பிரபாகரனை முப்படைத் தளபதியாக நியமிக்க இருந்த பிரேமதாசா!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -97) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)

Read Time:22 Minute, 49 Second

timthumbபிரபாகரனை முப்படைத் தளபதியாக நியமிக்க இருந்த பிரேமதாசா!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-97)

• பாராளுமன்றத்துக்குள் படுகொலைத் திட்டம்

• ஆயுத ஒப்படைப்பில் பிரபாவின் தயக்கம்

ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்களின் தரம், எண்ணிக்கை தொடர்பாக இந்தியப்படை அதிகாரிகளுக்கு திருப்தி ஏற்படவில்லை. பிரபாகரனைச் சந்தித்து பேச வேண்டும் என்று விரும்பினார் இந்தியப் படைத் தளபதி ஹரிகிரத் சிங்.

ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதி (1987) யாழ் பல்கலைக்கழகத்தின் எதிரில் இருந்த புலிகள் இயக்க தலைமையகத்திற்குச் சென்றார் ஹரிகிரத் சிங்.

அங்கே பிரபாகரன், மாத்தையா, யோகி ஆகியோர் அவரை வரவேற்றனர்.

சுமார் இரண்டு மணிநேரம் பேச்சுக்கள் நடந்தன.

குறிப்பிட்டளவான ஆயுதங்கள் முதலில் ஒப்படைக்கப்பட வேண்டும். முதல் கட்டமாக ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள் போதியளவாக இல்லை என்று சுட்டிக்காட்டினார் ஹரிகிரத் சிங்.

“நாங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயார். ஆனால் ஏனைய இயக்கங்களிடமும் ஆயுதங்கள் இருக்கின்றன என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. அவர்களால் எமக்கு ஆபத்து ஏற்படலாம்” என்று திசையை மாற்றினார் பிரபாகரன்.

இதற்கிடையே புலிகள் இயக்கத்தினர் செய்திருந்த ஒரு காரியமும் இந்தியப்படை தளபதியின் காதுகளுக்கு எட்டியிருந்தது.

புலிகள் இயக்க உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் ஆகியோரிடம் இருந்த ஆயுதங்களில் ஒரு பகுதி தலைமையால் திரும்பப் பெறப்பட்டன.

யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திலீபனின் கீழ் செயற்பட்ட நவீனன் தான் ஆயுதச் சேகரிப்புக்கு பொறுப்பாக இருந்தார்.

சேகரிக்கப்பட்ட ஆயுதங்களில் தரமானவற்றுக்கு கிறீஸ் தடவி, பொலித்தீன் பைகளில் போட்டு பத்திரமாக புதைத்து வைக்குமாறு, இரகசிய உத்தரவு போட்டு விட்டார் பிரபாகரன்.

இதனை ‘டம்பிங்’ என்று சொல்வதுண்டு. இந்தியப்படைகள் வலுக்கட்டாயமான முறையில் ஆயுதங்களைப் பெற முயலலாம்.

அது தவிர பெருந்தொகையான ஆயுதங்கள் இருப்பதாகத் தெரிந்தால் இந்தியப்படைகளின் கண்கள் பட்டுவிடும். அதனால் தான் ‘டம்பிங்;’ பண்ணுமாறு கூறிவிட்டார் பிரபாகரன்.

இன்னொரு காரணம் இருந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தம், ஆயுதம் ஒப்படைப்புத் தொடர்பாக இயக்கத்துக்குள் பெரும்பாலானோருக்கு அதிருப்தி தான்.

தமிழீழம் தவிர்ந்த வேறு ஒரு தீர்வை ஏற்றுக்கொள்வதைப் பற்றி நினைத்துப்பார்க்கவே அவர்கள் தயாராக இருக்கவில்லை.

ஒப்பந்தம் முறியும், மீண்டும் தமிழீழத்துக்கான ஆயுதப்போராட்டம் தொடரும்: இந்தியாவைப் பகைக்காமல் இருப்பதற்காகவே

இப்போது சில காரியங்கள் செய்ய வேண்டியுள்ளது என்பதை தலைமைகளில் இருந்தோர் எடுத்துக்கூறினார்கள்.

