By 23 December 2017 0 Comments

ரஷ்யா கொடுத்த அதிர்ச்சி..!! (கட்டுரை)

இலங்கை அரசாங்கத்துக்கு, ரஷ்யா பேரிடி ஒன்றைக் கொடுத்திருக்கிறது. டிசெம்பர் 18ஆம் திகதி தொடக்கம் தேயிலை மற்றும் விவசாய விளைபொருட்களை இலங்கையில் இருந்து இறக்குமதி செய்வதற்குத் தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக, கடந்த 14ஆம் திகதி அறிவித்திருந்தது ரஷ்யா.

திடீரென ரஷ்யா விடுத்த இந்த அறிவிப்பு இலங்கை அரசாங்கத்தை ஆட்டம் காண வைத்து விட்டது.

இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைப் பொதி ஒன்றில், ‘கப்ரா’ வகை வண்டு ஒன்று ரஷ்ய அதிகாரிகளின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே, ரஷ்யா இந்தத் தற்காலிகத் தடையை விதித்திருக்கிறது.

தடை விதிக்கப்படும் வரையில் இலங்கை அரசாங்கமோ அல்லது தேயிலை ஏற்றுமதியுடன் தொடர்புடைய எவருமோ இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பதாகத் தகவல் வெளியிடவேயில்லை.

ஆனால், கடந்த ஜூலை மாதமே, இந்த வண்டு கண்டுபிடிக்கப்பட்டு, அது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், எனினும் அரச அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனரும் முன்னாள் ரஷ்யத் தூதுவருமான உதயங்க வீரதுங்க.

இலங்கையில் இருந்து தேயிலை இறக்குமதி செய்வதை ரஷ்யா கடந்த 18ஆம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இது தற்காலிகக் கட்டுப்பாடு தான் என்று கூறியிருந்தாலும், இலங்கையைப் பொறுத்தவரையில் இது பெரும் பிரச்சினைக்குரிய விடயம்.

இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருள்களில் தேயிலை முதன்மையானது. வெளிநாட்டு ஏற்றுமதி வருவாயில் கணிசமான பங்கைத் தேயிலையே வகிக்கிறது.
ஈரானே இலங்கைத் தேயிலையை அதிகளவில் கொள்வனவு செய்யும் முதல் நாடாக விளங்குகிறது.

அதற்கடுத்த நிலையில் ரஷ்யா இருக்கிறது. இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் 12 சதவீதம், ரஷ்யாவுக்கே செல்கிறது.

2011ஆம் ஆண்டு 48 மில்லியன் கிலோ தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்திருந்தது. 2015 ஆம் ஆண்டு, இது 36 மில்லியன் கிலோவாகக் குறைந்தது.

எனினும், இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில், 29.5 மில்லியன் கிலோ தேயிலையை இறக்குமதி செய்திருக்கிறது ரஷ்யா.

இந்தளவுக்கு இலங்கைத் தேயிலையின் பிரதான இறக்குமதி நாடான ரஷ்யா, ஒட்டுமொத்தத் தேயிலை இறக்குமதிக்கும் தடையை விதித்திருக்கிறது. இதுபோன்ற சூழலை இலங்கை மாத்திரமல்ல, எந்தவொரு நாட்டினாலுமே அவ்வளவு இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது.

ஏனென்றால், இதன் தாக்கம், இலங்கையின் பொருளாதாரத்தில் மாத்திரம் எதிரொலிக்கப் போவதில்லை. தேயிலை உற்பத்தி சார்ந்து வாழும் சாதாரண மக்கள் ஒவ்வொருவரிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைப் பொதியில் இருந்த ‘கப்ரா’ வண்டு, தேயிலை போன்ற விளைபொருட்களில் இருப்பதில்லை என்றும் தானியங்களிலேயே இருப்பது என்றும் இலங்கை அரசாங்கம் கூறுகிறது.

தானியங்கள் ஏற்றப்பட்ட கொள்கலன்களில் இருந்து இந்த வண்டு தேயிலைப் பொதிக்குள் நுழைந்திருக்கலாம் என்றும், கண்டுபிடிக்கப்பட்ட வண்டு இலங்கையைச் சேர்ந்தது அல்ல என்று, அமைச்சர்களும் அதிகாரிகளும் நியாயப்படுத்துகின்றனர்.அவர்கள் இங்கு கூறுகின்ற நியாயத்தை ரஷ்யாவில்தான் கூறியிருக்க வேண்டும். தடை ஏற்பட முன்னரே, அதைச் சரிப்படுத்தியிருக்க வேண்டும்.

வண்டு கண்டுபிடிக்கப்பட்டவுடன் இந்தத் தடை விதிக்கப்படவில்லை; குறிப்பிட்ட காலஅவகாசம் வழங்கப்பட்டிருக்கும். அந்தக் காலஅவகாசத்தை அரசாங்கம் பயன்படுத்தியதா என்று தெரியவில்லை.

வெள்ளம் தலைக்கு மேல் போன பின்னர் தான், அரசாங்கம் விழித்துக் கொண்டிருக்கிறது.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், சரிந்து கிடந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் பணிகளை அரசாங்கம் முடுக்கி விட்டிருந்தது. அந்த முயற்சிகள் மெல்ல மெல்லப் பலனளிக்கத் தொடங்கியுள்ள சூழலில் தான், ரஷ்யாவின் தடை நடைமுறைக்கு வந்திருக்கிறது.

ரஷ்யாவின் தடையை நீக்குவது குறித்துப் பேசுவதற்கு அமைச்சர்கள் நவீன் திசநாயக்க, ரிஷாட் பதியுதீன், சுசில் பிரேம ஜெயந்த ஆகியோர் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழு மொஸ்கோவுக்கு அனுப்பப்படவுள்ளது.

