போராளிகளை காட்டி தப்பிக்க முயலும் அரசு..!! (கட்டுரை)

Read Time:15 Minute, 54 Second

downloadஇறுதி மோதல்களின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, போர்க்குற்ற விசாரணைகளை நடத்த வேண்டிய தேவையில்லை. போர்க்குற்ற விசாரணைகளை நடத்த வேண்டியிருந்தால், முன்னாள் போராளிகளையும் விசாரிக்க வேண்டி வரும்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை நேற்று முன்தினம் திங்கட்கிழமை (ஏப்ரல் 03, 2017) மேற்கொண்டிருந்த அவர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு கூறியிருந்தார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் ராஜித சேனாரத்னவுக்கு பக்கத்தில் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டரும் நின்றிருந்தார். ‘முன்னாள் போராளிகளையும்’ விசாரிக்க வேண்டி வரும் என்கிற விடயத்தை தயா மாஸ்டரை சுட்டிக்காட்டியே அவர் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கமாக, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பட்டாலி சம்பிக்க ரணவக்கவே, “போர்க்குற்ற விசாரணைகள் சார்ந்து இராணுவத்தினர் விசாரிக்கப்பட்டால், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள 12,000 முன்னாள் போராளிகளையும் விசாரிக்க வேண்டும்” என்கிற வாதத்தை முன்வைத்து வருபவர்.

அவரோடு, கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) முக்கியஸ்தர்களும் இவ்வாறான வாதத்தை இடைக்கிடை வைத்து வந்திருக்கின்றார்கள். தற்போது, அந்த வாதத்தை அரசாங்கத்தின் பேச்சாளர் என்கிற நிலையில் இருக்கின்ற ராஜித சேனாரத்னவும் முன்வைத்திருக்கின்றார்.

பாதைகள் வேறு வேறாக இருந்தாலும், தென்னிலங்கையின் பௌத்த, சிங்கள அதிகார பீடம் பயணிக்க நினைக்கின்ற பெரும் பாதை ஒன்றுதான். அது, எந்தவொரு காரணத்துக்காகவும் தம்மால் இழைக்கப்பட்ட கொடும் கொடுமைகள் தொடர்பில் பொறுப்புக்கூறல் என்கிற நிலையிலிருந்து விலகியோடுவதாகும்.

“போர்க்குற்ற விசாரணைகள் என்றால் முன்னாள் போராளிகளும் விசாரிக்கப்படுவார்கள்; தண்டிக்கப்படுவார்கள்.” என்கிற தென்னிலங்கையின் வாதத்தை எதிர்கொள்வது தொடர்பில் தமிழ் மக்கள் எந்தவொரு தருணத்திலும் தயார்படுத்தப்பட்டு இருக்கவில்லை.

அதாவது, இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதிக் கோரிக்கைகளோடு முன் செல்லும் போது, அதன் படிநிலைகள் சார்ந்து எதிர்கொள்ள வேண்டிய விடயங்களை, அனைத்துப் பக்கங்களிலிருந்தும் ஆராய்ந்து மக்களைத் தெளிவுபடுத்தி அறிவூட்டியிருக்க வேண்டும்.

இந்தக் கடப்பாட்டினை தமிழ்த் தேசியத் தரப்புகள் மறந்துவிட்டன. குறிப்பாக, அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் புத்திஜீவிகளும் ஊடகங்களும் அந்த விடயம் குறித்து அவ்வளவு சிந்தனையைக் கொண்டிருக்கவில்லை.

இதனால், தமிழ் மக்களை நோக்கி அச்சுறுத்தல் தொனியிலான அழுத்தங்களை தென்னிலங்கையும் சர்வதேசமும் இலகுவாக முன்வைக்கின்றன. முன்னாள் போராளிகளை விசாரிக்க வேண்டியிருக்கும் என்கிற தொனியிலான அச்சுறுத்தலும் அதில் ஒன்றுதான்.

அதாவது, ஆயுத மோதலில் ஈடுபட்ட இரு தரப்பும் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைகளில் முன்நோக்கி வருவது. ஆக, “இராணுவத்தினர் விசாரிக்கப்பட வேண்டியிருந்தால், முன்னாள் போராளிகளையும் விசாரிக்க வேண்டியிருக்கும். ஆகவே, தமிழ் மக்கள் போர்க்குற்ற விசாரணைக் கோரிக்கைகளை கைவிடுவதே நல்லது” என்கிற வகையிலான வாதத்தையே தென்னிலங்கை தற்போது முன்கொண்டு வருகின்றது.

