எரிதணல்…!! கட்டுரை

Read Time:15 Minute, 36 Second

article_1480006394-ssஇலங்கையில் வாழும் அனைத்து இனங்களைச் சேர்ந்த மக்களும் இனவாதம் என்கின்ற எரிதணலுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கின்றனர். இந்த எரிதணலை,ஊதிஊதிப் பெரும் தீயாக எரியச் செய்யலாம். இல்லாவிடின், நீருற்றி அணைத்து விடலாம். இதில் எதைச் செய்யப் போகின்றோம் என்பதே நமக்கு முன்னே இருக்கின்ற வினாவாகும்.

தற்போது நடைமுறையில் இருக்கும் முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்றுவதற்கான நிர்ப்பந்தம் பற்றிஅரசாங்கம் விடுத்தஅறிவிப்பையடுத்து, முஸ்லிம் சமூகம் பாரிய உணர்வு மேலீட்டுக்கு ஆளாகியது. இந்நிலையில் கொழும்பு, புறக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தெரிவித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் கைதுசெய்யப்பட்டார். இதற்குச் சற்று முன்னதாக, முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறுப்புக் கருத்துக்களைப் பேசிவந்த டான் பிரியசாந்த் கைது செய்யபட்டிருந்தார். இவ்விரு கைதுகளுக்குப் பின்னரான களநிலவரங்கள் அச்சமூட்டுபவனவாக இருந்தன. எவ்வேளையிலும் தீயசக்திகள் சிங்கள-முஸ்லிம் இன மோதல்களை முடுக்கிவிடக் கூடிய அபாயமும் இருந்தது.

நாட்டில் இவ்வாறான உணர்வெழுச்சி நிலை காணப்பட்ட சந்தர்ப்பத்திலேயே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அவ்வுரையில் அவர்,“இலங்கையைச் சேர்ந்த நான்கு குடும்பங்களின் 32 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்திருக்கின்றனர்” என்று கூறினார். சுற்றுலா விசாவில் இலங்கை வருவோர் முஸ்லிம் சர்வதேசப் பாடசாலைகளில் மேற்கொள்ளும் நடவடிக்கை பற்றியும் கருத்துத் தெரிவித்தார். அண்மைக்கால இனவாதத்தின் தோற்றுவாய் ஓரிரு சிங்களக் கடும்போக்கு இயக்கங்களாக இருந்தாலும் கூட, இனவாதத்தை விமர்சித்தே நல்லாட்சி அரசாங்கம் வெற்றியீட்டிருந்த போதிலும் கூட, நீதி அமைச்சர் அவ்வியக்கங்களின் பெயரைச் சுட்டிக் காட்டாமல், “சிலபிக்குகள் அரசியலுக்கு வர முயற்சிக்கின்றனர்” என்றதொனியில் பொதுப்படையாகக் குறிப்பிட்டு உரையாற்றினார்.

கடந்த தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகளால் வெற்றியை உறுதிப்படுத்திய அரசாங்கத்தின் பிரதிநிதியான இவர், நாட்டில் இனவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கின்ற வேளையில், பொதுபலசேனா அமைச்சர் பேசிய கருத்துக்குச் சாதகமான கருத்தை வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில், பயங்கரவாதிகளோடு முஸ்லிம்களைத் தொடர்புபடுத்திப் பேசியமைக்காக முஸ்லிம் அரசியல்வாதிகள், அமைப்புக்கள், செயற்பாட்டாளர்கள் அமைச்சர் விஜயாசவுக்கு தமது அதிருப்தியைத் தெரிவித்திருக்கின்றனர்.

இது இவ்வாறிருக்கையில், சிங்கள இயக்கங்கள் பல ஒன்றிணைந்து கண்டியில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடாத்தின. பௌத்தத்தை பாதுகாப்பதாக கூறிக் கொள்ளும் இவ்வியக்கங்கள், இனவாதக் கருத்துக்களை பரவலாக்குவதற்காகவே வழக்கம்போல இந்த ஆர்ப்பாட்டத்தையும் பயன்படுத்தியிருந்தன. இவ்வாறிருக்க, அன்றிரவு கொழும்பு புறநகர்ப் பகுதியில் உள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமானஆடை விற்பனை நிலையமும் தீக்கிரையாகியது.

