By 28 April 2017 0 Comments

பன்றிக் காய்ச்சல் பயம்..!! (கட்டுரை)

swineflu_2285569fஅண்மைக் காலமாக மக்களை அச்சுறுத்தும் தொற்றுநோய்களில் முன்னிலை வகிப்பது ‘பன்றிக் காய்ச்சல்’. இலங்கையில் பல மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால் மக்கள்
பீதியில் உள்ளனர்.

வைரஸ் நோய்

சாதாரண ஃபுளு காய்ச்சலின் ஒரு வகைதான் பன்றிக் காய்ச்சல். இன்ஃபுளுயன்சா – A (H1N1) என்னும் வைரஸ் கிருமியால் இந்த நோய் வருகிறது. இதை அலோபதி மருத்துவத்தில் (ஆங்கில மருத்துவம்) ‘ஸ்வைன் ஃபுளு’ (Swine Flu) என்கிறார்கள். ‘ஸ்வைன்’ என்றால் ‘பன்றி’ என்று பொருள்.

இந்தநோய் முதன் முதலில் பன்றிகளைத் தாக்கிய காரணத்தால், இந்தப் பெயரைப் பெற்றது. நாளடைவில், இந்த வைரஸ் கிருமிகள் வீரியம் பெற்று, பன்றியிடமிருந்து மனிதரைத் தாக்கத் தொடங்கியது. இப்போது நோய் பரவி வருவது பன்றிகளிடமிருந்து அல்ல; நோய் தொற்றிய மனிதரிடமிருந்து மற்றொரு மனிதரைத் தாக்குகிறது.

முதன் முதலில் 2009 இல் மெக்ஸிகோ நாட்டில்தான் இந்த நோய் தோன்றியது. அங்கிருந்து அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்குப் பரவி, இந்தியாவுக்கு வந்தது.

இந்தக் காய்ச்சல் ஓர் அதி தீவிர தொற்றுநோய் ஆகும். காற்றின் மூலம் மட்டுமே பரவக்கூடியது. சமயங்களில் இது ஓர் இடத்தில் தொடங்குகிறது என்றால், உடனடியாக அது இலட்சக் கணக்கான பேரை பாதித்து, உயிர்ப்பலி வாங்குகிற ஒரு கொள்ளை நோயாகப் பரிணமிக்கும்.

எப்படிப் பரவும்?

நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தினாலோ, சளியைக் காறித் துப்பினாலோ கிருமிகள் சளியுடன் காற்றில் பரவி, அடுத்தவர்களுக்குத் தொற்றி நோயை உண்டாக்கும்.

நோயாளியின் மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் வைரஸ் கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த இடங்களைத் தொட்டுவிட்டு, அதே கைவிரல்களால் அடுத்தவர்களைத் தொட்டால் கிருமிகள் அவர்களுக்கும் பரவிவிடும்.

நோயாளி பயன்படுத்திய கைக்குட்டை, உடை, உணவுத்தட்டு, போர்வை, துவாய், சீப்பு, தலையணை, கழிப்பறைக் கருவிகள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவற்றின் மூலம் அடுத்தவர்களுக்கும் நோய் எளிதாகப் பரவிவிடும்.

நோயாளி பேசும்போதுகூட, நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. ஆறு அடி தூரத்துக்கு இந்தக் கிருமிகள் பரவும் தன்மை உடையது. ஆகவே, காற்றில் பரவும் மற்றத் தொற்றுநோய்களைப் போல் மிக நெருக்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பரவும் என்று அலட்சியமாக இருக்க முடியாது. இந்தக் காய்ச்சல் மக்களிடம் வேகமாகப் பரவுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

அறிகுறிகள்

உடலுக்குள் வைரஸ் புகுந்த மறுநாளிலிருந்து ஒரு வாரத்துக்குள் நோய் தொடங்கிவிடும். கடுமையான காய்ச்சல், உடல் வலி, தலை வலி, தொடர் தும்மல், இருமல், தொண்டைவலி, மூக்கு ஒழுகுதல், மார்புச் சளி, மூச்சடைப்பு, மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி, வயிற்றுப்போக்கு, பசியின்மை, சோர்வு போன்றைவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறிகள் ஒரு வாரத்துக்கும் மேல் நீடிக்கும்.

