தீதும் நன்றும் பிறர் தர வாரா..!! (கட்டுரை)

Read Time:20 Minute, 48 Second

Teenage girl using smart phone
Teenage girl using smart phone
“உன் கையில பிளேடு வச்சி 3 முறை வெட்டிக்கொள், அதனை எனக்கு புகைப்படம் எடுத்து அனுப்பு. அதிகாலை 4 மணிக்கு எழுந்து உன் வீட்டு மொட்டை மாடிக்கு போய், ஏதாவது ஒரு பேய் படம் பார்த்து, அத எனக்கு புகைப்படம் எடுத்து அனுப்பு”, இப்படி யாராவது உங்களிடம் சொன்னால் அதனை சொல்பவரும், அதனை அப்படியே செய்தால், அப்படிச் செய்பவரையும் “முட்டாள்” என்று அழைப்பதில் தப்பில்லை.

“அவன் படிப்பறிவில்லாத ஒரு முட்டாள்” என்று யாரையாவது பார்த்து, யாரோ ஒருவர் விளித்திருப்பதை நீங்கள் ஒரு முறையாவது உங்கள் வாழ்க்கையில் கண்டிருக்கலாம்.

“முட்டாள்” என்று கல்வி அறிவற்றவர்களை விளிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

பிறரால் ஏற்றுக்கொள்ளமுடியாத, தவறு என்று தெரிந்தும் செய்வது, யோசனையின்றி செயற்படுவது, சாதாரணமாகச் செய்ய வேண்டிய செயலைக்கூட சாதனை போல செய்து சரிந்து விழுவது, இவ்வாறு “முட்டாள்தனம்” என்பதற்கு இன்னும் உதாரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லமுடியும்.

ஒரு வரியில் சொல்வதென்றால் “அறிவைப் பயன்படுத்தாதவன்” என்று சொல்லலாம். அவரவர் தமது திறமைக்கும் அறிவுக்கும் ஏற்ற வகையில் ஒரு விடயத்தில் முடிவெடுப்பர். சில சமயங்களில் மெத்தப் படித்தவர்கள் கூட முட்டாள்தனமாக முடிவெடுக்கும் சம்பவங்களும் சம்பவித்து விடுகின்றன.

மனிதன் இன்று எந்தளவுக்கு தொழில்நுட்ப உலகில், குறிப்பாக இணைய உலகில் வளர்ச்சியடைந்து வருகின்றானோ, அதைவிட அதிகமாக, மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் வளர்ந்து வருகின்றன.

இணையத்தின் வளர்ச்சி, உலகத்தை உள்ளங்கையில் சுருக்கியது என்றால், அதைத் தவறாகப் பயன்படுத்துபவர்களால் மனிதனின் உயிர் “50 நாட்கள்” என்ற ஆபத்தை அடையாளம் காட்டிவிட்டுச் சென்றுள்ளது.

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் என்றால், நம்முடைய வீடுகளின் கணினி அறிமுகமான காலத்தில் அல்லது, கணினி கற்கைநெறிக்குச் செல்லும் இடங்களில், கணினி விளையாட்டுகளை விளையாடிய அனுபவம் பலருக்கு இருக்கலாம். கார் விளையாட்டுகள் அதிகளவில் அங்கு பதிவேற்றப்பட்டிருக்கும்.

அப்போதைய நிலையில், தம் வீட்டுக் குழந்தைகள் என்ன விளையாடுகிறார்கள் என்பது, பெற்றோர்களுக்குப் பெரும்பாலும் தெரிந்திருக்கும். நமக்கு அறிமுகமான கடைகளில், இறுவட்டுகளை வாங்கிவந்து, கணினியில் விளையாடியிருப்போம்.

