொண்டிருக்கிறார். மீண்டும் ஒரு முறை, உள்ளூராட்சித் தேர்தல், அ.தி.மு.கவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான நேரடிப் போட்டியாக மாறும் சூழல் நிலவுகிறது.

அதே சமயத்தில், இந்த உள்ளூராட்சித் தேர்தலை, இப்போது சூழ்ந்து கௌவிக் கொண்டிருப்பது காவேரிப் பிரச்சினையாகும். தஞ்சை உள்ளிட்ட காவேரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் படுத்துவிட்டது. காவேரிப் பிரச்சினையில், மத்திய அரசாங்கத்தையும் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடைபெற்ற தாக்குதலையும் கண்டித்து, செப்டம்பர் 16ஆம் திகதி நடைபெற்ற பந்த், வெற்றிகரமாக முடிந்துவிட்டது. “வன்முறைக்கு இடமளிக்காமல் சட்டம்- ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியது மாநில அரசுகளின் கடமை” என்ற எச்சரிக்கையுடன் நடைபெற்ற இந்த பந்தில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர் விக்னேஷ் தீக்குளித்து விட்டார். படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். காவேரி பிரச்சினையின் முதல் தியாகம் விக்னேஷ் மரணம்.

கர்நாடகாவில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி; தமிழகத்தில், தீக்குளிப்பில் ஒருவர் பலி. இது தற்போதையை காவிரி பிரச்சினையின் நிலை. இந்தப் பரபரப்பான சூழலில்தான், உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கையும், உயர்நீதிமன்றத்தில் உள்ளூராட்சித் தேர்தல் குறித்து நிலுவையில் உள்ள வழக்கும், முக்கியத்துவம் பெறுகின்றன.

இது தவிர, உள்ளூராட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடுகள் குறித்த தொகுதிகளை அடையாளம் கண்டு அறிவிக்குமாறு உயர்நீதிமன்றத்தினால், தமிழ்நாடு தேர்தல் ஆணையகத்துக்கு உத்தரவிடப்பட்டது. காவேரி, உயர்நீதிமன்ற உத்தரவு, மகளிர் இட ஒதுக்கீடு போன்ற முக்கியப் பிரச்சினைகளின் பிடியில், ஒக்டோபர் மாதம் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சித் தேர்தல் இருக்கிறது.

எதிர்வரும் 20ஆம் திகதி வரை, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கர்நாடக மாநில அரசு, காவேரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும். அதை நம்பியும் இப்போது வந்து கொண்டிருக்கும் தண்ணீரை நம்பியும் எதிர்வருகின்ற 20ஆம் திகதியிலிருந்து, மேட்டூர் அணையை தமிழகத்தில் உள்ள காவேரி டெல்டா விவசாயத்துக்கான நீர்பாசனத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ஆகவே, உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் நேரத்தில், காவேரி டெல்டா பகுதிகளில், விவசாயப் பணிகள் சூடுபிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. “உள்ளூராட்சித் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும்” என்று விவசாயச் சங்கத் தலைவர் அறிவித்ததற்கு, இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இது தவிர, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சென்னை மத்திய சிறையில் இருக்கும் பேரறிவாளன், சிறைக்குள் தாக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வேறு, இன்னொரு பக்கம் வலுத்து வருகிறது. தி.மு.க தலைவர் கருணாநிதியே, இந்த முறை, “பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும்” என்று மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அதேநேரத்தில், எதிர்வருகின்ற 20ஆம் திகதியுடன், காவேரிப் பிரச்சினை முடிவுக்கு வந்து விடுமா என்றால், அதற்கும் வாய்ப்பில்லை. ஏனென்றால், அன்றைய தினம் உச்சநீதிமன்றம் மீண்டும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் போகிறது. அதேபோல், உச்சநீதிமன்ற உத்தரவின்படி கூட்டப்பட்ட காவேரி மேற்பார்வைக்குழுவின் முடிவும், அன்றைய தினம் வெளிவரலாம்.

அந்த முடிவுகள் எப்படியிருக்கும் என்பதை வைத்து, காவேரிப் பிரச்சினையால், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையில் பதற்றம் தணியாத சூழல் உருவாகலாம். எப்படிப்பார்த்தாலும், இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் இறுக்கமான சூழல், இந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது தமிழகத்தில் நிலவுகிறது. ஆகவே, விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, உள்ளூராட்சித் தேர்தல் தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வியும் அரசியல் கட்சிகள் வட்டாரத்தில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.

அரசியல் சட்டப்படி, உள்ளூராட்சித் தேர்தல்கள், ஐந்து வருடத்துக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். ஒருவேளை, காவேரிப் பிரச்சினை, அது தொடர்பான பதற்றங்கள் போன்றவற்றை மனதில் வைத்து, உள்ளூராட்சித் தேர்தல் தள்ளிப் போகுமா என்ற பதற்றமும் இப்போது அரசியல் கட்சிகளைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. 20ஆம் திகதி, உச்சநீதிமன்றத்தில் வரும் காவேரி வழக்கும் அதன் பிறகு காவேரி மேற்பார்வைக்குழு எடுக்கும் முடிவும், தமிழக உள்ளூராட்சி தேர்தல் திகதியை நிர்ணயிக்கும் என்பதே, இப்போதைய நிலைமை.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாகரனிடன் குறைந்த பட்சம் எதிர்மறைக் கவர்ச்சியைக்கூட நான் காணவில்லை!! : முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ் பற்றன். (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்…!!
Next post பெண்களை மையப்படுத்தி படம் எடுக்கும் ஐஸ்வர்யா தனுஷ்…!!