கருணாநிதி – ரஜினி சந்திப்பு: தமிழக அரசியலில் மாற்றம் நிகழுமா?..!! (கட்டுரை)

Read Time:12 Minute, 34 Second

திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க) தலைவர் கருணாநிதியை, சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்தமை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போகிறவர், இன்னோர் அரசியல் கட்சியின் தலைவரைச் சென்று சந்தித்துள்ளமையை, அனைவரும் வித்தியாசமாகவே பார்க்கிறார்கள். ஆனால் இந்தச் சந்திப்பு, எப்போதாவது ஒருமுறை நடைபெறும் வைபவமே என்று கூறுகிறவர்களும் உண்டு.

கலைஞர் கருணாநிதியை ரஜினி சந்தித்து, “ஆசி” பெற்றுக் கொண்டார். ஆனால் ரஜினி புறப்பட்டவுடன் பேட்டியளித்த தி.மு.க செயல்தலைவர் மு.க. ஸ்டாலினோ, “இந்தச் சந்திப்பில் அதிசயம் ஏதுமில்லை. உடல் நலம் விசாரிக்கவே ரஜினி வந்தார்” என்று கூறிவிட்டு, இன்னொரு கேள்விக்குப் பதிலளித்த போது, “இது திராவிட மண். இங்கே திராவிட இயக்கத்தை அழிக்க முயன்றவர்கள் தோற்றதுதான் வரலாறு” என்றார்.

இது, ரஜினியின் “ஆசி பெறும்” அரசியலுக்கு, ஸ்டாலின் கொடுத்த பதிலடியாகவே கருதப்படுகிறது. “உடல் நலம் விசாரிக்க வருகிறேன்” என்று கூறி விட்டு, ரஜினி இப்படி அரசியல் செய்யலாமா என்று, தி.மு.க குற்றஞ்சாட்டுகிறது.

கருணாநிதியை ரஜினி சந்தித்தமையில், வேறு ஓர் உள்நோக்கமும் இருக்கிறது. தி.மு.க வாக்காளர்களில், ரஜினி இரசிகர்களும் இருக்கிறார்கள்.

அந்த வாக்காளர்களை தன் புதிய கட்சியின் பக்கம் திருப்பவே, ரஜினி, கோபாலபுரம் தேடிச் சென்றார் என்பதில் சந்தேகமில்லை. நடிகர் விஜயகாந்த் புதிய கட்சி தொடங்கிய போது “கறுப்பு எம்.ஜி.ஆர்” என்று, அ.தி.மு.க வாக்காளர்களை எப்படிக் கவர்ந்தாரோ, அதே போல், “நான் கலைஞரின் நண்பன்” என்று கூறி, தி.மு.கவில் உள்ள வாக்காளர்களைத் தன் பக்கம் இழுக்கும் முயற்சியே ரஜினியின் இந்தச் சந்திப்பு.

இதை உணர்ந்த காரணத்தால்தான், ரஜினிக்கு சுடச் சுட பதிலடி கொடுத்தார் மு.க. ஸ்டாலின் என்று கூறுவோரும் உண்டு.

“திராவிட இயக்கத்தைச் சீண்டிப் பார்க்க முடியாது என்பதை, ரஜினிக்கு, ஸ்டாலின் உணர்த்தியிருக்கிறார்” என்று, தி.மு.கவைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் கூறுகிறார்கள்.

ஆகவே ரஜினியின் அரசியல் பயணம், தொடக்கத்திலேயே மோதலில் புறப்பட்டு இருக்கிறது. இந்த மோதல், இன்னும் வரும் வாரங்களில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே இருக்கிறன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், ரஜினியின் “ஆன்மிக அரசியல்” என்ற கொள்கையை விமர்சிக்கிறார்கள்.

ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர், புதிய கட்சி ஆரம்பித்தவுடன் அறிவித்த “அண்ணாயிசம்” போன்றே, இந்த “ஆன்மிக அரசியல்” கொள்கை இருக்கிறது என்று கூறுவோரும் உண்டு. “அண்ணாயிசம்” எப்படி யாருக்கும் புரியவில்லையோ, அது போல் “ஆன்மிக அரசியலும்” புரியவில்லை என்றே, அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

ஆன்மிக அரசியல் என்பது, பா.ஜ.க.வின் வழி என்பது, தமிழக அரசியல் கட்சிகள் மனதில் உள்ள கருத்து. தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசாங்கம் போதிய ஆதரவைக் கொடுக்காத காரணத்தால், பா.ஜ.க மீது அதிருப்தியில் தமிழக மக்கள் இருக்கும் போது, ரஜினி ஏன் பா.ஜ.கவின் “ஆன்மிக அரசியலை” தொட்டிருக்கிறார் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

“சாதி சமயமற்ற, மதங்களைக்கடந்த நேர்மையான அரசியல் தான் ஆன்மிக அரசியல்” என்று ரஜினி விளக்கம் அளித்திருந்தாலும், “ஆன்மிக அரசியல்” விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறதே தவிர, அதன் உண்மையான வெளிச்சம், மக்களுக்கு மட்டுமல்ல மாற்றத்தை விரும்புவோருக்கும் புரியவில்லை. இந்தச் சூழ்நிலையில் “மாற்றத்துக்கான” ரஜினியின் பயணம் வெற்றி பெறுமா என்பது, அனைவர் மனதிலும் எழுந்துள்ள கேள்வி.

தமிழகத்தைப் பொறுத்தவரை, திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, இரு தலைவர்கள் உருப்படியாக முயற்சி மேற்கொண்டார்கள். அவர்களில் முதல் தலைவர், மறைந்த மூப்பனார். தமிழ் மாநில காங்கிரஸ் அமைத்து, முதல் தேர்தலிலேயே 20 நாடாளுமன்றத் தொகுதிகளையும், 40 சட்டமன்றத் தொகுதிகளையும் பெற்றார்.