யாருக்குப் பாதிப்பு அதிகம்?

சுகாதாரம் குறைந்த இடங்களிலும் நெருக்கமான இடங்களிலும் வசிப்பவர்கள், இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், ஊட்டச்சத்துக் குறைந்தவர்கள், முறையாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், ஆஸ்துமா, காசநோய், சிறுநீரக நோய், சர்க்கரை நோய் உள்ளவர்கள், இதய பாதிப்பு உள்ளவர்கள், முதியவர்கள், புகைப் பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள் ஆகியோரை இந்த நோய் மிகச் சுலபத்தில் பாதித்துவிடுகிறது.

மேலும், சந்தை, திருவிழா, ஊர்வலம், திரையரங்குகள், வியாபார அங்காடிகள் போன்ற இடங்களில் மக்கள் நெருக்கமாகக் கூடும் இடங்களிலும் பஸ், ரயில் பயணங்களின்போதும் இந்த நோய் மற்றவர்களுக்குப் பரவுவது எளிதாகிறது.

சிக்கல்கள்

பன்றிக் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த குழந்தைகளும் முதியவர்களும்தான். இவர்களுக்குக் காய்ச்சல் கடுமையாவதுடன், மூச்சுக் குழாய் அழற்சி நோய், ‘நிமோனியா’ என்று அறியப்படும் நுரையீரல் அழற்சி நோய், மூச்சுச் சிறு குழாய் அழற்சி நோய், இதயத்தசை அழற்சி நோய், மூளைக் காய்ச்சல், சிறுநீரகச் செயலிழப்பு என்று பலதரப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தி உயிரிழப்பு வரை கொண்டுவந்து விடும்.

என்ன பரிசோதனை?

நோயாளியின் மூக்கு மற்றும் தொண்டையிலிருந்து சளியை எடுத்து ‘ரியல் டைம் பிசிஆர்’ (Real Time PCR) எனும் பரிசோதனை செய்து, இந்த நோய் உறுதி செய்யப்படுகிறது. ‘வைரஸ் கல்ச்சர்’ (Virus Culture) எனும் பரிசோதனையும் இந்த நோயை 100 சதவீதம் உறுதி செய்ய உதவுகிறது. ஆனால், இந்தப் பரிசோதனைகள் பெரிய நகரங்களில் உள்ள நவீன மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படுகின்றன.

என்ன சிகிச்சை?

நோயாளிக்கு வந்துள்ளது பன்றிக் காய்ச்சல்தான் என்பது உறுதியானால், பன்றிக் காய்ச்சலுக்கான ஆங்கில மருந்தை, டொக்டர் ஐந்து நாட்களுக்கு உள்ளெடுக்குமாறு அறிவுறுத்துவார்.

காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்ற மற்ற நோய்களுக்கான அறிகுறிகளைக் குறைக்கவும் மருந்துகள் தேவைப்படும். குளுக்கோஸ் செலைன் மற்றும் பிராணவாயு போன்றவையும் செலுத்தப்பட வேண்டி வரலாம்.

இந்த நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். அல்லது மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவாது.

எப்படித் தடுப்பது?

இந்த நோய் அடுத்தவர்களுக்குப் பரவுவதைத் தடுக்க, இந்த நோயுள்ளவர்கள் இருமும் போதும் தும்மும்போதும் மூக்கையும் வாயையும் சுத்தமான கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும்.

கைக்குட்டை இல்லையென்றால், கைகளால் முகத்தை மூடி, முடிந்தவரை சளி வெளியில் தெறிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு, கைகளை அடிக்கடி சோப்புப்போட்டுத் தண்ணீரில் கழுவ வேண்டும். வீட்டில் ஓய்வெடுப்பது நல்லது. சிறார்கள் பள்ளிக்கூடத்துக்கு ஒரு வாரம் வரை போக வேண்டாம்.