ஆனால், இன்று இணையத்தின் வளர்ச்சியை அடுத்து, நம் வீட்டுக் குழந்தைகள் என்ன விளையாடுகிறார்கள் என்றே கணிக்க முடியாத நிலை தோன்றிவிட்டது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான இணைய விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. திறன்பேசிகளின் வளர்ச்சி எம் வீட்டுக் குழந்தைகளின் திறன்களை முடக்கிவிடும் கைங்கரியத்தைச் செய்வதை யாராலும் மறுக்கமுடியாது.
ஓடி விளையாடிய குழந்தைகள், இன்று ஒளிந்துகொண்டு, இணைய விளையாட்டுகளில் ஈடுபடுவது, எத்தனை பெற்றோருக்குத் தெரியும்.

இவ்வளவு நாட்களாக, இந்த இணைய விளையாட்டுகள் பிள்ளைகளின் திறமை, நேரம் இதைத்தான் வீணடித்து வந்தன. ஆனால், இன்று அதுக்கும், மேலாக என்று சொல்வது போல, உயிரைப் பறிக்கும் நிலைக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இவ்வாறு, இன்று உலகை ஆட்டிவைக்கும் ‘புளூவேல்’ என்ற விளையாட்டு தொடர்பில், எத்தனை பெற்றோருக்குத் தெரியும் என்பது கேள்விகுறிதான்.

இந்த விளையாட்டு, ‘மரண விளையாட்டு’ என்று ஊடகங்களின் செய்திகள் ஊடாகத் தெரிந்திருக்கலாம். ஆனால், நம்வீட்டுப் பிள்ளைகள் இதை விளையாடுகிறார்களா என்பது குறித்துத் தெரிந்துகொள்ள, இந்த விளையாட்டின் சில பக்கங்களையாவது தெரிந்து கொண்டிருப்பது நல்லது.

இந்த விளையாட்டு, உலகின் பல நாடுகளை அதிர்வுக்குள்ளாக்கிய போது, அது பற்றி எமக்கென்ன என்று இருந்தோம். ஆனால், எமது அண்டை நாடான இந்தியாவில் இதன் பாதிப்புகள் பற்றிக் கேள்விப்படும்போது, அதுவும் தமிழ்நாட்டில், இது விளையாடப்படுவது குறித்து செய்திகள் வெளியானபோது, அலட்சியமாக இருந்துவிட முடியாது.

“வருமுன் காப்போம்” என்ற முதுமொழிக்கு அமைவாக, இதுபற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்தக் கட்டுரை வரையப்படுகின்றது.

“புளூவேல்” என்ற நீலத் திமிங்கலம், கடல்வாழ் உயிரினமானது, சில சமயம் கரைக்கு வந்து தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும். இதனால்தான், இந்த விளையாட்டுக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

“புளூவேல்” விளையாட்டு பதிவிறக்கம் செய்வதுபோல், முதலில் உருவாக்கப்படவில்லை. இது இரகசியமான சிறுசிறு குழுக்களுக்குள் விளையாடப்பட்டது. சமூக வலைத்தளங்களில், இந்த விளையாட்டை விளையாட விரும்புவோர், தனது விருப்பத்தை இரகசிய ‘ஹேஸ்டேக்’ ஊடாகப் பதிவிட வேண்டும். இதைப் பார்க்கும் இந்த விளையாட்டின் ‘அட்மின்’, விளையாட்டை விளையாடுவதற்கான அழைப்பை அனுப்புவார்.

‘வாட்ஸ் அப்’, ‘இன்ஸ்டாகிராம்’ மற்றும் ‘பேஸ்புக்’கில் இந்த அழைப்பு விடுக்கப்படும். முக்கியமாக அலைபேசி மூலம் இணைய விளையாட்டை விளையாடுபவர்கள்தான் ‘புளூவேல் அட்மின்’ குழுக்கள் குறிவைக்கின்றன.

எனினும், இதன்மூலம் விளையாடுபவரின் தகவல்கள் திருடப்பட்டதற்கான, எவ்விதமான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் விளையாடுபவர், விளையாட்டின் இலக்குகளை செயற்படுத்துவதற்கான ஆழமான தூண்டுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. விளையாடி முடிப்பவர், இறுதியில் தன் உயிரை, தானே மாய்த்துக் கொள்வதை அறியாதவராக, விளையாட்டில் வெற்றிகண்டுவிட்டேன் என்ற உணர்விலேயே இறக்கின்றனர்.

