By 26 December 2017 0 Comments

புதிதாகவும் புதிராகவும் புதினமாகவும் புரிந்துணர்வு..!! (கட்டுரை)

இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் உதயத்துக்கு, நாட்டிலுள்ள தமிழ் பேசும் மக்கள் உறுதுணையாக விளங்கியவர்கள் என்பதை, எவரும் மறுக்கவோ அல்லது மறுதலிக்கவோ முடியாது. மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சி, 2005ஆம் ஆண்டு ஆரம்பித்தது. 2015இல் ஒரு தசாப்த கால ஆட்சியுடன் அஸ்தமித்தது, அல்லது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

மிகப்பெரிய பெரிய எதிர்பார்ப்புகளின் மத்தியிலேயே, தமிழ் மக்கள் நடப்பு அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தினார்கள். அதேபோல, சர்வதேச நாடுகளும் நல்லாட்சி அரசாங்கம், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வைக்கும் என நம்பினார்கள்.

1948ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலங்களில் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் சகல வளங்களுடனும் சிறப்பான, உயர்வான, நிறைவான வாழ்வு வாழ்ந்தார்கள்.

அதன் பின்னரான காலப்பகுதியில், தமிழ் பேசும் சிறுபான்மை இனம் என்ற ஒரு குறைவான புள்ளியைப் பெற்றமையால் அல்லது அந்த ஒற்றைப்புள்ளி இழப்பால், தங்களது தாய் நாட்டில் அனைத்தையும் இழந்தார்கள்; அனாதைகளாக்கப்பட்டார்கள்; விரட்டியடிக்கப்பட்டார்கள்; பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் உருவகப்படுத்தப்பட்டார்கள்; ஒதுக்கிவைக்கப்பட்டார்கள்.

இருந்தபோதிலும், தற்போது காணப்படுகின்ற அமைதிச் சூழல், ஆழமானதும் அழகானதும் அன்பானதுமான புரிந்துணர்வை இனங்களுக்கிடையில் உருவாக்க தவறி விட்டதோ என்றவாறே உணரத் தோன்றுகின்றது.

கடந்த கால ஆட்சியாளர்களைப் போலவே, பெரும்பான்மையின ஆட்சியாளர்களால் தமிழ் மக்களது உணர்வுகள், உள்ளக்கிடக்கைகள் புரிந்து கொள்ளப்பட இல்லை என்பதையே, நடப்பு நிகழ்வுகள் சுட்டி நிற்கின்றன என, தமிழ் மக்கள் வேதனைப்படுகின்றனர்.

நாட்டில் எங்குமே இல்லாதவாறு, வடக்கு மாகாணத்தில், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மாத்திரம், இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சிவில் பாதுகாப்புப் படையினர், முன்பள்ளிகளை நடாத்துகின்றனர். நாட்டில் ஏனைய 23 மாவட்டங்களிலும் உள்ள பொதுவான விதிமுறைகள், ஏன் இந்த இரு மாவட்டங்களிலும் பின்பற்ற முடியாமல் போனது?

ஒரு சராசரி தேநீர்க் கடையின் பெயரைக் கூட தமிழில் அழைக்க, சூட்சுமமாக தடைகள் இடுகின்றனர்.

கோவிலில் மந்திரம் சொல்வது போல, நல்லிணக்கம், நல்லாட்சி எனப் பல முறை உச்சாடனம் செய்து, தந்திரமாகத் தமிழைக் களையெடுக்கும் முயற்சிகள், நாளாந்தம் நடை பெற்று வருகின்றது.

“நீங்கள், ஒருவருடன் அவர் விளங்கும் மொழியில் உரையாடினால் அது அவரின் தலைக்குச் செல்லும். மறுபுறத்தே, அவரின் சொந்த மொழியில் பேசினால், அவரது இதயத்துக்குச் செல்லும்” என, தென்னாபிரிக்காவின் தேசந் தந்தை நெல்சன் மண்டேலா கூறினார்.

