முன்னாள் போராளிகள்: தமிழ் தரப்புகள் மறந்துவிட்ட கடப்பாடு..!! (கட்டுரை)

Read Time:15 Minute, 5 Second

182நூற்றுக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகள் கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் திகதி, கிளிநொச்சி, இரணைமடுவிலுள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தினை வேலை கோரி முற்றுகையிட்டனர். கொளுத்தும் வெயிலில் கைக்குழந்தைகளோடு வந்திருந்த முன்னாள் பெண் போராளிகளையும் மனதுருகி வேலை கோரிய அங்கவீனமுற்ற முன்னாள் போராளிகளையும் அங்கு காண முடிந்தது. ஊடகங்களும் அவர்களைப் பிரதானப்படுத்தி செய்தி வெளியிட்டன.

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் வேலைக்காகப் புதிதாக ஆட்கள் உள்வாங்கப்படுகிறார்கள் என்கிற தகவல் பரவியதை அடுத்தே, முன்னாள் போராளிகள் அங்கு கூடினர். அரசாங்கத்தின் புனர்வாழ்வுக் காலத்தில் தமக்குப் பண்ணை வேலைப் பயிற்சியே வழங்கப்பட்டதாகவும் ஆகவே, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் வேலைக்காகப் புதியவர்களை உள்வாங்கும் போது, தம்மை முதன்மையாகக் கொண்டு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

ஆனாலும், புதியவர்கள் யாரையும் வேலைக்காக உள்வாங்கவில்லை என்று தெரிவித்து, சிவில் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் முன்னாள் போராளிகளை, முற்றுகையைக் கைவிடுமாறு கோரினர். இதனையடுத்து, 170 முன்னாள் போராளிகள் கிளிநொச்சி அரச அதிபரிடம் வேலைக்கான மகஜரொன்றைக் கையளித்துவிட்டு விலகிச் சென்றனர்.

இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானதும், முன்னாள் போராளிகளை நோக்கி வசைகள் பொழியப்பட்டன. தமிழ்த் தேசியப் போராட்டத்தின் கட்டங்கள் தென்னிலங்கையிடம் அடகு வைக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பலரும் பொங்கினர்.

குத்தகைக்கு, காணிகளைப் பெற்று முன்னாள் போராளிகளினால் ஏன் விவசாயம் செய்ய முடியாது என்று கேள்வியும் எழுப்பப்பட்டது. இன்னும் சிலரோ, முன்னாள் போராளிகளைத் தீண்டத்தகாத தரப்பாகக் கருதி அரற்றிக் கொண்டிருந்தனர்.

ஆனால், பெரும்பான்மையான தமிழ் மக்களோ வாய்மூடி மௌனிகளாக இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்தச் சூழலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அவர்களிடம் எந்த யோசனையும் இல்லை; நம்பிக்கையும் இல்லை.

அரசியல் உரிமைகளுக்காக முப்பது வருடங்களாக, ஆயுதப் போராட்டத்தினை மூர்க்கமாக முன்னெடுத்த தமிழ் மக்கள், முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான கடந்த எட்டு ஆண்டுகளாக, எந்த இடத்தில் நிற்கின்றார்கள் என்பதற்கு முன்னாள் போராளிகளும் அவர்களின் வாழ்வும் பெரும் சாட்சி. ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுத்த சமூகங்கள் எதிர்கொள்ளும் அக – புறப் பிரச்சினைகள் அதிகமானவை; சிக்கலானவை.

அதுவும், படுபயங்கரமாகத் தோற்கடிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தின் விளைவுகளைத் தாங்கி நிற்கின்ற சமூகமாகத் தமிழ் மக்கள் சந்தித்து நிற்கின்ற பிரச்சினைகள் சொல்லிக் கொள்ள முடியாதவை. அவை, சில குறிப்பிட்ட காலத்துக்குள் கடக்க முடியாதவை.

ஆனால், கடந்த எட்டு ஆண்டுகளாகப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு முன்னோக்கி பயணிப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பில் சிந்திக்கின்றபோது, பெரும் ஏமாற்றமே மிஞ்சி நிற்கின்றது. குறிப்பாக, முன்னாள் போராளிகள் விடயத்தைத் தமிழ்த் தேசியப் பரப்பு எவ்வாறு கையாண்டு வருகின்றது என்று நோக்கும் போது எரிச்சலான ஏமாற்றமே எஞ்சுகிறது.

எப்போதுமே பெரும் உணர்வூட்டல்களினால் மூர்க்கம் பெறுகின்ற போராட்டங்கள், அதன் வெற்றிகரமான கட்டங்களை அடைந்தாலும் அடையாது விட்டாலும், அதன் அடுத்த கட்டம் பற்றிய சிந்தனைகளைக் கொண்டிருப்பதில்லை. அதுவும், ஆயுதப் போராட்டங்களுக்குள் மூழ்கியிருந்த சமூகங்கள், அதன் போக்கிலான ஒரு வாழ்வு முறைக்கும் அரசியலுக்கும் பழக்கப்பட்டு வந்திருக்கும்.