இந்த விளையாட்டில் எல்லோருக்கும் ஒரே இலக்குகள் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் வாழும் இடங்களுக்குத் தகுந்தவாறு, இலக்குகள் கொடுக்கப்படும். விளையாடும் நபர்களின் வயது, பாலினம் சார்ந்து இலக்குகள் வேறுபடலாம்.

இந்த விளையாட்டின் ‘அட்மின்’ நம்பிக்கையைப் பெறுவதற்கு சில இலக்குகளை முதலில் செய்ய வேண்டும். அதற்குச் சான்றாக, விளையாடும் நபர் செய்த இலக்கை, படம் எடுத்து அனுப்ப வேண்டும்.

50 இலக்குகளைக் கொண்ட இந்த விளையாட்டின் முதலாவது இலக்கே விளையாடுபவரின் கையில் “F57” எனக் கீறி, அதைப் படம் எடுத்து அனுப்புதல் வேண்டும். இதன்மூலம் விளையாடுபவர்களை ஆரம்பத்திலேயே அடிமைப்படுத்தத் தூண்டப்படுகிறது.

காலை 4. 30 மணிக்கு எழுவது, ‘அட்மின்’ அனுப்பும் பேய் படங்களை அல்லது கொடூர வன்முறைக் காட்சிகளை பார்க்க வேண்டும். அத்தோடு, அதிகாலை வேளையில் பயங்கரமான ஒலிகளைக் கேட்கவேண்டும். இவ்வாறு 50 இலக்குகளும் மிகவும் கடினமானதாக விளையாடுபவரை ஒரு மன இறுக்கத்துக்குள் இட்டுச் செல்லக்கூடியதாகவும் இருக்கும். அட்மினின் நம்பிக்கையைப் பெற்றால் அடுத்த கட்டத்துக்குச் செல்லலாம்.

ஒருவேளை அட்மினுக்கு விளையாடும் நபர் மீது நம்பிக்கை வரவில்லை என்றால், அதற்குத் தண்டைனையாக, பிளேடால் கையில் கிழிக்க வேண்டும்; பிளேடால் கையில் மூன்று கோடுகள் போட வேண்டும்; ஆனால் ஆழமாகக் கீறல்கள் இருக்கக்கூடாது.

மேலும், அட்மின் இரகசிய இலக்கு ஒன்றை அனுப்பும். அந்த இலக்கை, நீங்கள் விளையாடத் தயாராக இருந்தால் பிளேடால் ‘ஆம் ‘ என்று கையில் எழுத வேண்டும்.
இறுதிக் கட்டமாக தற்கொலை செய்துகொண்டால், இந்த விளையாட்டை வென்று விடலாம் என்ற குறுஞ்செய்தி வரும்.

‘அட்மின்’ எப்படிச் சாக வேண்டும் என்று சொல்வார்களோ, அந்த முறையில் சாக வேண்டும்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிரை குறிவைக்கும் இந்த விளையாட்டை கடந்த 2013ஆம் ஆண்டு ரஷ்யாவில், “புளூவேல் சேலஞ்ச்” என்ற பெயரில், 22 வயது நிரம்பிய உளவியல் படித்த மாணவர் உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளார்.

50 படி நிலைகள் வரை கொண்ட இந்த இணையத்தள விளையாட்டின் நிலை உயிரை மாய்த்துக்கொள்வது.

இந்த விளையாட்டுக்கு அடிமையாகி ரஷ்யா, சீனா நாடுகளில் நூற்றுக் கணக்கான சிறுவர்களும், இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர். மேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட எந்த ஒரு விடயமும் வளர்முக நாடுகளுக்கு வருவது ஒன்றும் உலக அதிசயமோ, வழமையாக நடக்காத ஒன்றோ இல்லையே.

