்புலிகளுடன் கடும் போர்: கிளிநொச்சி இருளில் மூழ்கியது; டெலிபோன் இணைப்பு துண்டிப்பு
யாழ்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நீடிக்கிறது. கிளிநொச்சி பகுதி மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியது. ஒரே நேரத்தில் 3 இடங்களை பிடிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சம்பூரை இலங்கை ராணுவத்தினர் 5 நாட்களுக்கு முன் பிடித்தனர். சம்பூரில் இருந்து ராணுவம் வாபஸ் ஆகாவிட்டால் பெரிய அளவில் போர் மூளும் என்று விடுதலைப்புலிகள் எச்சரித்தும் ராணுவம் அதை நிராகரித்து விட்டது.
இதை தொடர்ந்து விடுதலைப்புலிகள் ராணுவத்தினர் மீது அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த தாக்குதலில் 11 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 53 பேர் காயம் அடைந்தனர்.
யாழ்ப்பாணத்தில் முகமாலை, நாகர்கோவில், ஆகிய பகுதிகளை பிடிக்க ராணுவம் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியது. 1 கிலோ மீட்டனர் தூரத்துக்கு ராணுவத்தினர் முன்னேறி வந்தனர். ஆனால் விடுதலைப்புலிகள் ஆவேசமாக பீரங்கிகளால் எதிர்தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியால் ராணுவம் முகாம்களுக்கு திரும்பியது.
வன்னி மற்றும் யாழ்ப்பாணத்தை பிரிக்கும் யானைஇரவு பகுதியை பிடிக்க ராணுவத்தினர் முன்னேறி வந்தனர். அதன் அருகே உள்ள பலாயில் இலங்கை ராணுவ விமானங்கள் சரமாரியாக குண்டுவீசி தாக்கி வருகிறது.
கிளிநொச்சியில் டெலிபோன் இணைப்புகளையும் மின்சார இணைப்புகளையும் துண்டித்து விட்டது. இதனால் கிளிநொச்சி இருளில் மூழ்கியது. அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாத அளவுக்கு அந்த நகரம் துண்டிக்கப்பட்டுள்ளது.