8 பேர் கொலையில் 6 பேரின் உடல்கள் மீட்பு: உடந்தையாக இருந்த சாமியார் சிக்குகிறார்…!!

Read Time:9 Minute, 29 Second

201610021938301132_6-people-were-killed-8-people-recovery-bodies-priest-was_secvpfதிருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 35). ரெயில்வே அதிகாரி ஒருவரிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 7-ந்தேதி அவர் திடீரென்று மாயமானார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தங்கதுரையின் செல்போன் எண்ணை வைத்து துப்பு துலக்கினர். இதில் அவரது நண்பர் கிருஷ்ணசமுத்திரத்தை சேர்ந்த சப்பாணி(35) நகைக்காக தங்கதுரையை கொன்று புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சப்பாணி அடுத்தடுத்து 8 பேரை கொலை செய்து உடல்களை புதைத்த திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதிர்ச்சியடைந்த போலீசார் முதல் கட்டமாக தங்கதுரையின் உடலை தோண்டி எடுத்து, அவரது உடல் பாகங்களை மருத்துவ ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் யாரையெல்லாம் சப்பாணி கொன்று புதைத்து உள்ளார் என்று விசாரித்தனர்.

இதில், திருவெறும்பூர் மேலகுமரேசபுரத்தை சேர்ந்த கோகிலா (70), பாப்பாக்குறிச்சியை சேர்ந்த அற்புதசாமி (70), கீழகுமரேசபுரம் விஜய்விக்டர் (27), கூத்தைப்பாரை சேர்ந்த சத்தியநாதன் (45), பனமட்டை என்கிற பெரியசாமி (75), உப்பிலியபுரத்தை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் குமரேசன் (50), வேங்கூரை சேர்ந்த தங்கதுரை (36), சப்பாணியின் தந்தை தேக்கன் (75) ஆகிய 8 பேரை கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.

சப்பாணி புதையல் இருப்பதாக கூறி, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு ஒவ்வொருவரையும் அழைத்து சென்று, அவர்களிடம் உள்ள நகை, பணத்தை பறித்துக்கொண்டு பின்னர் அவர்களை கொடூரமாக கொலை செய்து உடல்களை புதைத்துள்ளார். ஒவ்வொருவருடைய உடலையும் எங்கு புதைத்தார் என போலீசாரிடம் அடையாளமும் காட்டினார்.

இதையடுத்து மீதமுள்ள 7 பேரின் உடல்களையும் தோண்டி எடுத்து பரிசோதனை நடத்த வேண்டி இருந்ததால், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சப்பாணியை நேற்று முன்தினம் திருவெறும்பூர் போலீசார் காவலில் எடுத்தனர். நேற்று காலை திருவெறும்பூர் தாசில்தார் ரெங்கராஜன் முன்னிலையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன், திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர் சரவணன் தலைமையிலான குழுவினர் கிருஷ்ணசமுத்திரம் பகுதிக்கு சென்றனர்.

அங்கு வயல்காட்டு பகுதியில் ஏற்கனவே தங்கதுரையின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட இடத்துக்கு அருகிலேயே புதைக்கப்பட்டு இருந்த சத்தியநாதனின் உடலையும் தோண்டி எடுத்து உடற்பாகங்களை சேகரித்தனர். சத்தியநாதனின் உடலை அவருடைய மகள் சந்தியா போலீசாருக்கு அடையாளம் காட்டினார்.