ஆனால், நம் நாட்டில் தமிழ் மக்களுக்கு விளங்காத, புரியாத மொழியைத் திணிக்கும் வகையிலான தொடரும் செயற்பாடுகள், எங்கனம் நாட்டை ஒருமுகப்படுத்தும் என விளங்கவில்லை. ஒரு மொழியால், நாடு மனதளவில் இரண்டாக பிளவுபட்டிருப்பதை ஏன் புரிய மறுக்கின்றனர்.

தமிழ் மக்களது பேரம் பேசும் தரப்பாக, விடுதலைப் புலிகள் பலமாக இருந்த வேளைகளில், அந்தக் காலப்பகுதிகளில் ஆட்சி புரிந்த அரசாங்கங்களுக்கும் புலிகளுக்குமிடையில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல சந்திப்புகளும் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. தற்போது ஆளும் தரப்பிலும் எதிர்த் தரப்பிலும் உள்ள பல முக்கிய பிரமுகர்கள், அவற்றில் பங்கு பற்றியும் உள்ளார்கள்.

அவர்கள், அப்போது தமிழ் மக்களால் ஏற்கக் கூடிய தீர்வுத் திட்டங்களுக்குக் கொள்கையளவில் உடன்பட்டார்கள். ஆனால், தற்போது அவை பற்றி அவர்கள் அலட்டிக் கொள்வதில்லை. ஏனெனில், தற்போது புலிகள் இல்லை; தீர்வும் தேவை இல்லை.
நல்லிணக்கத் தொலைக்காட்சி என்ற பெயரில் வடக்கில், அரசாங்கத்தால் தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்க உள்ளதாகச் செய்தி வெளிவருகிறது.

இன்னும் சில நாட்களில், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. இன்னமும் அலையின் நடுவே துடுப்பின்றி சிக்கிய தோணியின் நிலையிலேயே தமிழர் வாழ்வு உள்ளது. ஆகவே, ஆள்வோர் தொலைநோக்கத்துடன் செயற்பட்டார்களா என சுய விமர்சனம் செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இவ்வாறான தொலைகாட்சி சேவைகள் உட்சுவர் உடைந்து உக்கி விழும் நிலையில், வெளிச் சுவருக்கு வர்ணம் பூசி அழகு பார்க்கும் வேலைத்திட்டமோ என, பாதிக்கப்பட்டவர்கள் உள்ளம் குமுறுகின்றனர்.

தனி மனித கௌரவம், இதன் இன உணர்வு மற்றும் ஒட்டுமொத்த விடுதலை என்பன, சராசரி ஒரு மனிதனுடைய சுய அடையாளங்கள் ஆகும். சுயநிர்ணய உரிமை மற்றும் தாயக உரிமை என்பன, ஒரு சமூகத்தின் உளப்பாங்குடன் தொடர்பு கொண்டவை எனலாம்.

தமிழ்ச் சமூகம் தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட இவற்றை, மென்வழி மூலம் அடையவே பல்வேறு கால கட்டங்களிலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இது உலகறிந்த இரகசியம். ஆனால், அவ்வாறான சராதாரண வழி முறைகள் அனைத்தும் தோல்வியைத் தழுவியதே வரலாறு. அதன் தொடர்ச்சியாக, உச்சக் கட்ட நெருக்கீடு வன்வழியை நாட வேண்டிய நிலைக்கு, தமிழ் இனத்தை உந்தித் தள்ளியது.

கடந்த காலங்களில் தமிழ், சிங்களம் ஆகிய இரு இனங்களைச் சேர்ந்த மக்களது உள்மனங்களில், ஒருமித்த ஒற்றுமையான நிலைப்பாடு இல்லாமல் போனமை துர்ப்பாக்கியமே.

அகத்தில் சந்தேகம் தோன்றியது; அமைதி குலைந்தது; உறவுகள் சிதைந்தன. புறத்தில், அவர்களுக்கு இடையில் ஆயுத மொழி உரையாடியது; அழகான பூமி ஆயுதங்களின் ஆடுகளமாகியது; அனர்த்தங்களையும் அழிவுகளையும் அவலங்களையும் அழுகைகளையும் மட்டுமே ஆக்கியது.

மிக நுணுக்கமாக நோக்கின், மனங்களின் உள்ளே நடைபெற்ற முரண்பாடுகளின் ஒட்டுமொத்தப் பிரதிபலிப்பே, வெளியே நடைபெற்ற பெரும் அழிவுப் போர் ஆகும்.
இயற்கை, இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்க பல வாய்ப்புகளை வழங்கியது.