ஆயினும் இயக்கத்துக்குள் ஒரு குறிப்பிட்டளவான உறுப்பினர்கள் சோர்வாகவே காணப்பட்டனர்.

புலிகள் இயக்கப் பிரமுகர் ஒருவர் பின்வருமாறு தன் நண்பரிடம் சொன்னார்.

“சிறீலங்கா ஜனாதிபதி நமக்குப் பொது மன்னிப்பு வழங்குவதை ஏற்றுக் கொண்டால், நாம் தவறுகள் செய்திருக்கிறோம் என்றல்லவா அர்த்தமாகிறது? நமது தாயகத்துக்காக நாம் போராடியது எப்படித் தவறாகும்?”

இயக்கத்துக்குள் உள்ள மனநிலைகளைப் பிரபாகரனும் புரிந்துகொண்டே இருந்தார். ஏனைனில் அவரும் அதே மனநிலையில்தான் இருந்தார்.

ஆனால் பிரபாகரனுக்கு காத்திருந்து மீண்டும் போராட்டத்தை தொடரும் நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையில்லாத உறுப்பினர்கள்

இயக்கத்தை விட்டு விலகக்கூடும் என்பதும் பிரபாகரனுக்குத் தெரிந்திருந்தது.

விலகிச் செல்லும் உறுப்பினர்களோ, பொறுப்பாளர்களோ ஆயுதங்களுடன் சென்றுவிட்டால் என்ன செய்வது? ஆயுதங்கள் மீளப்பெறப்பட்டதற்கு அதுவும் ஒரு காரணம்.

பொறுப்பாளர்கள் பலரது பிஸ்டல்கள், சுழல் துப்பாக்கிகள் என்பவற்றையும் திரும்பிப்பெற்று ‘டம்பிங்’ செய்துவிட்டார்கள்.

பிரபா சொன்ன காரணம்

இச்செய்திதான் இந்தியப்படைத் தளபதியின் காதுகளுக்கு எப்படியோ விழுந்திருந்தது.

அவர் பிரபாகரனிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார். “மிஸ்டர் பிரபாகரன்! நீங்கள் கிறீஸ் மற்றும் பொலித்தீன் பைகள் வாங்கியதாகச் சொல்கிறார்களே. ஆயுதங்களை புதைத்து வைக்கப்போகிறீர்களா?”

உடனே பிரபாகரன் சமாளித்தார். “கிறீஸ் வாங்கினோமா? இதெல்லாம் ஏனைய இயக்கங்கள் கட்டிவிடும் கதை” என்றுவிட்டார் பிரபாகரன்.

“ஆயுதங்களை ஒப்படைக்கும் விடயத்தில் நீங்கள் ஒத்துழைக்கவிட்டால், நாங்கள் தலையிட்டு ஆயுதங்களை எடுக்க வேண்டியிருக்கும்.” என்று கூறிவிட்டார் இந்தியப்படைத் தளபதி.

இறுதியாக ஆகஸ்ட’ 7ம் திகதி இரண்டாம் கட்டமாக ஆயுதங்களை ஒப்படைக்க சம்மதித்தார் பிரபாகரன்.

இந்தியத் தளபதி சென்றதும் தம்மிடம் உள்ளனவற்றில் தரம் குறைந்தவையும், நீண்டநாள் பாவனையில் உள்ளவையுமான ஆயுதங்களைச் சேகரித்துக் கொண்டனர் புலிகள் இயக்கத்தினர்.

யாழ் கோட்டை இராணுவ முகாமில் இரண்டாம் கட்ட நடைபெற்றது. அப்போது யாழ் கோட்டை முகாமுக்குப் பொறுப்பாக இருந்தவர் டென்சில் கொப்பேக்கடுவ.

புலிகள் சார்பாக யாழ் மாவட்ட தளபதி குமரப்பா சென்றிருந்தார்.