பின்பற்ற வேண்டிய முற்பாதுகாப்பு நடவ​டிக்கைகள்

* பொதுஇடங்களுக்குச் சென்று திரும்பினால், வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு கலந்து கொப்பளித்து, தொண்டையைச் சுத்தம் செய்யுங்கள்.

* முகத்தையும் கைகளையும் சோப்புப் போட்டுக் கழுவிச் சுத்தம் பேணுங்கள்.

* நோய் எதிர்ப்புச் சக்தி பலமாக இருந்தால் இந்நோய் அவ்வளவாகப் பாதிக்காது. ஆகவே, சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டு, உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்.

* உடற்பயிற்சிகளைச் செய்து சுறுசுறுப்பாக இருங்கள்.

* காற்றோட்டமான இடத்தில் நன்றாகத் தூங்குங்கள்.

* நிறையத் தண்ணீர் குடியுங்கள்.

* அங்காடிகள் , கடை, சந்தை, தியேட்டர், பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற மக்கள் கூடும் இடங்களில் நேரம் செலவழிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

* குழந்தைகளுக்கு குறைந்தது ஒரு வருடத்துக்குத் தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யலாம். இதன் மூலம் பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.

* புகைபிடித்தலையும் மதுக் குடிப்பதையும் மறப்பது போன்ற அடிப்படை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்தக் காய்ச்சலுக்குக் கடிவாளம் போடலாம்.

தடுப்பூசி உண்டா?

பன்றிக் காய்ச்சலுக்கு எனத் தனிப்பட்ட தடுப்பூசி இல்லை. ஃபுளு காய்ச்சலுக்குப் போடப்படும் வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரி மூவகைத் தடுப்பூசி (Trivalent inactivated vaccine – TIV) தான் பன்றிக் காய்ச்சலுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
பன்றிக் காய்ச்சல் பரவும்போது இதைப் போட்டுக்கொள்ளலாம். இது ஓராண்டுக்குத்தான் நோயைத் தடுக்கும். எனவே, வருடாவருடம் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்கிறவர்களுக்குப் பன்றிக்காய்ச்சல் எப்போதும் வராது.

குழந்தை பிறந்து ஆறு மாதத்திலிருந்து மூன்று வயதுக்குள் இதைப் போடுவதாக இருந்தால் 0.25 மி.லி அளவிலும் மூன்று வயதிலிருந்து எட்டு வயதுக்குள் போடுவதாக இருந்தால் அரை மில்லி அளவிலும் தொடையில் அல்லது புஜத்தில் தசை ஊசியாகப் போட்டுக்கொள்ள வேண்டும். எட்டு வயதுக்குள் முதல் முறையாக இதைப் போடும்போது முதல் ஊசிக்குப் பிறகு ஒரு மாதம் கழித்து இரண்டாம் தவணை ஊசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

ஒன்பது வயதுக்கு மேல் முதல் முறையாகப் போடுவதாக இருந்தால் அரை மில்லி அளவில் ஒருமுறை மட்டும் போட வேண்டும். இத்தடுப்பூசியை முதல் முறையாக எந்த வயதில் போட்டாலும் அதற்குப் பிறகு வருடத்துக்கு ஒருமுறை மீண்டும் போட வேண்டியதும் அவசியம்.

தடுப்பு மருந்து

உயிர் நுண்ணுயிரி இன்ஃபுளுயென்சா தடுப்பு மருந்து (Live attenuated influenza vaccine – LAIV) என்றொரு தடுப்பு மருந்து உள்ளது. இது ‘ஒரு நேசல் ஸ்பிரே’. இதை மூக்கில்விட்டு உறிஞ்சிக்கொள்ள வேண்டும். முதலில் சொல்லப்பட்ட தடுப்பூசியை விட அதிக ஆற்றல் உள்ளது; அதிக பாதுகாப்புத் தருவது. என்றாலும், இதை இரண்டு வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமாக உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதயநோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய், புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய் உள்ளவர்களும் கர்ப்பிணிகளும் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் இதைப் பயன்படுத்தக்கூடாது.

