லண்டன் விமான நிலையத்தில் புஷ்ஷின் விமானம் தரையிறங்கியதால் 40 ஆயிரம் பயணிகள் பாதிப்பு
பிரிட்டனின் தலைநகர் லண்டனிலுள்ள ஹீத்ரூ சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் விமானம் தரையிறங்கியதால் பல விமான சேவைகள் இரத்தாகியதால் நாற்பதாயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இவ்விமான நிலையத்தில் அரசியல் தலைவர்களின் விமானங்கள் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. பாதுகாப்புக் கருதி விமானப் படைத்தளங்களில் தான் அவ்விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படும். ஆனால், இதற்கு மாறாக கடந்த 15 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் விமானம் ஹீத்ரூ விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதனால், பல விமானங்கள் இரத்தாயின. சில விமானங்கள் வருகை, கிளம்பும் நேரம் மாற்றியமைக்கப்பட்டது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள்தான். இந்த நிறுவனத்தின் 32 விமானங்கள் தரையிறங்குவதும் 36 விமானங்கள் கிளம்புவதும் அன்றைய தினம் இரத்துச் செய்யப்பட்டது. மறுநாள் மீண்டும் புஷ் விமானம் கிளம்பும்போது பல விமானங்கள் இரத்தாயின. புஷ்ஷின் விமானம் ஹீத்ரூவில் தரையிறங்குவது தொடர்பாக முன்னதாக அறிக்கை வந்ததால் பல விமான நிறுவனங்களும் தங்கள் விமான சேவையை மாற்றியமைத்தன. அப்படியிருந்தும் பயணிகள் பாதிக்கப்பட்டனர். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவன அதிகாரிகள் கூறுகையில்; எங்கள் விமானங்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டன. அப்படியிருந்தும் சில விமானங்கள் இரத்தானதால் 40 ஆயிரம் பேரின் பயணம் பாதிக்கப்பட்டது. புஷ்ஷால் தங்கள் பயணம் இரத்தானதால் அவர்கள் இன்னும் சில காலம் புஷ்ஷை மறக்கமாட்டார்கள் என்று கூறினர்.””இராணுவத் தளத்தில் புஷ்ஷின் விமானத்தை தரையிறங்கச் செய்திருக்கலாம். அதை விட்டு பயணிகள் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதித்தது சரியல்ல. இனி வருங்காலத்தில் இதுபற்றி உரிய நடைமுறையை அமுல்படுத்த வேண்டும்’ என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் தலைவர் வில்லி வெல்ஷ் தெரிவித்தார்.
Average Rating