அத்துடன், இலங்கைத் தேயிலை இறக்குமதி மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் தாம் அதிகாரபூர்வமாகக் கோரிக்கை விடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூறியிருக்கிறார்.

எவ்வாறாயினும், கிறிஸ்மஸ் புத்தாண்டுக் காலத்தில் ரஷ்யாவில் இரண்டு வாரங்கள் விடுமுறை என்பதால், இலங்கையின் முயற்சிகள் உடனடிப் பலனை அளிக்காது என்று கூறப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் முயற்சிகளை எடுத்தாலும், ஜனவரிக்குப் பின்னரே தடை நீக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடை அறிவிப்பு வெளியான அடுத்த சில நாட்களில் கொழும்பில் ஏற்பட்ட பரபரப்பும் பதற்றமுமே, இதன் தாக்கம் எந்தளவுக்குப் பாரதூரமானதாக இருக்கும் என்பதை அனுமானிக்க உதவுகின்றன.

ரஷ்யாவின் இந்தத் தடை வழக்கத்துக்கு மாறானது; அசாதாரணமானது என்ற கருத்தே பரவலாக உள்ளது.

இலங்கையில் அதிகளவு இறுக்கம் இல்லாவிடினும், பொதுவாக வளர்ந்த நாடுகளில் சுங்க அதிகாரிகள் பூச்சிகள், தொற்றுகள், கிருமிகள் தொடர்பாக இறுக்கமான சோதனைகளை நடத்துவது வழக்கம்.

அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் துறைமுகங்கள், விமான நிலையங்களின் ஊடாக, இலங்கையில் இருந்து கொண்டு செல்லப்படும் சில வகை உணவுப் பொருட்களையும் கருவாடு போன்றவற்றையும் கூட அனுமதிப்பதில்லை.

இதுபோல பல்வேறு நாடுகள் இறுக்கமான சுங்கக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும், ஒரு தேயிலைப் பொதியில் இருந்த ஒரே ஒரு வண்டைக் காரணம் காட்டி, ஒட்டுமொத்த இறக்குமதிக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை விடயத்தில், இலங்கை அதிகாரிகளின் அலட்சியப் போக்கு குறித்து குற்றச்சாட்டுகள் இருந்தாலும், இதற்குப் பின்னால் வேறு சில காரணங்களும் இருப்பதாகச் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

குறிப்பாக, வர்த்தக ரீதியாக அழுத்தங்களைக் கொடுக்கும் முயற்சியாகவும் சந்தேகிக்கப்படுகிறது. அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளின் இறக்குமதியைத் தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் அதற்கான பதில் நடவடிக்கையாக ரஷ்யா இதனை முன்னெடுத்ததா என்ற சந்தேகமும் கிளப்பப்பட்டுள்ளது.

ஏனென்றால், ரஷ்யாவில் இருந்தே இலங்கை பெரும்பாலான அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளை இறக்குமதி செய்து வந்தது. அந்த இழப்பை ரஷ்யா ஈடுசெய்ய, தேயிலைக்குத் தடைவிதித்ததா என்றும் அரசாங்கம் சந்தேகிக்கிறது.

அதேவேளை, கடந்த செப்டெம்பர் மாதம் ‘தி ஹிந்து’ நாளிதழ் வெளியிட்டிருந்த ஒரு செய்தியில், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 4.6 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த ஏழு மாதங்களிலும் இலங்கைக்கான இந்தியாவின் தேயிலை எற்றுமதி 150 சதவீதத்தால் அதிகரித்திருந்தது என்பதை புள்ளி விவரங்களுடன் அந்தச் செய்தி பதிவு செய்திருந்தது.

இந்த ஆண்டின் இந்தியத் தேயிலை ஏற்றுமதியில் சீனா, இலங்கை, எகிப்து ஆகிய நாடுகளே பிரதான பங்கை வகித்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இலங்கைத் தேயிலை உற்பத்தியில் தன்னிறைவு கண்ட நாடு மாத்திரமன்றி, உலகில் பிரதான தேயிலை ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாகவும் இருக்கிறது. அவ்வாறான நிலையில், இந்தியாவில் இருந்து எதற்காகத் தேயிலை இறக்குமதி செய்யப்பட்டது என்ற கேள்வி உள்ளது.

கொழும்பில் பல சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கழிவுத் தேயிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை கலப்படம் செய்யப்பட்டு, இலங்கைத் தேயிலை என்ற அடையாளத்துடன் தரமற்ற தேயிலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கலாம்.

சரியான, முறையான தரக்கட்டுப்பாடுகளை அரசாங்கம் பின்பற்றியிருந்தால், இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்த்திருக்கக் கூடும்.

ஆனாலும், வெள்ளம் தலைக்கு மேல் போய் விட்டது. ரஷ்யாவின் கட்டுப்பாடுகள் நீண்டகாலத்துக்கு நீடிக்காது என்றாலும் தடை, நடைமுறையில் இருக்கும் காலத்தில் ஏற்றுமதிகள் தடைப்படும்.

அது இலங்கையின் இந்த ஆண்டு ஏற்றுமதி வருமானத்தில் தாக்கத்தை செலுத்தும். ஏற்கெனவே வரட்சியால் வரண்டு கொண்டு வந்த இலங்கையின் பொருளாதாரத்துக்கு இது மற்றொரு வரட்சியையே ஏற்படுத்தும்.

தேயிலைத் தொழிலை நம்பியுள்ள இலட்சக் கணக்கான குடும்பங்களுக்கு இது பேரிழப்பை ஏற்படுத்தும்Post a Comment

Protected by WP Anti Spam