அவை அனைத்தும், பொருத்தமான இயக்கப்பாடுகள் இன்றி, இடர்பட்டு விழுந்ததே, படிப்பினையாக உள்ளன. ஆட்சியாளர்கள் கடந்த காலங்களில் பெரும்பான்மை இனத்தின் விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் உணர்வுகளுக்கும் மட்டுமே உயிர் கொடுத்தனர்.

வலுவும் அதிகாரமும் ஒருங்கே அவர்களிடம் அமையப்பெற்றதால், சிறுபான்மை இனங்களின் அபிலாஷைகள் சிறிதும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

இலங்கைத் தீவு, சிங்களப் பௌத்தர்களுக்கு மட்டுமே உரித்துடையது என்ற விம்பமே, ஆட்சியாளர்களால் சிங்கள மக்களிடம் விதைக்கப்பட்டுள்ளது. ஏனைய இன, மத மக்கள் வாழ்ந்து விட்டுப் போகட்டும் அல்லது வெளியே போகலாம். ஆனால், அது கூட, சிங்கள மக்களின் பெருந்தன்மை அல்லது விட்டுக்கொடுப்பு என்றே, சிங்களப் பௌத்த பேரினவாதச் சிந்தனையாளர்களினால் விளக்கம் கொடுக்கப்படுகின்றது.

தமிழ் மக்கள், தனித்துவமான தேசிய இனம். அவர்களுக்கு என தொடர்ச்சியான நிலப்பகுதி, தாய்மொழி, பண்பாடு, பாரம்பரியம், கலை, கலாசாரம் என்பவை உள்ளன.

இவை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அவற்றின் அடிப்படையிலேயே எந்தத் தீர்வு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். தீர்வுகள் அமைய வேண்டும். அப்படியாயின் மட்டுமே தீர்வுகள் நீடித்து நிலைத்திருக்க முடியும்.

அதன் அடிப்படையில் அமையாது விடில், இனப்பிரச்சினைக்குரிய தீர்வாக அமையாது, பிரச்சினைக்குரிய தீர்வாக அமைந்து விடும். தமிழ் மக்கள், தங்களது ஒட்டுமொத்தப் பாதுகாப்பும் தங்களது கௌரவமும் மரியாதையும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக, தாமாக மனமார உணர வேண்டும்.

தமிழ் மக்கள், சர்வதேசம் மற்றும் அயல் நாடான இந்தியா ஆகிய தரப்புகளில் கொண்ட நம்பிக்கைகள் தகர்ந்து போய் விட்டன. தமிழ் அரசியல்வாதிகள், வெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விடயத்திலேயே சில்லறைத்தனமான சந்தி சிரிக்கச் சண்டை பிடிக்கின்றனர். இத்தருணத்தில், தமிழ் மக்களுக்குச் சகோதர இனம் என கரம் கொடுக்கக் கூடிய தரப்பாக, சிங்கள மக்கள் மட்டுமே உள்ளனர்.

தமிழ் இனத்துக்கு, சிங்கள இனமே சகோதர இனம் என்ற அத்திபாரத்திலேயே புரிந்துணர்வு கட்டி எழுப்பப்பட வேண்டும். ஏனெனில், நல்லிணக்கமும் புரிந்துணர்வும், வெறுமனே சட்டத்தால் கட்டி எழுப்பப்பட முடியாது. அவற்றைப் பாதுகாக்க, முப்படையினரை ஏவ முடியாது. இவற்றுக்கு ஆயுதம் ஆதரவு வழங்கவும் முடியாது.

மறுபுறத்தே இவை இதயங்களுக்கு இடையில் ஏற்படும் இணக்கமாகும். மனங்களுக்கு இடையில் ஏற்படும் உயர்வான மானசீகத் தொடர்பு ஆகும். உதட்டால் அன்றி உள்ளங்களுக்கு இடையில் ஏற்படும் உன்னத உறவு ஆகும். சிந்திப்பார்களா, செயற்படுவார்களா?Post a Comment

Protected by WP Anti Spam