போர்க்குற்ற விசாரணைகள் சார்ந்து கடைநிலை வீரர்களை மாத்திரம் தண்டிக்க வேண்டும் என்கிற தொனியிலான விடயத்தை தமிழ் மக்கள் யாரும் வைக்கவில்லை. மாறாக, நிகழ்த்தப்பட்ட கொடூரங்களுக்கான நீதியையும் இழப்பீட்டினையும் மீள நிகழாமைக்கான உறுதிப்பாட்டினையும் குற்றங்களைப் புரிய ஆணை வழங்கியவர்கள் மற்றும் குற்றங்களோடு நேரடியாகத் தொடர்புபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையுமே தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அதுதான், விசாரணைப் பொறிமுறை ஒன்றினூடாகவும் நிகழ வேண்டியது. ஆனால், இங்கு நிகழ்வது என்னவென்றால், இரு தரப்பிலுமுள்ள கடைநிலை வீரர்களைக் காட்டி அச்சுறுத்தல் விடுப்பதும், பொறுப்புக் கூறுவதிலிருந்து விலகியிருக்கும் நிலையுமாகும். அதனையே, அரசாங்கம் முன்னிறுத்துகின்றது.

நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வுகளில் கலந்து கொண்ட இராணுவ வீரர் ஒருவரின் தாயார், “இறுதி மோதலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் கடைநிலை வீரர்களோடு முடிந்து போகக் கூடாது. ஆணை வழங்கியவர்களையும் விசாரிக்க வேண்டும். அத்தோடு, இராணுவ வீரர்களுக்கு புனர்வாழ்வுவளிக்கப்பட வேண்டும்.” என்றார்.

முன்னாள் போராளிகளையும் விசாரிக்க வேண்டி வரும் என்கிற தொனியிலான முன்வைப்பு, எப்படி தமிழ் மக்களைப் பதற்றப்பட வைக்கின்றதோ, அதேமாதிரியே போர்க்குற்ற விசாரணைகள் என்கிற விடயம் சிங்களத் தாய்மாரையும் பதற்றப்பட வைக்கின்றது.

ஏனெனில், கடைநிலையிலுள்ள தமது வீரர்களை மாத்திரம் தண்டித்துவிட்டு, ஆணை வழங்கியவர்கள் தப்பித்துவிடுவார்கள் என்கிற அச்ச உணர்நிலை சார்ந்தது அது. அந்த அச்சத்தினை இன்னும் இன்னும் பெருப்பித்து தென்னிலங்கையை எழுச்சிபெற வைப்பது தொடர்பில் பௌத்த, சிங்கள அதிகார பீடமும் கரிசனையோடு செயலாற்றி வருகின்றது. அதனூடு, எதிர்காலத்தில் தாம் நிகழ்த்தப்போகும் திட்டமிட்ட சதிகளுக்கான ஏற்பாடுகளைத் தங்குதடையின்றி செய்ய முடியும் என்றும் கருதுகின்றன.

பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்காக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு மேலதிகமாக இரண்டு வருட கால அவகாசத்தினை (A/HRC/34/1 என்கிற தீர்மானத்தின் மூலம்) கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி வழங்கியிருக்கின்றது.

ஏற்கெனவே, வழங்கப்பட்ட 18 மாதங்கள் தொடர்பில் பெரிய முன்னேற்றங்கள் ஏதுமற்ற நிலையில், இந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது. கால அவகாசத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக, 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட (30/1) தீர்மானத்திலுள்ள அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுவதாக இலங்கை வாக்குறுதியளித்திருக்கின்றது.

ஜெனீவாவில் “தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கடப்பாட்டோடு இருக்கின்றோம்” என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறிக்கொண்டிருந்த தருணத்தில், பலாலியில் இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “எந்தவொரு தருணத்திலும் இராணுவத்தினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதியேன்” என்றார்.

கொழும்பில், சட்டத்தரணிகளுக்கிடையில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ, “கலப்பு விசாரணைப் பொறிமுறைகளை முன்னெடுப்பதற்கான அனுமதியினை அரசியலமைப்பு வழங்கவில்லை” என்கிறார்.