உலகின் ஏதோ ஒரு மூலையில் இந்த விளையாட்டால் பலர் உயிரிழந்து கொண்டிருந்த நிலையில், இந்தியாவில் கேரளா, மும்பை மற்றும் தமிழகத்தில் இடம்பெற்ற அடுத்தடுத்த உயிரிழப்புகள் எம்மவர் மத்தியில் இந்த விளையாட்டின் தீவிர நிலையை அச்சுறுத்தி, அறியவைத்தது.

அதையடுத்து, கூகுள், பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டகிராம், யாகூ நிறுவனங்கள் இந்த விளையாட்டையும், அதன் தொடர்பு வலையமைப்பையும் அகற்ற வேண்டும் என இந்திய மத்திய அரசு உத்தரவிட்டது. ஆயினும், இன்னும் இந்த விளையாட்டுக்கான தொடர்புகள் துண்டிக்கப்படவில்லை எனத் தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உயிரைப் பலிவாங்கும் ‘ப்ளூ வேல்’விளையாட்டை பகர்ந்தாலே கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

‘ப்ளூ வேல்’ விளையாட்டை எந்த விதமாகப் பகர்ந்தாலும் அல்லது அந்த விளையாட்டை விளையாடும் சூழலை ஏற்படுத்தினாலும் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இதேவேளை, ‘புளூவேல்’ விளையாட்டை சைபர் கிரைம் மூலம் கண்காணிக்க முடியாது எனவும், பெற்றோர்கள் கவனமாக இருப்பதன் மூலமாகவே குழந்தைகளைப் பாதுகாக்க முடியும் என, பொலிஸாரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், உலகையே அச்சுறுத்தி வந்த ‘ப்ளூ வேல்’ விளையாட்டின் ‘அட்மின்’ என்று அடையாளப்படுத்தப்பட்ட 17 வயது சிறுமி, ரஷ்யாவில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

இந்த விளையாட்டின் மூலம், தான் கூறும் கட்டளைகளுக்கு அடிபணிய வைத்துக் கொண்டிருந்தவர் அந்தச் சிறுமியுடன், மொஸ்கோ அருகே 21 வயதான ஓர் இளைஞரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள இந்தச் சிறுமி, முன்னர் இதே ‘ப்ளூ வேல்’ விளையாட்டை விளையாடி வந்தார். கடைசிச் சவாலை மட்டும் அவர் தேர்ந்தெடுக்காமல், இந்த விளையாட்டின் அட்மினாக மாறியுள்ளார்.

இதேவேளை, இணையத்தின் வழியாகவும் அன்பைப் பகரலாம் என்ற செய்தியுடன் ‘பிங் வேல்’ என்ற ஒரு விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருவர், அவரையே ஏன் விரும்புகிறார், அதற்கான காரணம் என்ன என்பதை மார்க்கர் பேனாவால் எழுத வைக்கிறது.

இந்த விளையாட்டில் ஈடுபட்டு இருக்கும் மாணவர்கள், தங்களது கருத்தை சாதகமானதாக பகர்ந்து கொண்டுள்ளனர். “ப்ளூ வேல்” விளையாட்டை ஒழிக்கும் வகையில் இந்த “பிங் வேல்” விளையாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

“இந்த உலகை அன்பால் வெல்லலாம். வெறுப்பையும் வெல்லக் கூடியது அன்பு. அதற்கான விளையாட்டுதான் பிங் வேல்” என இந்த விளையாட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளதை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த மரண விளையாட்டிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?

நமக்கு முன் பின் அறிமுகமாகாதவர்கள் சொல்லும் இலக்குகளை நாம் ஏன் செய்ய வேண்டும் என்பதை முதலில் நாம் யோசிக்க வேண்டும். நம்மை கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் அம்மா, அப்பா கூறும் நல்ல செயல்களை நாம் செய்யாமல், யாரோ கூறும் முட்டாள்தனமான செயல்களை செய்தால்தான் நாம் வீரம்மிக்கவர் என்ற எண்ணத்தை முதலில் கைவிட வேண்டும்.