ஒப்படைக்கபட்ட ஆயுதங்களையும், அவற்றின் எண்ணிக்கையையும் பார்த்த டென்சில் கொப்பேகடுவ முகத்தில் ஏமாற்றம்தான்.

ஆக 20 ஆயுதங்கள் மட்டும்தான் அன்று ஒப்படைக்கப்பட்டன.

இதேவேளை கொழும்பில் இருந்த இந்தியத்தூதர் திக் ஷித் ஆயுத ஒப்படைப்பு பற்றிய கேள்விக்கு சொன்ன பதில் இது:

“முதல் நாளன்று 800 ஆயுதங்களும், இரண்டாம் கட்டமாக 300 ஆயுதங்களும் ஒப்படைக்கப்பட்டு விட்டன. 65 சத வீதமான சிறுரக ஆயுதங்களும், 85 சத வீதமான கனரக ஆயுதங்களும் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.”

இந்தியப் படையின் கண்காணிப்பில் எல்லாமே சுமுகமாகவும், நல்லவிதமாகவும் நடந்து கொண்டிருக்கின்றன என்னும் கருத்தை உருவாக்குவதே திக் ஷித்தின் நோக்கமாக இருந்தது.

பிரேமதாசாவின் ஜோக்

இந்திய- இலங்கை ஒப்பந்தத்துக்கு பிரதமர் பிரேமதாசாவின் ஆதரவைப் பெறுவதில் ஜனாதிபதி ஜே.ஆருக்கும் தோல்விதான் ஏற்பட்டது.

அப்போது கூட்டுப்படை நடவடிக்கை தலைமையக தளபதியாக இருந்தவர் ஜெனரல் சிறில் ரணதுங்க. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவர் சேபால ஆட்டிகல.

இருவரிடமும் ஒப்பந்தத்தின் பின்னர் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றி கேட்டறிந்தார் பிரதமர் பிரேமதாசா.

“தீவிரவாத இயக்கங்கள் ஆயுதங்களை ஒப்படைப்பது எப்போது முடிவடையும்?” என்று கேட்டார் பிரேமதாசா.

“மிகவும் மெதுவாக நடைபெறுகிறது. 3060 ஆயுதங்கள் இயக்கத்தினரிடம் இருக்கலாம் என்று நினைக்கிறோம். அதில் 381 ஆயுதங்கள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.” என்றார் சேபால ஆட்டிகல.

“இந்தியப் படையினர் என்ன சொல்கிறார்கள்?”

“அவர்கள் பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பில் அக்கறையோடு இக்கிறார்கள். புலிகள் இயக்கத்தினர் குறிப்பிட்ட தொகையான ஆயுதங்களை ஒப்படைப்பார்கள். ஆனால் அது நூறு வீதமானதாக இருக்காது” என்றார் சேபால ஆட்டிகல.

அவர் சொல்வதைக் கேட்டுவிட்டு பிரேமதாசா ஒரு ஜோக்கடித்தார்.

“நமது ஆயுதப்படைகளின் முழுப்பொறுப்பையும் பிரபாகரனிடம் ஒப்படைத்து விடலாம். அப்போதுதான் அவர் எதிர்த்துப்போராட எவரும் இருக்கமாட்டார்கள்”

பிரேமதாசா சொன்ன இந்த ஜோக்தான் பின்னர் வெளியே கசிந்து திரிவுபட்டு, ‘பிரபாகரனை முப்படைத் தளபதியாக நியமிக்க பிரேமதாசா தயாராக இருந்தார்’ என்று சிலரால் சொல்லப்பட்டது.

பிரேமதாசா திறந்த மனதுடன் இருந்தார் என்பது போல வரலாற்றை திரிவுபடுத்தும் விதமான கூற்றாகவும் அது அமைந்துள்ளது.

பிரேமதாசா பிரபாகரன் மீது ஒரு வியப்பான பார்வை கொண்டவராகவே இருந்தார் என்பது மெய்தான். அதற்கான காரணம் முப்படைகளையும் எதிர்த்துப் போராடும் சளைக்காத ஒரு மனிதராக இருக்கிறாரே என்ற பிரமிப்புத்தான்.