இந்தத் தருணத்திலேயே ஜெனீவாவால் கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆக, அந்தத் தீர்மானத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றான கலப்பு விசாரணைப் பொறிமுறையை எந்தவொரு தருணத்திலும் முன்னெடுக்க முடியாது என்கிற விடயத்தை இலங்கை அரசும், ஆட்சியாளர்களும் அறிவித்த பின்னரும் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது.

குறித்த கால அவகாசம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடிவாளத்தினை எப்படி தக்க வைத்திருப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கின்றபோது, சர்வதேச நாடுகளும் இன்னும் சில அமைப்புகளும் கடிவாளத்தினை பிடுங்கி விடுவது தொடர்பில் கவனம் செலுத்துகின்றனவோ என்றும் அச்சம் ஏற்பட்டிருக்கின்றது.

அதன்போக்கிலேயே, தமக்குக் கிடைத்துள்ள இரண்டு வருட காலத்தினை தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனங்களையும் அச்சுறுத்தல் தொனியிலான அழுத்தங்களையும் ஏற்படுத்துவதில் வெற்றி கண்டுவிட வேண்டும் என்பதில் தென்னிலங்கை குறியாக இருக்கின்றது. அதன்போக்கிலானதே, முன்னாள் போராளிகளையும் விசாரிக்க வேண்டும் என்கிற முன்வைப்பாகும்.

இறுதி மோதல்களின்போது, சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகளில் 12,000 பேர் மாத்திரமே இராணுவத்தின் தடுப்புக்காவல், சித்திரவதை, விசாரணைகள் தாண்டிய புனர்வாழ்வு என்கிற நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

விடுவிக்கப்பட்டாலும், அவர்கள் தொடர்பில் தேசிய பாதுகாப்புத் தரப்பு, தொடர்ச்சியாகச் செய்கின்ற கண்காணிப்பு என்பது அச்சுறுத்தலின் பெரும் அழுத்தமாகும். ஆனால், சரணடைந்த முன்னாள் போராளிகளின் இன்னொரு பகுதியினர் எங்கே என்கிற ஏக்கத்தோடு ஆயிரக்கணக்கான தாய்மாரும் உறவுகளும் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் குறித்து என்ன பதிலைச் சம்பந்தப்பட்டவர்கள் வழங்கப் போகின்றார்கள் என்பதே இப்போதுள்ள முக்கிய கேள்விகளில் ஒன்று.

இன்னொரு விடயம், முக்கியமாக சுட்டிக்காட்டப்பட வேண்டியிருக்கின்றது. அதாவது, போராட்ட இயக்கமொன்றும் மக்களினால் தெரிவு செய்யப்பட அரசாங்கம் ஒன்றுக்குமான பொறுப்புக்கூறல் என்பது அடிப்படையிலேயே வேறுபட்டவை.

முதலில், மக்களின் ஆணை பெற்ற அரசாங்கம் தன்னுடைய கடப்பாடுகளை நிறைவேற்றியாக வேண்டும். அதுவே, தார்மீகம். அதனைச் செய்வதிலிருந்து தப்பிப்பதற்காக, அச்சுறுத்தல் விடுப்பது என்பது ஜனநாயக ரீதியாகத் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் என்கிற முன்வைப்புக்கு எதிரானது. அது, மனித உரிமைகளின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறுவதும் ஆகும்.

போர்க்குற்ற விசாரணைக் கோரிக்கைகளை முன்வைக்கும் போது, முன்னாள் போராளிகளை நடுவில் வைத்து தப்பிக்க நினைக்கும் தென்னிலங்கையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் இனியாவது மக்களைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பினை தமிழ்த் தேசியப் பரப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எடுத்துக் கொள்கின்ற விடயங்கள் எல்லாமும் துரிதமாக நடைபெற்றுவிட வேண்டும் என்கிற ஆர்வத்தோடு மாத்திரம் எல்லாம் சாத்தியமாகிவிடாது. மாறாக, விடயங்களின் அனைத்துப் பக்கங்களையும் தன்மைகளையும் ஆராய்ந்து கொண்டு செல்லும் போதே, எதிர்வாதங்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு பயணிக்க முடியும். அது சாத்தியமில்லை என்றால், ஒவ்வொரு கட்டத்திலும் தடுமாறி விழ வேண்டி வரும். இப்போது இருப்பது போலவே!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போடி அருகே கள்ளக்காதலை கணவன் கைவிட மறுத்ததால் மனைவி தற்கொலை..!!
Next post இரவில் பஸ்ஸை வழிமறித்து பயணி மீது தாக்குதல்: பொலனறுவையில் சம்பவம்..!!