இந்த விளையாட்டில் பலியாகும் சிறுவர்கள், இளைஞர்கள் எல்லோரும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வெற்றி பெறுவது மட்டுமே முக்கியமான இலக்கு என்று நம் குழந்தைகளுக்கு நாம்தான் கற்றுத்தருகிறோம். தோல்வி என்பதை வெறுக்கும் சமூகமாகவே இந்த இளைய தலைமுறையினர் வளர்க்கப்படுகின்றனர்.

இதனால் தோல்வியிலிருந்தும், சமூக பிரச்சினைகளிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் தேர்ந்தெடுக்கும் முறைதான் இந்த விபரீத விளையாட்டுக்கு அடிமைகளாகக் காரணமாகிறது.

உலகில் எல்லாமே எளிமையாகக் கிடைக்க வேண்டும் என்ற பொய்யான புரிதலை நாம் மாற்ற வேண்டும். நமது உரிமைகளை நாம் போராடித்தான் பெற வேண்டும் என்ற உண்மையை நம் குழந்தைகளுக்கு நாம்தான் கற்றுக்கொடுக்க வேண்டும்.

வாழ்க்கையில் 90 சதவீதம் தோல்விதான் இருக்கும். பிரச்சினைகளில் இருந்து எப்படி தப்பிப்பது என்ற யோசனையை குழந்தைகளுக்கு விதைக்காமல். அதைத் துணிச்சலாக சமாளிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

தற்போதைய இளைஞர்களுக்கு வெளியுலக விளையாட்டு என்பது இல்லாமல் போனது. வீட்டில் அமர்ந்து கொண்டு இணையத்தில் பதிவிறக்கம் செய்து விளையாடி வருகின்றனர்.
ஏதாவது பொழுபோக்கு தங்களுக்கு தேவை என்கிற போது, ஆவலைத் தூண்டும் வகையில் இருக்கும் விளையாட்டை தேர்வு செய்கின்றனர். அது அவர்களுக்கு நல்லதா? கெட்டதா? என்பது தெரிவதில்லை.

“ப்ளூ வேல்” அல்லது “பிங் வேல்” எதுவாக இருக்கட்டும், அடுத்தவர்கள் உங்களைத் தூண்டும் இந்த விளையாட்டுக்குச் செல்லக் கூடாது. உங்களை நீங்கள் சந்தோஷமாக வைத்துக் கொள்ள எத்தனையோ பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளன அவற்றை விளையாட வேண்டும்.

இவ்வாறான சம்பவங்கள் பற்றி கேள்விப்படும்போது, அதை நினைத்துப்பார்க்க பயமாக இருக்கும்போது, ஒன்றுமே தெரியாத சிறார்கள் என்ன செய்வார்கள்? இவ்வாறுதான் உருவமற்ற இணைய முகங்களை நம்பி பலர் உயிரை இழந்துவிட்டனர்.

இதுக்குத் தீர்வு உங்கள் கைகளில்தான் உள்ளது. உங்களது வீட்டில் அல்லது, உங்களுக்கு அறிமுகமான சிறார்களை அதிக நேரம் இணையத்தில் மூழ்கியிருப்பதை தெரிந்துகொண்டால். அதைத் தடுக்க அல்லது கண்காணிக்க நடவடிக்கை எடுங்கள்.

தேவையற்ற, அறிமுகமில்லாத நபர்களுடன் அவர்கள் தொடர்பு வைத்திருக்கிறார்களா என்பதையும் கண்காணிப்பது நல்லது. அத்துடன், திடீரென தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு அலைபேசியில் இணையத்தில் மூழ்கிருந்தால் அவதானம் அதிகம் வேண்டும்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பலூனுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்தார் அஞ்சலி..!!
Next post மஞ்சு வாரியர் இடத்தை பிடித்த நயன்தாரா..!!