மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவு வாபஸ்: மாயாவதி அறிவிப்பு

Read Time:4 Minute, 21 Second

மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அதன் தலைவரும் உத்தரப் பிரதேச முதல்வருமான மாயாவதி சனிக்கிழமை அறிவித்தார். வளர்ச்சிப் பணிகளில் உத்தரப் பிரதேசம் புறக்கணிக்கப்படுவதாகவும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாகவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதாகவும் மத்திய அரசு மீது அடுக்கடுக்காகக் குற்றம்சாட்டிய மாயாவதி, அதனாலேயே தங்கள் கட்சியைச் சேர்ந்த 17 எம்.பி.க்களின் ஆதரவை விலக்கிக் கொள்ள நேர்ந்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆதரவை விலக்கிக் கொள்வது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தின் நகலையும் அவர் செய்தியாளர்களுக்கு வழங்கினார். அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதை ஆதரிப்பீர்களா எனக் கேட்டபோது, “அது குறித்து அப்போது முடிவெடுப்போம்’ என்றார் மாயாவதி. பாஜவுடன் சேரப்போவதில்லை என்று தெரிவித்த அவர், காங்கிரஸýம் பாஜகவும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்றார். சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் நெருங்கி வருவதாலேயே அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுகிறீர்களா என்ற கேள்விக்கும் மறுப்புத் தெரிவித்தார் அவர்.

அரசியல் நிர்பந்தம் -காங்கிரஸ்

மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மாயாவதி வாபஸ் பெற்றதை “அரசியல் நிர்பந்தம்’ என காங்கிரஸ் வர்ணித்துள்ளது. பாஜகவின் ஆலோசனையின் பேரிலேயே காங்கிரஸ் கட்சியைக் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை மாயாவதி களமிறக்கியதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷி குற்றம்சாட்டினார்.

மாயாவதியின் முடிவால் தங்களுக்கு அதிர்ச்சியில்லை, மத்திய அரசு இன்னும் பெரும்பான்மையுடன் இருக்கிறது என்றார் அக்கட்சியின் பொதுச் செயலர் திக்விஜய் சிங்.

அரசைப் பாதிக்குமா?

545 இடங்களைக் கொண்ட மக்களவையில் இப்போது 543 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 237. பெரும்பான்மையை எட்டுவதற்கு இன்னும் 35 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

17 உறுப்பினர்களைக் கொண்ட பகுஜன் சமாஜ் கட்சியும், 59 உறுப்பினர்களைக் கொண்ட இடதுசாரி கட்சிகளும் வெளியிலிருந்து ஆதரவு அளித்ததால் மத்திய அரசு இதுவரை நம்பிக்கையுடன் செயல்பட்டு வந்தது. மாயாவதியின் கட்சி வாபஸ் பெறுவதால் மத்திய அரசு உடனடியாகக் கவிழப்போவதில்லை. இடதுசாரிகளும் ஆதரவை வாபஸ் பெற்றால் மட்டுமே அரசுக்கு நெருக்கடி ஏற்படும்.

மாயாவதியின் பரம வைரியான சமாஜ்வாதி கட்சிக்கு மக்களவையில் 39 உறுப்பினர்கள் உள்ளனர். அந்தக் கட்சியின் ஆதரவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கோரிப் பெறுமானால், இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றாலும் மத்திய அரசு கவிழாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வங்கிகளில் ரூ.2720 கோடி மோசடி: “பலே” இந்தியருக்குத் தண்டனை
Next post திண்டிவனம் பாமக நகராட்சித் தலைவர் திமுகவுக்கு தாவல்!