பிரபாகரன் தொடர்பாக பிரேமதாசா அடிக்கடி சொன்ன கருத்து இதுதான் “அவர் ஒரு புத்திசாலி.”

இந்தியா சந்தேகம்

இந்திய-இலங்கை ஒப்பந்தம் முறியும் தருணத்திற்காகப் புலிகள் காத்திருந்தனர்.

ஒப்பந்தத்தின் சில ஷரத்துக்களுடன் உடன்பாடு கொள்ள முடியவில்லை என்று கூறியபோதும் ஏனைய இயக்கங்கள் ஒப்பந்தத்தை வரவேற்பதில் போட்டிபோட்டன.

ஆயுத ஒப்படைப்புக்காக வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்கு செல்வதன் மூலமாக, அப்படியே தமது அலுவலகங்களையும் திறந்துவிடலாம்: காலுன்றிக் கொள்ளலாம் என்பதே ஏனைய இயக்கங்களின் திட்டமாக இருந்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒப்பந்தம் உருவாக தாமும் ஒரு காரணம் என்பது போல சொல்லத் தொடங்கியது.

‘இந்தியா தம்மைக் கைவிடாது. அரசியல் என்று வந்துவிட்டால் தமக்குத்தான் ஒரு எதிர்காலம் இருக்கிறது.

இயக்கங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தொடங்கிவிட்டன. இந்தியப் படைதான் பாதுகாப்புக்கு நிற்கிறது. அதனால் தமிழ் பகுதிகளில் தம்மால் முன்பு போல செயற்படும் காலம் நெருங்கிவந்து விட்டது’ என்றே கூட்டணியினர் நினைத்தனர்.

ஏனைய இயக்கங்களை இந்திய அமைதிப்படையினர் வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்கு வர அனுமதிப்பது புலிகளுக்குப் பிடிக்கவில்லை.

அதேநேரம் புலிகள் இயக்கத்தினரின் போக்கில் இந்தியப் படை அதிகாரிகளுக்கும், இந்திய உளவு நிறுவனங்களுக்கும் சந்தேகம் ஏற்படத்தொடங்கியது.

புலிகள் இயக்கத்தினர் தம்மை எதிர்த்து ஆயுதங்களை ஏந்தக்கூடும் என்பதை அப்போது இந்தியப் படை அதிகாரிகள் நினைத்தும் பார்த்திருக்கமாட்டார்கள்.

எனினும் புலிகள் இயக்கத்தினருக்கு ஒரு நிர்ப்பந்தத்தையும், நெருக்கடியையும் கொடுப்பதற்காக ஏனைய இயக்கங்களின் பிரவேசத்துக்கு இடமளிக்கப்பட்டது.

உண்மையில் புலிகள் இயக்கத்தினர் முரண்டு பிடிக்காமல் இந்தியப்படையினருடன் ஒத்துழைத்திருந்தால் ஏனைய இயக்கங்களை இந்தியா ஒரு ஓரத்தில்தான் வைத்திருந்திருக்கும்.

ஒரு புறம் புலிகள், மறுபுறம் தமிழர் விடுதலைக் கூட்டணி.

தீவிரவாதிகள், மிதவாதிகள் என்றளவில் இரு அமைப்புக்களையும் வைத்துக் கொண்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவே இந்தியா முதலில் விரும்பியது.

கடத்தப்பட்டவர்கள்

ஒப்பந்தம் வந்துவிட்டது. இந்தியப் படையினர் நிற்கிறார்கள் என்ற நினைப்பில் வடபகுதிக்குச் சென்ற ஏனைய இயக்க உறுப்பினர்கள் சிலர் மாயமாய் மறைந்தனர்.

புலிகள் இயக்கத்தினரே அவர்களைக் கடத்திச் சென்று சுட்டுவிட்டு உடல்களை மறைத்துவிட்டனர்.