சத்தியநாதன் உடல் புதைக்கப்பட்டு இருந்த இடத்தில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் கிருஷ்ண சமுத்திரம் செக்குபாறை அய்யனார் கோவில் குளக்கரை அருகே புதைக்கப்பட்டு இருந்த குமரேசன் உடலையும் தோண்டி எடுத்தனர். ஆனால் குமரேசன் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கை, கால்கள் துண்டு, துண்டாக ஆங்காங்கே சிதறி கிடந்தது. தலை மட்டும் சிறிது தூரத்தில் தனியே கிடந்தது. தலை மற்றும் பிற பாகங்களை போலீசார் சேகரித்தனர். குமரேசனின் உடலை அடையாளம் காட்டிய அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இதனை தொடர்ந்து சப்பாணியின் தந்தை தேக்கனின் உடலை ஓட்டாங்குச்சி பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பிலும், கீழகுமரேசபுரத்தை சேர்ந்த விஜய் விக்டரின் உடலை வடக்கு வயல் சப்பாணி கருப்பு கோவில் அருகேயும், மேலகுமரேசபுரத்தை சேர்ந்த கோகிலாவின் உடலை கூத்தைப்பார் செவந்தாகுளம் அருகேயும் சப்பாணி புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இந்த உடல்களையும் போலீசார் தோண்டி எடுத்து உடற்பாகங்களை சேகரித்தனர். இதில் விஜய்விக்டர் உடலில் துணி இல்லாமல் நிர்வாண நிலையில் புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அவரது ஒரு காலை வெட்டி கல்லணையில் வீசிவிட்டதாகவும், மற்றொரு காலை அருகே இருந்த கல்லூரி வளாகத்துக்குள் வீசி விட்டதாகவும் சப்பாணி போலீசாரிடம் கூறினார். மேலும், கோகிலாவின் தலை மற்றும் கால்களை வெட்டி குளத்தில் வீசி விட்டதாகவும் கூறினார்.

இதுவரை தங்கதுரை உள்பட 6 பேரின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே நேற்று காலை உடல்கள் தோண்டி எடுக்கப்பட்ட இடத்துக்கு தனலெட்சுமி என்ற பெண் தனது உறவினர்களுடன் வந்தார். அப்போது அவர் கூறுகையில், “கிருஷ்ணசமுத்திரம் பகுதியை சேர்ந்த எனது கணவர் சண்முகம்(வயது 55) விவசாயம் செய்து வந்தார். அவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் திடீரென்று மாயமாகி விட்டார்.

இதுகுறித்து திருவெறும்பூர் போலீசில் புகார் அளித்தோம். மாயமானது குறித்து வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆனால் இப்போது 8 பேரை சப்பாணி கொன்று புதைத்து உள்ள தகவல் கேள்விப்பட்டு எனது கணவரையும் கொன்று புதைத்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே இதுகுறித்து விசாரித்து எனது கணவரை கண்டுபிடித்து தர வேண்டும்“ என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு சிலரது உடல்களை புதைத்து பல மாதங்கள் ஆகி விட்டதால் அந்த உடலில் சதைகள் இன்றி எலும்பாக இருந்தது. சேகரிக்கப்பட்ட உடல்பாகங்கள் மருத்துவ ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இதில் கொலை செய்து வீசப்பட்ட அற்புதசாமி, பெரியசாமி ஆகியோரது உடல் பாங்களை தேடும் பணி இன்று நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த உடல்களை திருவெறும்பூர் அருகே உள்ள பிரபல கல்லூரி வளாகத்தில் வீசியுள்ளதாக சப்பாணி போலீசாரிடம் கூறியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட குமரேசனின் உறவினர் சீதா கூறும்போது, சப்பாணிக்கும், கோட்டப்பாளையத்தை சேர்ந்த சாமியார் செல்லையாவுக்கும் தொடர்பு உள்ளது . அந்த சாமியார் மூலம் தான் குமரேசனுக்கும், சப்பாணிக்கும் பழக்கம் ஏற்பட்டது. எனவே போலீசார் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

இதனால் சந்தேகமடைந்துள்ள போலீசார் சாமியார் செல்லையாவை பிடித்து விசாரணை நடத்த உள்ளனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவில் இந்த சம்பவத்தில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

இந்த சம்பவத்தில் மேலும் பலர் நகை, பணத்துக்காகவும், நரபலிக்காவும் பலர் கொன்று புதைக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதன் அடிப்படையில் போலீசார் அதிரடி விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதைவிட ஒரு மிருகத்தனமான செயலை எந்த மனிதனாலும் செய்ய முடியாது…!! வீடியோ
Next post திருமங்கலம் அருகே இருதரப்பினர் மோதல்: 5 பேர் காயம்…!!