அடுத்து, ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களுக்கும் இதைப் போடமுடியாது. மூக்கில் சரியாக இதை விட வேண்டும். அறைகுறையாக மூக்கில் விட்டால் நோய்ப் பாதுகாப்பு முழுமையாக கிடைக்காது. அதனால் கவனம் தேவை.

மாறிக்கொண்டே வரும் தடுப்பூசி

எந்தத் தடுப்பூசிக்கும் இல்லாத ஒரு தனித்தன்மை ரிஐவி (TIV) தடுப்பூசிக்கு உண்டு. பொதுவாக ஆண்டுதோறும் இந்தக் கிருமியின் தன்மை மாறிக்கொண்டே இருக்கும். ஓர் ஆண்டில் போட்ட தடுப்பூசியையே அடுத்த ஆண்டில் போட்டால் தடுப்பூசி பலன் தராது.

எனவே, உலக சுகாதார நிறுவனம் ஆண்டுக்கு இரண்டு முறை தெற்கு ஆசியாவில் பரவுகிற கிருமியின் தன்மையை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் தடுப்பு மருந்து தயாரிக்கச் சொல்கிறது.

முகமூடிகள் அவசியமா?

எல்லோருமே முகமூடி அணிய வேண்டும் என்கிற அவசியமில்லை. சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களோடு நெருக்கமாகத் தொடர்பு வைத்துக்கொள்கிறவர்கள் மட்டும் முகமூடி அணிந்தால் போதும்.

அடுத்து, முகமூடிதான் அணிய வேண்டும் என்றில்லை. முகத்தை மூடிக்கொள்வதற்குச் சுத்தமான கைக்குட்டை போதும். முகமூடி அணிவதாக இருந்தால் மூன்றடுக்கு முகமூடி அல்லது N95 ரக முகமூடியை மட்டுமே அணிய வேண்டும். இவைதான் வைரஸ் கிருமிகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.

இன்னொன்று, உபயோகித்த முகமூடியைத் தொட நேர்ந்தாலோ, கழற்றினாலோ, கைகளை நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும். ஒருமுறை உபயோகித்துக் கழற்றிய முகமூடியை மீண்டும் அணியக்கூடாது.

ஏற்கெனவே, அணிந்த முகமூடியை வெளியில் எறியாதீர்கள். அதன் மூலம் பலருக்கும் நோய் பரவிவிடும். ஆகவே, அதைக் குப்பைத்தொட்டியில் போடுங்கள்.

சாதாரண ஃபுளு காய்ச்சலுக்கும் பன்றிக் காய்ச்சலுக்கும் என்ன வித்தியாசம்?

சாதாரண ஃபுளு காய்ச்சலில் காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, இருமல், தும்மல் போன்றவை இருக்கும். பன்றிக் காய்ச்சலில் கூடுதலாக வாந்தி, வயிற்றுப்போக்கு இருக்கும்.

சாதாரண ஃபுளு காய்ச்சலில் முதலில் மூக்கில் நீர் வடிதல், தும்மல், இருமல் இருக்கும். பிறகுதான் காய்ச்சல் வரும். பன்றிக் காய்ச்சலில் தொடக்கத்திலேயே காய்ச்சல் அதிக அளவில் வரும். மூன்றாம் நாளில் மூக்கில் நீர் ஒழுகும்; தும்மல், இருமல் தொடரும்.

H1N1 என்றால் என்ன?

H1 என்றால் ஹீம்அக்ளுட்டினின் புரதம் (HAEMAGGLUTININ PROTEIN).
N1 என்றால் நியூரோமினிடேஸ் புரதம் (NEUROMINIDASE PROTEIN)Post a Comment

Protected by WP Anti Spam