ஈ.பி.டி.பி இயக்கத்தின் முக்கிய உறுப்பினரான பிரேமானந்தனும், இன்னும் இருவரும் யாழ்ப்பாணம் வந்தனர்.

ஈ.பி.டி.பி இயக்கத்தின் சார்பாக ஆயுதங்களை ஒப்படைக்கவும், இயக்க வேலைகளை ஆரம்பிக்கவுமே அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள உதயன் பத்திரிகைக்குச் சென்று அறிக்கை ஒன்றைக் கொடுத்தார் பிரேமானந்தன்.

ஒப்பந்தம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா விடுத்திருந்த அறிக்கையே அதுவாகும்.

பிரேமானந்தா டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரர் ஆவார். தோற்றத்திலும் ஓரளவு உருவ ஒற்றுமை இருந்தது.

எனவே உதயன் பத்திரிகை பின்வருமாறு செய்தி வெளியிட்டது.

“ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் வந்துள்ளார். உதயன் பத்திரிகைக் காரியாலயத்துக்கு வந்து அறிக்கை ஒன்றைத் தந்துவிட்டு சென்றுள்ளார்.”

புலிகள் இயக்கத்தினர் உடனே உஷராகிவிட்டனர். மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்று உறுப்பினர்களைச் சந்திப்பதில் ஈடுபட்டிருந்தார் பிரேமானந்தா.

சாவகச்சேரியில் உள்ள ஓர் உறுப்பினரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு பிரேமானந்தனும், இப்ராகீம் என்னும் ஈ.பி.டி.பி. உறுப்பினரும் திரும்பிக்கொண்டிருந்தபோது புலிகள் இயக்கத்தினர் அவர்களை வழிமறித்தனர்.

துப்பாக்கி முனையில் இருவரும் வேன் ஒன்றில் கொண்டுசெல்லப்பட்டனர்.

இந்தியப்படைக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் புலிகள் இயக்கத்தினரிடம் கேட்டனர்.

“அப்படி ஒரு சம்பவம் நடந்ததே எமக்குத் தெரியாது” என்று புலிகள் இயக்கத்தினரால் கூறப்பட்டது.

பிரேமானந்தனும், ராகவனும் பின்னர் புலிகள் இயக்கத்தினரால் கொல்லப்பட்டுவிட்டனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்த ரெலோ இயக்க உறுப்பினர்களும், ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் சிலரும் இணைந்து புலிகள் இயக்க உறுப்பினர்களைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார்கள்.

இயக்கங்களில் இருந்து விலகியவர்கள் என்று கூறியே அவர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்தனர்.

அதனால் இரவு நேங்களில் புலிகள் இயக்க உறுப்பினர்களை தீர்த்துக்கட்டுவது என்று திட்டம் போட்டனர்.

இரவோடு இரவாக புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலர் வெட்டிக் கொல்லப்பட்டனர். துப்பாக்கியால் சுட்டால் சத்தம் கேட்கும் என்பதால் அந்த ஏற்பாடு.

இச்சம்பவங்கள் குறித்து இந்தியப் படையினர் கண்டும் காணாமல் இருந்தனர்.

வரதராஜப்பெருமாள்

இக்கால கட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் சார்பாக வரதராஜப்பெருமாள் கொழும்பில் தங்கியிருந்து இயக்க வேலைகளில் ஈடுபட்டார்.

“இந்திய-இலங்கை ஒப்பந்தம் அமெரிக்க ஏகாதிபத்தியம் இலங்கைக்குள் ஆதிக்கம் பெறுவதை தடுக்கிறது. இந்தியா எமது நண்பன். நட்பு நாடு. அதனால் ஒப்பந்தத்துக்கு ஆதரவளிக்கிறோம்.” என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப் அறிவித்தது.

கொழும்பில் உள்ள இந்தியத்தூதரக அதிகாரிகளுடனும், தூதர் திக் ஷித்துடனும் வரதராஜப்பெருமாள் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

இந்திய அதிகாரிகளுடன் நட்பை பலப்படுத்த வரதராஜப்பெருமாளிடம் ஒரு சாதகமான அம்சம் இருந்தது.

