அர்த்தம் பொதிந்ததும் ஆபத்துகள் நிறைந்ததுமான அழைப்பு..!! (கட்டுரை)

Read Time:13 Minute, 7 Second

ranil (44)இலங்கைத் தமிழர் 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் தங்கள் மண்னை விட்டுப் பிறதேசம் செல்லத் தாமாக விரும்பவில்லை; எத்தனிக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே ஒரு சிலர் மேற்கத்தேய நாடுகளுக்கும் கப்பல்களிலும் ​அரபு நாடுகளிலும் வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றுவந்தனர். அவர்கள் குடும்பத்துடன் அல்லது தமது குலத்துடன் இடம்பெயர்ந்திருக்கவில்லை. 1983 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் கனடாவில் வெறும் 150 இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது.

1958, 1977 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகப் பாரிய இனவன்முறைகள் நன்கு திட்டமிட்டு ஏவிவிடப்பட்டன. இவற்றில் மலையகம் மற்றும் தெற்கில் வாழ்ந்த தமிழ் மக்கள், பெரியளவில் பாதிக்கப்பட்டனர். அவ்வேளையில், அவர்கள் தீவின் வடக்கு, கிழக்கு நோக்கியே படை எடுத்தனர். ஆனால், 1983 ஆம் ஆண்டு இனக்கலவரமும் அதனைத் தொடர்ந்து நீடித்த இனவன்முறைகளும் தாண்டவமாடியதன் காரணத்தால் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள், நாட்டை விட்டு, உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்துடன் ஓட்டம் எடுத்தனர்.

அக்காலப் பகுதியில் பல பெற்றோர்கள் தங்கள் இளவயதுப் பிள்ளைகளைப் பாதுகாக்கப் பெரும் பாடுபட்டனர். அப்பாவிகளான தங்கள் பிள்ளைகளைத் தமது நாட்டினுடைய அரசாங்கத்தின் பாதுகாப்பு படைகளின் பிடியிலிருந்து பாதுகாக்கச் சிரமப்பட்டனர். இரவும் பகலும் விழிகள் தூங்க மறுத்து, கண்ணை இமை பாதுகாப்பது போல காவல் காத்தனர். சிலர் வெற்றி அடையப் பலர் தோற்றனர். இவ்வாறு எத்தனை காலம் தான்(?) எனச் சலிப்படைந்தனர். ஆதலால், தங்களது அசையும் அசையாச் சொத்துகளை விற்றுப் பிள்ளைச் செல்வத்தை பாதுகாக்க முடிவு எடுத்தனர்.

விளைவு கணிசமான தமிழ் இளைஞர்கள் தமது தாய் நாட்டில் வாழ்வது பாதுகாப்பு இல்லை என அந்நிய நாட்டில், தஞ்சம் புகுந்தனர்; அகதி அந்தஸ்து கோரினர். இது கசப்பானதும் மறக்கவும் மறுக்கவும் இயலாத கடந்த கால வரலாறாகும். அந்த வகையில் தற்போது அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரித் தடுப்பு முகாம்களில் தமிழர்கள் பலர் அடைக்கப்பட்டுள்ளர்.

இவர்களில் ஒரு பகுதியினர் தமது உயிரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தஞ்சம் புகுந்தோராவர். மற்றைய பகுதியினர் பொருளாதார வளம் ஈட்டச் சென்றவர்கள். முதலாவது வகையினர் இந்த நாட்டில் தொடர்ந்தும் தாம் வாழ்ந்தால் தொலைந்தோம் என ஓடியவர்கள். இரண்டாவது பகுதியினர், கொடிய யுத்தத்தால் தமது பொருளாதாரத்தை தொலைத்தவர்கள். ஆகவே, நாட்டை விட்டு வெளியேறிய அனைத்து தமிழருமே பெரும்பா​ன்மையின அரசாங்கங்களின் தொடர்ச்சியான இனஒடுக்கல் நடவடிக்கையினால் வாழ்வை இழந்தவர்கள். இலங்கை இனப்பிணக்குக்கு வயது சராசரியாக 70 ஆகிறது.

ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வாழ்வு சராசரியாக 40 வயதைக் கடந்து விட்டது. ஆகவே, இடம்பெயர்வுகள், புலம்பெயர்வுகள் எல்லாம் அவருக்கு அக்கு வேறு ஆணி வேறாக அறிந்த விடயம். அவருக்கு இவை புதியவை அல்ல. ஆனால்,அவர் செல்லும் வௌிநாடுகளில் எல்லாம் இலங்கைத்தமிழர் இருந்துவிட்டால், இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றார். இந்த இடத்தில் சில கேள்விகளை அவரிடத்தில் கேட்க வேண்டும். இங்கு எல்லாமே வழமைக்கு திரும்பி விட்டதா? உண்மையான விசுவாசமான நல்ல இணக்கம் இனங்களுக்கிடையில் இருக்கின்றதா? தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஆயுத மோதல் வலுக்கட்டாயமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதே தவிர சமாதானம் நாட்டில் ஏற்படவில்லை.

சட்ட விரோதமாக இலங்கையை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் தடுப்பு முகாம்களில் இருக்கும் இலங்கையர்கள் எந்த விதமான அச்சமும் இன்றி நாட்டுக்கு திரும்ப முடியும். அவர்களை நாங்கள் (அரசாங்கம்) தண்டிக்க மாட்டோம். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் அவுஸ்திரேலியாவில் வைத்து தெரிவித்திருந்தார். ஆனால், உள்நாட்டில், பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் பிற சட்டங்களால் இன்று வரை, சிறையில் உறையும் தமிழர் தொடர்பில் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை ஏன் தொடர முடியவில்லை என்பது மன வேதனை அளிக்கும் விடயம் ஆகும்.

உதாரணத்துக்கு, முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய் என்ற பிரதேசத்திலிருந்து கடல் தொழில் சார் சமூகத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் அவுஸ்திரேலியாவுக்கு, வந்து தடுப்பு முகாமில் இருப்பதாக எடுத்துக் கொள்வோம். அவர் தற்போது நாடு திரும்பவதாகக் கருதுவோம். அவ்விதம் நாடு திரும்பும் அவர் ஊரில் என்ன வேலை செய்வது? அவரின் ஜீவனோபாயம் என்ன? என்பது பெரிய பிரச்சினையாகும். ஏனெனில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் போன்ற கடல் பகுதிகளில் காலம் காலமாக தமிழ் மீனவர்களே கடல் அன்னை மடியில் வாழ்வு பெற்றவர்கள்.

1983 ஆம் ஆண்டிலும் அதற்கு முன்னரும் இப்பகுதியில் 30 சிங்கள மீனவருக்கான தொழில் அனுமதி இருந்துள்ளது. ஆனால், தற்போது 300 க்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்கள் அடாத்தாகத் தொழில் செய்கின்றனர். மிக அண்மையில் கூட 11 வடபகுதி மன்னார் மீனவர்கள் என்ற போர்வையில் புத்தளத்தைச் சேர்ந்த மீனவருக்கு அரசாங்க அனுமதி வழங்கப்பட்டள்ளது. அத்துடன் இவ்வாறு வருகை தந்தவர்கள் சட்டவிரோத முறையிலும் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவைகள் தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு முறையிட்ட போதிலும் யாவுமே செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது.

போர் நடைபெற்ற வேளையோ இல்லாவிட்டால் போர் ஓய்வுபெற்ற காலமோ எப்பொழுதாயிருந்தால் என்ன இப்பகுதி தமிழ் மீனவர் வாழ்க்கை பெரும் போராட்டமாகவே உள்ளது. எங்கோ இருந்து வந்தவர்கள் கடல் செல்வத்தை அள்ளிக்கொண்டு போகும் நிலையில், அக்கடல் மாதா மடியில் பிறந்தவர்கள், வளர்ந்தவர்கள், அந்த அன்னையால் உயர்ந்தவர்கள் பலர் கடற்தொழிலேயே கைவிட்டுவிட்டுப் பிற தொழில்களை நாட வேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளனர். ஆகவே, இந்நிலையில் நாடு திரும்பி மீண்டும் நடுத்தெருவுக்கு வர யார் விரும்புவார்கள்.?