ஏறக்குறைய 10 சதவீத வாக்குகள் வரை வளர்ந்த அவர், அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல், பிரிந்து வந்த காங்கிரஸ் கட்சியிடமே ஐக்கியமானார். பிறகு, நடிகர் விஜயகாந்த், களத்துக்கு வந்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை என்று கருதப்படும் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியிலேயே போட்டியிட்டு, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்று சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். 13 சதவீத வாக்குகள் வரை பெற்ற விஜயகாந்த், அதற்கு மேல் நகர முடியாமல் திணறி நின்று விட்டார்.

இந்த இரு தலைவர்களுக்குமே வாக்களித்தவர்கள், திராவிடக் கட்சிகளிடமிருந்து மாற்றத்தை விரும்பும் வாக்காளர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸில் உள்ள வாக்காளர்களை, மூப்பனார் பிரித்தார். அ.தி.மு.கவில் உள்ள வாக்காளர்களை விஜயகாந்த் பிரித்தார்.

ஆனால் இருவராலும், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றான அரசாங்கத்தை உருவாக்க முடியவில்லை. அதற்கு மிக முக்கிய காரணம், தி.மு.கவில் கலைஞர் கருணாநிதியும், அ.தி.மு.கவில் மறைந்த ஜெயலலிதாவும், அசைக்க முடியாத வலுவான தலைவர்கள் இருந்தார்கள்.

அப்படியொரு வலுவான தலைமை இப்போது, அ.தி.மு.கவுக்கும் தி.மு.கவுக்கும் இல்லை என்ற எண்ணவோட்டத்தில்தான், சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக, “அ.தி.மு.கவுக்குள் பெரும் குழப்பம் நீடிக்கிறது.

அதில் மீன் பிடிக்கலாம்” என்று, ரஜினிக்கு ஆலோசனை கிடைத்திருக்கலாம். அதுவும் கூட “ஆன்மிக அரசியல்” என்று ரஜினி சொன்னமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் ஆர்.கே நகர் இடைத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் அ.தி.மு.கவின் வாக்குகள், அக்கட்சியிலிருந்து விலகி சுயேட்சையாக போட்டியிட்ட தினகரனுக்கு போயின; மீதி வாக்குகள் அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட மதுசூதனனுக்குப் போயின; ஆனால், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கவுக்குப் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே அ.தி.மு.க வாக்குகள் பிரிவுபட்டால், அ.தி.மு.கவுக்குள்தான் நிற்குமே தவிர, ரஜினியின் பக்கம் போவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்பதே, இன்றைய நிலை. ஜெயலலிதாவின் தலைமையில் அ.தி.மு.க இருந்த போது, அ.தி.மு.க வாக்கு வங்கியில் விஜயகாந்த் சிறியதொரு தாக்கத்தை ஏற்படுத்தினார்.

ஆனால், அதை அவரால் அடுத்த தேர்தலில் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதையும் பார்க்க வேண்டியதிருக்கிறது.

இந்நிலையில்தான், கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து, தி.மு.கவில் உள்ள ரஜினி இரசிகர்களுக்கும், ரஜினிகாந்த் குறிவைத்துள்ளார் ஆனால் அதை உணர்ந்து கொண்ட தி.மு.க, ரஜினியிடமிருந்து விலகிச் செல்லவே, கடுமையான தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.

அக்கட்சியின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியில், ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி அரசியல் கட்சி தொடங்கியமையைச் சுட்டிக்காட்டி, ஒரு பக்கக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. அதில் “நட்சத்திர அந்தஸ்து ஒன்றே, நாடாளும் தகுதியை பெற்றுத் தந்து விடாது” என்று, ரஜினியின் மீது மறைமுகத் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது.

தி.மு.கவின் வாக்கு வங்கியை, ரஜினியிடமிருந்து காப்பாற்ற, இந்த அதிரடிக் கட்டுரையை தி.மு.க வெளியிட்டிருக்கிறது. ஆகவே இன்றைய திகதியில், அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு கட்சிகளின் வாக்கு வங்கியைக் கணக்கில் வைத்து, களத்துக்கு ரஜினி வருகிறார். அந்தக் கணக்கு கைகொடுக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

அடுத்து, ரஜினி, மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கு முன்பு அவர் “ஆன்மிக அரசியல்” பற்றி தீர்க்கமான விளக்கத்தை தமிழக மக்களுக்கு அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

அது மட்டுமின்றி, அவருக்குக் கடுமையான சவாலாக இருக்கும் காவிரிப் பிரச்சினையில், கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு தண்ணீரை எப்படிப் பெற்றுத் தரப் போகிறார், தன் கட்சியில் எப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக் கொள்ளப் போகிறார் போன்ற, மிக முக்கியமான கேள்விகளை அவர் விளக்கி விட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டால், ஒரு வேளை “நல்லாட்சி” கிடைக்காமல், கடந்த ஓராண்டாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக மக்கள், ரஜினி பக்கம் திரும்பிப் பார்க்கலாம்.

ஆனால் ஆட்சி அமைக்கும் அளவுக்கு அவருக்கு ஆதரவு கொடுப்பார்களா என்பது, மிகப் பெரிய கேள்விக்குறியே.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொகுசு கார் பதிவில் வரி ஏய்ப்பு: அமலா பால் நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு…!!
Next post பொங்கலில் தடம் பதிக்க வரும் அருண்விஜய்…!!