வரதராஜப்பெருமாள் இந்திய வம்சாவளித் தமிழராக இருந்தார். இந்தியாவில் உள்ள தனது பூர்வீகத் தொடர்புகள் பற்றியும் இந்திய அதிகாரிகளுக்கு அவர் விளக்கிக் கூறினார்.

பின்னாளில் மாகாணசபை முதல்வர் பதவியை அவர் பெற்றுக் கொள்ளவும் அந்த விடயம் ஒரு சாதகமாக இருந்தது. அதுபற்றிப் பின்னர் பார்க்கலாம்.

இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் வரதராஜப்பெருமாளுக்கு இருந்த தொடர்பும், ஒப்பந்தம் தொடர்பான ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்க நிலைப்பாடும் புலிகள் இயக்கத்தினர் ஒத்துழைக்க மறுத்தால் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்துக்கு வாய்ப்புக் கொடுக்கலாம் என்ற நிலையைத் தோற்றுவித்தன.

கொலைத்திட்டம்

இந்திய-இலங்கைத் திட்டத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் தென்னிலங்கையில் ஜே.வி.பி இயக்கத்தினரும் முன்னணியில் நின்றனர். படையினர் மத்தியிலும் ஜே.வி.பி இயக்கத்துக்கு கணிசமான ஆதரவு இருந்தது.

“இந்திய ஏகாதிபத்தியவாதிகள் இலங்கைக்குள் புகுந்துவிட்டார்கள். இந்தியா இலங்கையை அடிமைப்படுத்திவிட்டது” என்று பிரச்சாரம் செய்தது ஜே.வி.பி.

“இந்தியப் பொருட்களை யாரும் வாங்கவேண்டாம். இலங்கையில் உள்ள இந்திய முதலாளிகளை வெளியேற்ற வேண்டும்” என்றெல்லாம் ஜே.வி.பி. பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.

ஒப்பந்தத்துக்கு அமைச்சரவைக்குள் எதிர்ப்பு இருக்கிறது.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒப்பந்தத்தை எதிர்க்கிறது.

வடமராட்சியைக் கைப்பற்றியது போல யாழ்ப்பாணத்தை முழுதாக பிடித்திருக்கலாம். இந்தியா தலையிட்டு காரியத்தைக் கெடுத்துவிட்டது என்று படையினர் மத்தியிலும் சலசலப்பு,

இதுதான் தருணம் என்று தீர்மானித்தது ஜே.வி.பி. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதியைத் தீர்த்துக்கட்டி விட்டால் நாட்டில் மேலும் குழப்பம் உண்டாகும்.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பும் ஏற்படலாம் என்று முடிவு செய்தது ஜே.வி.பி.

திட்டம் வகுக்கப்பட்டது.

பாராளுமன்றக் கட்டிடத்துக்குள் வைத்து குண்டு வீசி கொல்வதுதான் திட்டம்.

ஜே.வி.பி.க்கு பாராளுமன்ற கட்டிடத்துக்குள்ளும் உளவு செல்ல ஆட்கள் இருந்தார்கள்.

ஜனாதிபதி ஜே.ஆர், பிரதமர் பிரேமதாசா, தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி ஆகியோரை ஒரே நேரத்தில் தீர்த்துக்கட்ட ஒரு வாய்ப்பிருப்பதாக ஜே.வி.பி.க்கு தகவல் எட்டியது.

1987 ஆகஸ்ட் 18ம் திகதிதான் அந்தநாள்.

பாராளுமன்றக் கட்டடத்துக்குள் கைக்குண்டு கொண்டுவரப்பட்டது.

(தொடர்ந்து வரும்)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரவில் வாழைப்பழம், ஆப்பிள் சாப்பிடாதீங்க! ஏனென்றால்…. இன்னும் பல பயனுள்ள தகவல்களுடன்…!!
Next post இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்! உஷார்…!!