பிரதமர் மோடி பயணம் ஐக்கிய அரபு எமிரேட்டுடன் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து!!

Read Time:6 Minute, 44 Second

ஐக்கிய அரபு எமிரேட் சென்றுள்ள பிரதமர் மோடி, 5 முக்கிய ஒப்பந்தங்களை செய்துள்ளார். மேற்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜோர்டான், பாலஸ்தீன பயணத்தை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு நேற்று முன்தினம் மாலை சென்றார். அபுதாபி இளவரசர் முகமது பின் ஜயீத் அல் நஹ்யான், விமான நிலையத்துக்கே வந்து பிரதமர் மோடியை கட்டியணைத்து வரவேற்றார். மோடியை வரவேற்பதற்காக அபுதாபியில் உள்ள பல கட்டிடங்களில் மூவர்ண விளக்குகள் ஒளிர்ந்தன. இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து மோடியும், இளவரசரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

5 ஒப்பந்தம்: இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட் இடையே எரிசக்தி துறை, ரயில்வே, மனிதவளம், மற்றும் நிதித்துறை சேவைகள் ஆகிய துறைகளில் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அபுதாபியின் பெட்ரோலியத் துறையில் 40 ஆண்டு காலத்துக்கு 10 சதவீத முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய ஆயில் நிறுவனங்களின் கூட்டமைப்புக்கும், அபுதாபி தேசிய ஆயில் நிறுவனத்துக்கு இடையே கையெழுத்தானது. இத்திட்டத்தில் 30 சதவீதம் வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். 60 சதவீதத்தை அபுதாபி தேசிய எண்ணை நிறுவனமே வைத்துக் கொள்ளும். அபுதாபி பெட்ரோலியத் துறையில் இந்தியாவின் முதல் முதலீடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஒப்பந்த தொழிலாளர்களை அபுதாபியில் பணியமர்த்துவதில் நடைபெறும் முறைகேடுகளை அகற்றுவது, அவர்களின் கல்வி மற்றும் விழிப்புணர்வு திட்டங்களை இணைந்து மேற்கொள்ளும் ஒப்பந்தமும் கையெழுத்தானது. ரயில்வே கட்டமைப்பு துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு அளிப்பதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. மும்பை பங்கு சந்தையும், அபுதாபி பங்கு சந்தையும் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதன் மூலம் இருநாட்டைச் சேர்ந்தவர்களும் நிதித்துறை சந்தையிலும் முதலீடு செய்ய வழிவகுக்கும். இதற்கு முன் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் அபுதாபி சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எமிரேட்ஸ் பய ணத்தை முடித்து பிரதமர் மோடி நேற்று ஓமன் புறப்பட்டுச் சென்றார்.

இந்து கோயிலுக்கு அடிக்கல்
போசாசன்வாசி  அக்‌ஷர் புருசோத்தம் சுவாமி நாராயண் சன்ஸ்தா (பாப்ஸ்) என்ற சமூக ஆன்மீக இந்து அமைப்பு உலகின் பல பகுதிகளில் 1,100க்கும் மேற்பட்ட இந்து கோயில்களை கட்டி வருகிறது. அமெரிக்காவின் நியூஜெர்சி நகரிலும் தற்போது இந்த அமைப்பு இந்து கோயில் கட்டி வருகிறது. இந்த அமைப்பு அபுதாபி-துபாய் நெடுஞ்சாலையில் இந்திய பாரம்பரிய கட்டிடக் கலையுடன் இந்து கோயில் அமைக்க அபுதாபி இளவரசர் 55 ஆயிரம் சதுர அடி நிலத்தை தானமாக வழங்கினார். இங்கு கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் விழா துபாய் ஒபேரா ஹவுஸில் நேற்று நடந்தது. அங்கிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின் அங்கு கூடியிருந்த இந்தியர்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது: அபுதாபியில் இந்து கோயில் கட்டுவதற்கான பேச்சுவார்த்தையை நடத்த அபுதாபி இளவரசர் முன்வந்தபோது அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். அவரது பெருந்தன்மைக்கு இந்தியாவின் 125 கோடி மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், அபுதாபி ஆட்சியாளர்கள் இந்தியாவை அதிகம் மதிக்கின்றனர், இந்தியா கலாசார வரலாற்றை பெருமையாக நினைக்கின்றனர் என்பது தெரிகிறது என்றார்.

‘தொழில்நுட்பத்தை அழிவுக்கு பயன்படுத்தக் கூடாது’
‘உலக அரசு உச்சி மாநாடு’ துபாயில் நேற்று நடந்தது. இதில் 140 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது: தொழில்நுட்பத்தை துபாய் அரசு நல்ல முறையில் பயன்படுத்தியுள்ளது. அதனால் பாலைவனம் சோலைவனமாக மாறியுள்ளது. இது அதிசயம். உலகத்துக்கே முன்மாதிரியாக துபாய் விளங்குகிறது. எல்லா வளர்ச்சியும் ஏற்பட்டும், ஒரு பக்கம் ஏழ்மையையும், ஊட்டச்சத்து குறைபாடும் நிலவுகிறது. இதை நம்மால் ஒழிக்க முடியவில்லை. மற்றொரு பக்கம் ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிக்க நாம் அதிக பணத்தையும், நேரத்தையும், வளங்களையும் பயன்படுத்துகிறோம். தொழில்நுட்பத்தை நாம் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும், அழிவுக்கு பயன்படுத்தக் கூடாது. ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, கல்வி, வீட்டு வசதி, மனித பேரழிவுகள் போன்ற பல சவால்களை நாம் இன்று எதிர்கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படத்தில் வருவதுபோல் மலிவு விலை நாப்கின் தயாரிப்பு :‘பேட் மேன்’ படம் பார்த்து பெண்கள் குழு நெகிழ்ச்சி!!
Next post (VIDEO)யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 22.!!