மீண்டும் பரபரக்கும் திருகோணமலை..!! (கட்டுரை)

Read Time:14 Minute, 44 Second

downloadகடந்த பல ஆண்டுகளாகவே இலங்கை அரசியலில் துறைமுகங்கள் பற்றிய சர்ச்சைகள் கூடுதல் முக்கியத்துவம் பெற்று வந்திருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில், கொழும்பு துறைமுக நகரச் சர்ச்சை தீவிரமாக இருந்தது.

அதற்குப் பின்னர் கொழும்புத் துறைமுகத்துக்கு சீன நீர்மூழ்கிகள் மேற்கொண்ட பயணங்களால் சர்ச்சைகள் எழுந்தன.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், துறைமுக நகரத் திட்டத்தை புதிய அரசாங்கம் இடைநிறுத்தியதாலும், அந்தத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் விடயத்தில் நீடித்த இழுபறிகளாலும் சர்ச்சைகள் எழுந்திருந்தன.

அதற்குப் பின்னர், ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தச் சர்ச்சைகளுக்கு இன்னமும் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில் இப்போது திருகோணமலை துறைமுகம் தொடர்பான சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன.

திருகோணமலை பற்றிய சர்ச்சைகள் இப்போது எழுந்திருப்பதற்குத் தனியே துறைமுகம் மட்டும் காரணமல்ல. அதனை அண்டியதாக சீனக்குடாவில் அமைந்துள்ள- பிரித்தானியர்களால் நிறுவப்பட்ட 99 பாரிய எண்ணெய்க் குதங்கள் தொடர்பான விவகாரமும் தான், இப்போது ஏற்பட்டுள்ள சூழலுக்கு இன்னொரு காரணம்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் வழங்கி அபிவிருத்தி செய்யவுள்ளதைப் போலவே, திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவிடம் வழங்கி அல்லது அதனுடன் இணைந்து அபிவிருத்தி செய்யும் திட்டம் ஒன்று அரசாங்கத்திடம் இருக்கிறது. இதன் மூலம் ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்குவதால் ஏற்பட்டுள்ள சமநிலை மாற்றங்களை ஈடு செய்யலாம் என்று அரசாங்கம் கருதுகிறது.

அடுத்து, சீனக்குடாவில் உள்ள 99 எண்ணெய்க் குதங்களை இந்தியாவுடன் இணைந்து, கூட்டு முயற்சியாக நிர்வகிக்கும் திட்டம் ஒன்றும் அரசாங்கத்திடம் இருக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வாங்கிக் குவித்த கடன்களால் நாடு பொருளாதார ரீதியாக தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு, இதுபோன்ற வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களை மாத்திரமே சாத்தியம் என்று அரசாங்கம் நம்பியிருக்கிறது.

ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்க எடுக்கப்பட்ட முடிவும் சரி, திருகோணமலை விடயத்தில் இந்தியாவுடன் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளும் சரி, இதனை அடிப்படையாகக் கொண்டவை தான்.

இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த புதன்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுகளின் முக்கியமான கருப்பொருளாக இருந்தது திருகோணமலை தான்.

திருகோணமலை துறைமுகம் மற்றும் சீனக்குடா எண்ணெய்க் குதங்கள் இந்த இரண்டையும் இந்தியாவுடன் இணைந்து எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது குறித்தே பிரதான பேச்சுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

ஆனால், இந்த விடயத்தில் அரசாங்கம் எந்தளவுக்கு முன்னேற்றங்களைப் பெறமுடியும் என்பது முக்கியமான வினாவாக இருக்கிறது. அதற்குக் காரணம், சீனாவுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு இருப்பதைப் போலவே, இந்தியாவுடன் திருகோணமலை தொடர்பான உடன்பாடுகளைச் செய்து கொள்வதற்கும் எதிர்ப்புகள் காணப்படுகின்றன.

திருகோணமலை எண்ணெய்க் குதங்களை, இந்திய நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அந்தத் திட்டத்தைக் கைவிடக் கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடக்கம், பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தன.

இதனால் நாடெங்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அல்லோலகல்லோலப்பட்டன. ஒரு வழியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தொழிற்சங்கங்களுடன் பேச்சுகளை நடத்தி, சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு விற்கப் போவதில்லை, என்ற உறுதிமொழியைக் கொடுத்த பின்னரே, போராட்டம் கைவிடப்பட்டது. அதற்காக இந்தத் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டு விட்டது என்று அர்த்தமில்லை.

சீனக்குடாவில் உள்ள 99 எண்ணெய்க் குதங்களில் ஒருபகுதி, 2002 ஆம் ஆண்டு இந்தியாவின் ஐஓசி நிறுவனத்துக்கு 35 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஐஓசி நிறுவனம் 15 எண்ணெய்க் குதங்களை மாத்திரம் பயன்படுத்தி வருகிறது.

எஞ்சியுள்ள 84 எண்ணெய்க் குதங்களையும் அபிவிருத்தி செய்து பயன்படுத்துவது தொடர்பாகவே இழுபறிகள் ஏற்பட்டுள்ளன. இதில் 10 எண்ணெய்க் குதங்களை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கி விட்டு, எஞ்சிய 74 குதங்களை இந்தியாவுடன் இணைந்து கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது இதுவரையில் தெரியவரவில்லை. எவ்வாறாயினும், புதுடெல்லியில் பேச்சுகளை நடத்தும் போது, தொழிற்சங்கங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்துவிட வேண்டாம் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, ஜனாதிபதி எச்சரித்திருந்தார் என்று கூறப்படுகிறது.