கடந்த காலங்களில், கொழும்பு சுற்றயல் பிரதேசங்களிலும் பேருவளையிலும் இது மாதிரியே சில வர்த்தக நிலையங்கள் எரிந்து நாசமாகின. இந்தச் சம்பவங்கள் சதித்திட்டம் என்றும், முஸ்லிம்களை வர்த்தக ரீதியாக முடக்கும் இனவாதிகளின் திட்டம் என்றும் விபத்து என்றும் பலதரப்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன. உத்தியோக பூர்வமாக அதனை உறுதிப்படுத்தி அறிக்கை பெற்றுக் கொள்வதிலும், நட்டஈட்டைப் பெறுவதிலும் கூட பாரிய சிக்கல்களைக் கடையுரிமையாளர்கள் எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

எதுஎவ்வாறிருப்பினும், இனவாத செயற்பாடுகள் முன்கையெடுத்திருந்த காலப்பகுதியிலேயே இவ்வாறாக வியாபார நிலையங்கள் விபத்தில் (?) சிக்கிக் கொண்டன என்பது, பல்வேறு கோணங்களில் சிந்திக்க வைத்துள்ளது.

முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த உத்தேசம் பற்றிய தகவல் வெளியானது முதற்கொண்டு வர்த்தக நிலையம் தீக்கிரையானது வரையாக இடம்பெற்ற அடுத்தடுத்த நிகழ்வுகள், நடப்பு நிலைமைகளை மிகவும் மோசமாக்கியுள்ளன.

நீதியமைச்சர், தமது உரையில் உட்பொதிந்திருந்த பாரதூரத் தன்மையை பின்னர் அவர் உணர்ந்து கொண்டிருந்தமையால், “பொதுமக்களை அறிவூட்டுவதற்காகவே அத்தகவலை நாடாளுமன்றத்தில் வெளியிட்டேன்” என்று நியாயப்படுத்தியுள்ளார். அத்தோடு நின்றுவிடாமல் பல்லினச் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டிருக்கின்றார்.

ஆரம்பத்தில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் வைத்து பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் சிலவற்றின் பிரதிநிதிகளை அவர் சந்தித்திருக்கின்றார். அதன் பிறகு கடந்த புதன்கிழமை முஸ்லிம் பிரதிநிதிகளை அமைச்சர் சந்தித்துள்ளார். இச்சந்திப்புக்கள் பற்றி அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை என்றாலும், நாட்டில் தற்போதுள்ள நிலைவரங்கள், இனவெறுப்புப் பேச்சுக்கள், இனங்களுக்கு இடையிலான உறவைக் கட்டியெழுப்புதல் பற்றி இங்கு பேசப்பட்டதாக அறியமுடிகின்றது.

இதற்கிடையில் அரசாங்கம் ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீதிஅமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்களை மறுதலிக்கும் விதத்தில் இவ் அறிவிப்பு அமைந்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்புப் பேரவை சார்பாக, அமைச்சர் ராஜிதசேனரட்ன இவ்வறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார்.

இலங்கையைச் சேர்ந்தவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்இல் அங்கத்தவர்களாக இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும், அவ்வாறு இணைந்து கொண்டதாகக் கூறப்பட்ட நபர்களின் குடும்பங்கள் பலவருடங்களுக்கு முன்னரே இலங்கையிலிருந்து இருந்து சென்று, வெளிநாட்டில் வாழ்ந்து வந்துள்ளன என்று அமைச்சர் கூறியுள்ளார். ஜனாதிபதி சார்பாக அமைச்சர் ராஜித வெளியிட்டுள்ள இக்கருத்து மிகவும் முக்கியத்துவமானது.

ஜனாதிபதியும் பாதுகாப்புக் கவுன்சிலும் வெளியிட்டிருக்கின்ற நாசுக்கான இந்த மறுப்பறிக்கை, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, இஸ்லாமியப் பயங்கரவாதம் குறித்து கிலிகொண்டிருந்த ஏனைய இனங்களைச் சேர்ந்த மக்களுக்கும் ஓர்ஆறுதலான செய்தி என்பதை மறுக்க முடியாது. நல்லாட்சி அரசாங்கம் பற்றிய முஸ்லிம்களின் நம்பிக்கைகள் வீண்போகவில்லை என்பதையும் இந்த அறிவிப்பு ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம்.

இனவாத நிலைமைகள் மேலோங்கிச் செல்வதையும் நீதியமைச்சின் உரை அதற்கு ஊக்கமளிப்பது போல் அமைந்து விட்டதையும் எண்ணி அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கையை எடுத்திருப்பது மட்டுமன்றி நீதியமைச்சரும் தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார். அதற்குச் சமாந்திரமாக உயர்மட்டக் குழுவொன்றை அமைத்து இவ்விடயத்தைக் கையாள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது புறக்கணிக்க முடியாத ஒரு விவகாரமாக இருப்பதால், முஸ்லிம் சமூகப் பரப்பில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் இயக்கங்களும் ஓரளவுக்கு அக்கறை செலுத்தத் தொடங்கியிருக்கின்றன.