இது ஒரு விடயம் அல்ல! வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் காணி நாட்டின் தேசிய பாதுகாப்பு என்ற முத்திரையின் கீழ் இன்னமும் படையினர் வசம் உள்ளது. முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் தமது காணியை விடுவிக்குமாறு கோரி மக்கள் நடத்தும் போராட்டம் ஒரு மாதத்தை எட்டும் நிலையில் உள்ளபோது, காணிகள் விடுவிக்கப்படும் என அரச தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஒரு பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது. அங்கு கூட மக்களது கணிசமான சொத்துக்கள் மிக அண்மையில் அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

கட்டாந்தரையாகவே காணிகள் காணப்படுகின்றன. அரசினால் புனர்வாழ்வு (?) அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீளவும் புலிகளாக உரு எடுக்கப் போகின்றார்கள் எனத் தெற்கில் மீண்டும் தங்களது அரசியலுக்காக புலி புராணம் பாட தொடங்கி உள்ளார்கள். யுத்த காலங்களில் பலர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். பல தமிழ் மக்கள் தம் உறவுகளை அரசின் அறிவுறுத்தலுக்கு அமைய தாமாகவே படையினரிடம் விசாரனைக்காக கையளித்தார்கள். இப்போது அவர்களையும் காணவில்லை என கை விரிக்கின்றார்கள். இறுதியில் இவ்வாறானவர்களை கண்டுபிடிக்க அமைத்த அலுவலகம் கண்டு பிடிக்க வேண்டிய நிலையிலுள்ளமை பொறுப்பானவர்களின் பொறுப்பற்ற செயலாகத் தொடர்கின்றது சோகக் கதை.

ஆகவே, இது விடயத்தில் நல்லாட்சி அரசு நீண்ட நாட்களுக்கு மெனள விரதம் அனுட்டிப்பது ஆரோக்கியமாதல்ல. இந்த அரசாங்கம் இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரும் என தமிழ் மக்கள் நம்பினார்கள்; நம்ப வைக்கப்பட்டார்கள். ஆனால் நம்பிக்கைகள் யாவுமே கானல் நீராகும் வாய்ப்புகளே பிரசாசமாகத் தெரிகையில் எப்படி மீள நாட்டுக்குத் திரும்புவது? இனப்பிரச்சினை ஏற்பட ஏதுவான காரணிகள் எவ்வித மாறுதல்களும் இன்றி அப்படியே நீறு பூத்த நெருப்பாக உள்ளன.

தற்போது எங்கு பார்த்தாலும் காணி விடுவிப்புப் போராட்டம், காணாமல் போனோரை கண்டறியும் போராட்டம்; அதாவது உயிர்களை மீட்டுத்தா எனப் போராட்டம், பட்டதாரிகள் வேலைகோரிப் போராட்டம், மருத்துவ மாணவர்கள் போராட்டம், மீனவர் போராட்டம் என எங்கும் பிரச்சினைகள் ஆட்டம் போடத் தொடங்கி உள்ளது. கடந்த காலங்களில் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கக் கைச்சாத்திடப்பட்ட பல உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் எல்லாமே காற்றில் பறந்ததைப் பார்த்தவர்கள் தமிழர்கள்.

தமிழ் மக்கள் தாங்கள் கௌரவத்துடனும் மரியாதையுடனும் நிம்மதியாகவும் மற்றவர்கள் தொந்தரவு இன்றி நிரந்தரமாக வாழ்க்கையை வாழக் கூடிய நாடாக இலங்கையை எப்போது கருதுகின்றார்களோ அப்போது அவர்களாகவே வருவர். ஏனெனில் அம்மாவின் வீட்டுக்குப் (தாய் நாடு) போகப் பிள்ளைக்கு அழைப்பும் தேவையில்லை; அனுமதியும் தேவையில்லை. வெறும் அன்பு ஒன்றே போதும். ஏனெனில் சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் (நாட்டை) போல வருமா? ஆகவே நாட்டைச் சொர்க்மாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் ஆட்சியில் உள்ளோர்க்கு உண்டு. =

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சப்தமில்லாமல் ஸ்ரீதேவி நடிக்கும் புதிய படம்..!!
Next post பிறந்தவுடன் தரையில் விழுந்த குழந்தை: மருத்துவமனை மீது வழக்கு தொடுக்க தாயார் முடிவு..!!