இன்னொரு பக்கத்தில், திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யும் திட்டத்துக்கும் அரசாங்கம் எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.

ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்கவும், அதனைச் சமப்படுத்தும் வகையில் திருகோணமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரச்சினையைக் கிளப்பி விட்டிருந்தார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

அவரது தலைமையிலான கூட்டு எதிரணியினர், திருகோணமலை துறைமுக அபிவிருத்தித் திட்டத்துக்கும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் கூட, திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்குத் தாரைவார்க்க அரசாங்கம் முற்படுவதாகவே குற்றம்சாட்டி வருகின்றன.

திருகோணமலையில் சீனக்குடா எண்ணெய்க் குதங்கள் தொடர்பாகவும், துறைமுகம் தொடர்பாகவும் எப்படியாவது இந்தியாவுடன் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் மே 12 ஆம் திகதி கொழும்புக்கு வரும் போது, இது தொடர்பான உடன்பாட்டைச் செய்யும் திட்டத்துடன் அரசாங்கம் இருக்கிறது. ஆனால், அமைச்சரவைப் பேச்சாளர் ஒப்பந்தங்கள் எதுவும் கைச்சாத்திடும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்று கூறியிருக்கின்றார்.

எனினும், இந்த உடன்பாட்டைச் செய்து கொள்வதில் இந்தியா எந்தளவுக்கு அக்கறையுடன், ஆர்வத்துடன் இருக்கிறது என்பது முதலாவது பிரச்சினை.

அரசாங்கத்துக்கு உள்ளேயும், உள்நாட்டிலும் எழுந்திருக்கின்ற எதிர்ப்புகளை, நல்லாட்சி எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பது இரண்டாவது பிரச்சினை. திருகோணமலை என்பது இந்தியாவுக்கு முக்கியமானது. சீனக்குடா எண்ணெய்க் குதங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்தியா விரும்புகிறது. ஏற்கெனவே தனது கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய்க் குதங்களின் பாதுகாப்புக் கருதி. திருகோணமலைத் துறைமுகத்தின் மீது வேறெந்த நாடும் கண் வைத்து விடக்கூடாது என்பதில் இந்தியா கவனமாக இருக்கிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு மேற்கொண்டிருந்த முதலாவது பயணத்தின் போது, வெளியிட்ட கூட்டறிக்கையில், திருகோணமலையை பிராந்தியத்தின் எண்ணெய்க் கேந்திரமாக மாற்றுவதற்கு இந்தியா உதவும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், அதற்குப் பின்னர், திருகோணமலையை பிராந்திய எண்ணெய்க் கேந்திரமாக மாற்றுவதற்குரிய எந்த நடவடிக்கையையும் இந்தியா மேற்கொண்டிருக்கவில்லை.

அதுபோலத்தான், திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம், இந்தியாவுக்கு நீண்டகாலப் பொருளாதார நலன்கள் கிடைக்காது என்பதால், அதிலும் இந்தியா ஆர்வம் காட்டவில்லை.

பாகிஸ்தானில் குவடார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் சீனாவுக்குப் போட்டியாக, ஈரானின் சபஹார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.

ஆனாலும், கடல்கடந்த துறைமுகங்களில் சீனாவைப் போல பெருமளவில் நிதியைக் கொட்டுகின்ற வல்லமை இந்தியாவுக்கு இன்னமும் இல்லை என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும். சீனாவுடன் போட்டியிடும் ஆர்வம் இருந்தாலும், வரையறுக்கப்பட்ட நிதி வளம் இந்தியாவுக்கு ஒரு தடையாகவே இருக்கிறது.

இலங்கையின் துறைமுகங்களின் மீது இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்பினாலும் கூட, அதற்காக பில்லியன் கணக்கான டொலர்களைக் கொட்டுவதற்கு தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. இது இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையில் திட்டங்களை முன்னெடுக்கும் இலங்கை அரசாங்கத்தின் திட்டங்களுக்கு முக்கியமானதொரு தடைக்கல்லாகும்.

அதுபோலவே, அரசாங்கத்துக்குள்ளேயும், திருகோணமலை தொடர்பாக இந்தியாவுடன் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிர்ப்புகள் இருக்கின்றன. இரண்டு பிரதான கட்சிகளின் கூட்டு அரசாங்கமே ஆட்சியில் இருக்கிறது என்பதை, இதுபோன்ற தருணங்களில், காணப்படுகின்ற வேற்றுமைகளே அப்பட்டமாகவே வெளிப்படுத்தி விடுகின்றன. அரசாங்கத்துக்கு வெளியே உள்ள தரப்புகளும் திருகோணமலை விடயத்தில் அரசாங்கத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. திருகோணமலை என்பது, ஹம்பாந்தோட்டையை விட முக்கியமானது. திருகோணமலை எப்போதுமே உணர்வு பூர்வமான இடமாக இருந்து வந்திருக்கிறது.

அழிவுகள் நிறைந்த நான்காவது கட்ட ஈழப்போர் கூட திருகோணமலையில் தான் ஆரம்பிக்கப்பட்டது. எனவே, திருகோணமலையை முன்னிறுத்தி இந்தியாவுடன் உடன்பாடுகளைச் செய்து கொள்ளும் அரசாங்கத்தின் முயற்சிகள் எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகுபலி-2விற்கு ராஜமௌலி சம்பளம் மட்டும் இத்தனை கோடியா? அதிர்ந்த பாலிவுட்..!! (வீடியோ)
Next post வசூலை விட பாகுபலி 2 இப்படியொரு சாதனையை படைத்துள்ளது தெரியுமா?..!!