ஒரே இறைவனை, ஒரேநபியை வழிபடுகின்ற முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் இருக்கின்ற மார்க்க அமைப்புசார் முரண்பாடுகளுக்கு அப்பால் நின்று இன்றைய நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.

மிகமுக்கியமாக, முஸ்லிம் சமூகத்தின் தானைத் தலைவர்கள் என்றும் கட்டளைத் தளபதிகள் என்றும் சுயபிரகடனம் செய்து கொண்டுள்ள அரசியல்வாதிகள் கட்சி பேதங்களையும் கருத்து மோதல்களையும் ஒதுக்கி வைத்து விட்டுச் சமூகத்துக்காக ஒன்றிணைய வேண்டும்.

ஒருதேசத்தில் சிறுபான்மையினராக வாழும் மக்கள் பெரும்பான்மை மக்களுக்கு அஞ்சி, அடங்கி, பெட்டிப்பாம்பாக இருக்க முடியாது. ஆனால், பொறுமையுடனும் விவேகத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.

தமிழர்களின் இன உரிமைப் போராட்டம் முப்பது வருட அழிவுகளுக்குப் பிறகு, பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டதைக் கண்ணூடாகக் கண்டநாம், உலகில் பல முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்கள் மேற்குலக நாடுகளால் எவ்வாறு அழித்தொழிக்கப்படுகின்றார்கள்? என்பதை அறிந்து வைத்திருக்கின்ற நாம், புத்திசாதுரியமாக நடந்து கொள்ளவேண்டும்.

நெடுங்காலம் யுத்தம் புரிந்த தமிழினமே கடைசியாக மேசையில் உட்கார்ந்து பேசித் தீர்க்கும் நிலைக்குத்தான் வந்திருக்கின்றது என்ற அடிப்படையில், இப்போது ஏற்பட்டிருக்கின்ற இனமுறுகலைப் பேச்சுக்களின் மூலம் தணிவடையச் செய்வதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

அதேநேரம், அரசாங்கமானது அறிக்கை விட்டுவிட்டு வாழாவிருக்காமல், இனவாதத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் இஸ்லாமியத் தீவிரவாதப் பூச்சாண்டிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் சூறா சபை போன்ற அமைப்புக்கள் இவ்விவகாரத்தில் கூடுதலான கரிசனையை கொண்டியங்க வேண்டும். இஸ்லாமிய அமைப்புக்களுக்கு மட்டுமன்றி பௌத்த, தமிழ், கிறிஸ்தவ அமைப்புக்களுக்கும் இவ்விடயத்தில் உயரிய பொறுப்பிருக்கின்றது என்பதை இக்கட்டுரையில் குறிப்பிட்டாக வேண்டும்.

விசேடமாக, மூன்று பௌத்த பீடங்களும் இவ்விவகாரத்தில் தமது கவனத்தைச் செலுத்த வேண்டியிருக்கின்றது. இதனைச் சிறுபான்மை மக்களின் வேண்டுகோளாகவே கருதினாலும் பரவாயில்லை.

ஏனெனில், இலங்கையில் புராதனகாலம் தொட்டு மூவின மக்களும் எவ்வாறு வாழ்ந்தார்கள்? சிங்கள மன்னர்களுக்கு முஸ்லிம்கள் எவ்வாறு உதவினார்கள் என்பதை பௌத்தபீடங்களே நன்கறியும்.

முஸ்லிம்களும் தமிழர்களும் வழிப்போக்கர்களோ வந்தேறுகுடிகளோ அல்லர் என்ற விடயம், நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான் இனவாதிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதையெல்லாம் தெரிந்தும் புரிந்தும் வைத்திருப்பவர்கள் பௌத்தபீடாதிபதிகளான சங்கைக்குரிய தேரர்களே. எனவே, அவர்கள் இப்போது பேசவேண்டும்.

யுத்தத்தில் இருந்து மீட்டெடுத்த நாட்டை – எல்லா இனங்களும் சேர்ந்து, தங்களுடைய புத்திகெட்ட தனத்தாலும் தத்தமது இனம் மீதான அளவுக்கதிகமான வெறியாலும்…. இனவாதத்துக்குப் பலி கொடுத்துவிடக் கூடாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் குழந்தை பெற்றெடுத்த மனைவியின் தலையை மொட்டையடித்த கணவர்…!!
Next post தினமும் 100 பூனைகளை கொன்ற நபர்! காசுக்காக இப்படி செய்வதா? பலவீனமானவர்கள் படிக்க வேண்டாம்…!!