சடுதியாக ஒருநாள், அந்த வாழ்வு முறை இல்லாமல் போகும்போது, புதிய சிக்கல்களைச் சந்திக்க வேண்டி ஏற்படும். அதுவும், ஆயுதப் போராட்டக் காலத்தில், கீழ் அடுக்குகளில் வளர்ந்து வந்த பிரச்சினைகள், இப்போது பூதாகரமாகத் தோன்றி அச்சுறுத்தும். அது, அரசியல், பொருளாதார, சமூக ரீதியில் பெரும் பதற்றத்தையும் உண்டு பண்ணிவிடும். தமிழ் மக்கள் இப்படியானதொரு தருணத்துக்குள் இப்போது இருக்கிறார்கள்.

முன்னாள் போராளிகள் சந்தித்து நிற்கின்ற பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டுகின்றபோது, ஏன் ஒட்டுமொத்தச் சமூகத்தின் இன்றைய நிலை பற்றியும் பேச வேண்டும்?

அதாவது, முன்னாள் போராளிகள், தமிழ் மக்களில் ஒரு சிறிய பகுதியினரே. அவர்களின் பிரச்சினைகளை ஏன் தமிழ் மக்களின் ஒட்டுமொத்தப் பிரச்சினைகளின் குறியீட்டு வடிவமாகக் கருத வேண்டும்? என்கிற கேள்வியும் உணர்நிலையும் பலரிடத்திலும் எழுவதுண்டு.

தனிமனிதப் பாதுகாப்பு, வாழ்வுரிமை, வேலை, சமூக அங்கிகாரம் ஆகியவற்றுக்காக முன்னாள் போராளிகள் இன்றைக்கு போராடிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் பாதுகாப்புக்காகவும் பள்ளிப் பருவங்களில் போராடக்களம் புகுந்தவர்களில் நிலை மறுவழமாக, அவர்களைப் பாதித்து நிற்கின்றது.

மிகவும் மோசமாக சிதைக்கப்பட்ட சமூகங்களுக்குள் எதிரிகளும் சதிகாரர்களும் புறச்சக்திகளும் இலகுவாக நுழைந்துவிடுகின்றன. ஏனெனில், சிதைந்த சமூகங்களுக்குள் பலங்களைக் காட்டிலும் பலவீனங்களே அதிகமாக இருக்கும். அவையே, மேலெழுந்து நிற்கும்.

அப்படியான தருணத்தில் சிதைந்தவர்களின் பலவீனங்களைத் தமது பலங்களாக எதிரி சக்திகள் பயன்படுத்திக் கொள்ளும். முன்னாள் போராளிகளை நோக்கிய அச்சுறுத்தல் அப்படித்தான் இன்றைக்கு உருவாக்கப்படுகின்றது.

முன்னாள் போராளிகள், இன்றைக்கு ஆலையிலிருந்து வீசப்பட்ட கரும்புச் சக்கைகளின் நிலையில் இருக்கின்றார்கள். அவர்கள் இப்போது அடிப்படையாகக் கோருவது பாதுகாப்பும் வேலையும்.

அடுத்து, சமூக அங்கிகாரம். ஆனால், இவை தமிழ்த் தேசியப் பரப்பினாலேயே அவ்வளவு கொடுக்கப்படுவதில்லை. அந்தநிலை, பாதிக்கப்பட்டவர்களின் பலவீனங்களை இலகுவாகக் கையாள்வதற்கான சூழலை எதிரிகளுக்கு ஏற்படுத்தி விடுகின்றது.

இன்றைக்கு சமூகக் குற்றங்கள் சார்ந்து முதன்மைக் குற்றவாளிகள் பட்டியலில் முன்னாள் போராளிகளையும் உள்ளடக்க முனைகின்றனர். ஏனெனில், அவர்கள் நலிந்த தரப்பு. அவர்களை நோக்கி கைவிலங்குகள் பூட்டப்பட்டாலும் அது தொடர்பில் அவ்வளவு எதிர்வினைகளை யாரும் சந்திக்க வேண்டியதில்லை என்கிற நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த எட்டு ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு முறையாக அல்லது பெரும் பணம் செலுத்திச் சென்ற முன்னாள் போராளிகள் சில நூறுதான். ஆனால், பெரும் ஆபத்து நிறைந்த கடல் வழிப் பயணங்களை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் சென்றவர்கள் தொகை பல நூறு.

