நீண்ட கால நண்பியை மணமுடிக்க துறவறத்தைத் துறந்த திபெத்திய லாமா..!!
திபெத்தின் பிரபலமிக்க லாமா தலைவர், தனது நீண்ட கால நண்பியைத் திருமணம் செய்துகொண்டு துறவறத்தைத் துறந்தமை திபெத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாயே டோர்ஜே (33) என்ற இந்த லாமா சிறு வயது முதலே துறவறத்தைக் கடைப்பிடித்து வந்தவர். திபெத்தின் மிக முக்கியமான பௌத்த பாடசாலையை ஆரம்பித்த கர்மபா லாமாவின் மறு அவதாரம் என்றும் தாயே டோர்ஜேவை திபெத்தியர்கள் குறிப்பிடுவர்.
இந்த நிலையில், இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட டோர்ஜே, தனது நீண்ட கால நண்பியான ரின்ச்சென் யேங்சம் (36) என்ற பூட்டானியப் பெண்ணை கடந்த 25ஆம் திகதி திருமணம் செய்துகொண்டதாகவும், இதற்காக டோர்ஜே துறவறத்தைத் துறந்துவிட்டதாகவும் டோர்ஜேயின் மடம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இதை அறிந்த திபெத்தியர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.
தனது இந்த முடிவு பற்றிக் கருத்துத் தெரிவித்திருக்கும் டோர்ஜே, “நான் எடுத்திருக்கும் இந்த முடிவு எனக்கு மட்டுமன்றி, எனது பரம்பரைக்கே மிகுந்த நன்மையைத் தரப்போகிறது என்று நம்புகிறேன். அனைவருக்கும் பலன் பெறக்கூடியவகையில் அழகான ஏதோவொன்று நடைபெறப்போகிறது என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது ஒன்றரை வயது முதலே தான்தான் கர்மபா லாமா என்றும், தான் விட்டுச் சென்ற பணிகளை முடிப்பதற்காக மறுபடியும் அவதாரம் எடுத்திருப்பதாகவும் கூறிவந்தவர் டோர்ஜே. இவரது மறு அவதாரத்தை உறுதிசெய்த திபெத்திய லாமாக்கள் அவரை வணங்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் டோர்ஜே துறவறத்தை விட்டு விலகி இல்லறத்துக்கு மாறியிருப்பது தம்மை ஆச்சரியத்துக்கு மட்டுமன்றி அதிர்ச்சிக்கும் உள்ளாக்குகிறது என்று கூறியுள்ளனர் திபெத்தியர்கள்!
Average Rating