அவர்களில் பெரும் பகுதியினர், இந்தோனேசியா, நவுறு தீவுகளில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அல்லது இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றார்கள். திருப்பி அனுப்பப்படுபவர்கள் பாதுகாப்பு அமைச்சின் கெடுபிடிகளை எதிர்கொள்கின்றனர்; கைதாகின்றார்கள்.

இப்படிக் கொஞ்சம் முன்னாள் போராளிகள் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கத்தில் முன்னாள் போராளிகளின் வாழ்தலுக்கான பரிதவிப்பினைக் கையாள்வதற்காக பெரும் சக்திகள் வடக்கு – கிழக்கில் கடை விரிக்கின்றன.

வடக்குக் கடற்பரப்பில் இடம்பெறும் கேரளக் கஞ்சா கடத்தல் தொடர்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிலரோடு பேசிக் கொண்டிருந்த போது, கஞ்சாக் கடத்தலில் ஈடுபடும் தென்னிலங்கை முதலைகள், வடக்கில் முன்னாள் போராளிகளையே அதிகமாகக் குறி வைப்பதாகக் கூறினர். இதனால், சிறை சென்றவர்களும் உண்டு.

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திடம் வேலை கோரி, தமிழ்த் தேசியப் போராட்டத்தின் நியாயக் கட்டங்களை தென்னிலங்கையிடம் அடகு வைப்பதாக முன்னாள் போராளிகளை நோக்கி பொங்கிக் கொண்டிருக்கும் தமிழ்த் தரப்புக்கள், அவர்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்தே, அவ்வளவுக்கு அக்கறை கொள்வதில்லை. தங்களின் தனிப்பட்ட அல்லது குறுகிய அரசியல் தேவைகளுக்காக மாத்திரமே முன்னாள் போராளிகளைப் பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள்.

தேர்தல் அரசியலின் சூழல்களைக் கையாள வேண்டும் என்பதற்காக, முன்னாள் போராளிகளை முன்னிறுத்திக் கொண்டு சிலர் காயை நகர்த்திக் கொண்டிருந்தார்கள். ஆனால். அது சாத்தியப்படவில்லை என்றதும் அவர்களை அந்தரத்திலேயே கைவிட்டுச் சென்றார்கள்.

இன்றைக்கு அந்த அரசியல் முனைப்பின் அடுத்த கட்டங்களை எவ்வாறு கையாள்வது என்கிற சிந்தனையின்றி முன்னாள் போராளிகள் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு, அவர்களின் மீது தேவையற்ற சந்தேகங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.

அதுபோல, அரச படையிடம் சரணடைந்த போராளிகளுக்கு விச ஊசி செலுத்தப்பட்டதான விடயம், கடந்த வருடம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. ஆனால், அந்த விடயம் உணர்வூட்டும் அரசியல் நிகழ்ச்சி நிரலைத் தாண்டி நியாயமான முறையில் அணுகப்படவில்லை; தீர்வும் காணப்படவில்லை.

மாறாக, முன்னாள் போராளிகளின் உடல்நிலை குறித்து சமூகத்தில் அச்சநிலை தோற்றுவிக்கப்பட்டதோடு, தொங்கிக் கொண்டும் நிற்கின்றது. மாறாக, விச ஊசி விவகாரத்தினை நியாயமான பரிசோதனைகள் மூலம் முடிவு கண்டு, மக்களிடம் தெளிவுபடுத்துவதற்கு பெரிய முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

முன்னாள் போராளிகள், நம்பிக்கையோடு முன்னோக்கி வருவதற்காகக் காத்திருக்கின்றார்கள்; ஏங்குகின்றார்கள். ஆனால், தமிழ்த் தரப்புகளோ அதனைச் செய்வதற்குப் பதிலாக, அவர்களைத் தமது சுய அரசியலுக்காகவே பயன்படுத்த எத்தனிக்கின்றன.

அது, எதிரிகளின் நாசகார வேலைகளுக்கு ஒத்த ஒன்றாகவே இருக்கின்றது. சுமார் 12,000 பேரின் வாழ்வு பற்றிய அக்கறை என்பது ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலின் அடிப்படைகளோடு சம்பந்தப்பட்டது. அதனைப் புறக்கணித்துவிட்டு எந்த முன்னேற்றமும் சாத்தியமில்லை. அதற்கான, குறுக்கு வழிகளுக்கு யாராவது முன்றால், அவை முட்டுச் சந்துகளில் முட்டிக் கொண்டு நிற்பதோடு முடிந்து போகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேக்கப்மேன் என் கையை முறுக்கி அடித்தார்: ‘பிசாசு’ படநாயகி புகார்..!!
Next post உ.பி.யில் கவுரவக் கொலை: மகளைக் கொன்று பிணத்தை காதலன் வீட்டு வாசலில் வீசிய தந்தை..!!