ஆன்டிபயாட்டிக்கை அனாவசியமா பயன்படுத்தாதீங்க!

Read Time:11 Minute, 14 Second

அரை குறை அறிவு ஆபத்து’ என்பதற்கு சரியான உதாரணமாக இருக்கிறது, சமீபகாலமாக ஆன்டிபயாட்டிக் மருந்துகளை நாம் கையாண்டு கொண்டிருக்கும் முறை. தலைவலித்தால் தானே மாத்திரைகள் வாங்கிப் போட்டுக் கொள்வது போல, தற்போது ஆன்டிபயாட்டிக் மருந்துகளையும் அடிக்கடி பயன்படுத்திக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. உண்மையில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எப்படி பயன்படுத்த வேண்டும்? எப்போது பயன்படுத்த வேண்டும்? என்று நீரிழிவு மற்றும் பொதுநல மருத்துவர் சிவராஜிடம் கேட்டோம்… ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் முன்னர் அதுகுறித்த நிபுணத்துவம் வாய்ந்த சுகாதார அலுவலரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

ஆனால், இந்த மருந்துகளை சரியான முறையில் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் போதுமான அளவு இல்லை என்றே சொல்ல வேண்டும். இந்த ஆன்டிபயாட்டிக் மருந்துகளை ஏன் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளும் முன் நோய்த் தொற்றுகள் பற்றிப் புரிந்து கொள்வது அவசியம். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, பாராசைட் போன்ற பல நுண்ணுயிரிகள்(Microorganisms) உள்ளன. இந்த நுண்ணுயிரிகளின் தொற்றினால் மனிதர்களுக்கு பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இப்படி ஒவ்வொரு வகையான நுண்ணுயிரிகளால் ஏற்படும் உடல்நல பிரச்னைகளைத் தடுப்பதற்குரிய மருத்துவ வழிமுறைகள் தனித்தனியாக உள்ளன.

நுண்ணுயிரிகளால் உண்டாகும் தொற்றுநோய்களை, அது ஏற்படும் விதத்தின் அடிப்படையில் 2 வகைகளாகப் பிரிக்கலாம். மக்கள் தான் சார்ந்துள்ள பல்வேறு சுற்றுச்சூழலிலிருந்து ஏதாவதொரு தொற்றுநோய்க் கிருமியால் பாதிக்கப்படுவதை Community aquired infection என்கிறோம். இதற்கு உதாரணமாக நிமோனியா, இன்ஃபுளூயன்சா போன்ற தொற்றுகளை சொல்லலாம். மருத்துவமனை சிகிச்சையின்போது அங்கே இருக்கும் சூழ்நிலைகளால் ஏற்படும் தொற்றுநோய் பாதிப்பினை Hospital aquired infection என்கிறோம். மருத்துவமனை சூழலில் சூடோமோனாஸ் போன்ற மேலும் சில நுண்ணுயிரிகளால் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

நோய் எதிர்ப்பு ஆற்றலை பெற்றிருக்கும் விதத்தைப் பொறுத்து மனிதர்களை இரண்டு வகையாகப் பிரிக்கிறோம். உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக பெற்றிருப்பவர்களை Immuno competent வகையினர் என்று சொல்கிறோம். நீரிழிவு நோயாளிகள், புற்று நோயாளிகள், புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கக்கூடிய Immuno supresive therapy எடுத்துக்கொள்பவர்கள் மற்றும் வறுமை போன்ற பிற காரணங்களால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டால் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக பெற்றிருப்பவர்களையும் Immuno compromised வகையினர் என்று அழைக்கிறோம்.

உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருக்கும்போது நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றுநோய் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த பாதிப்புகளைத் தடுப்பதற்கு மருத்துவரின் பரிந்துரைப்படி சரியான தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும். நிமோனியா காய்ச்சலுக்கு நியுமோகாக்கல் தடுப்பூசி (Pneumococcal vaccine), இன்ஃபுளூயன்ஸா காய்ச்சலுக்கு ப்ளூ தடுப்பூசி மற்றும் போலியோவுக்கு போலியோ தடுப்பூசி போடுவதையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த நோய்த்தடுப்பு மருந்துகள் நமது உடலின் நோய்த் தடுப்பாற்றலை வலுப்படுத்துவதோடு, நுண்ணுயிர் தொற்றிலிருந்தும், நோயிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது. எனவே, தடுப்பூசிகளின் அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் அதிகரிக்க வேண்டும்.

ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு பாக்டீரியாக்கள்:
பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்பட்டு அதன் வளர்ச்சியைத் தடுப்பதோடு, அதனால் உண்டாகும் தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்க ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. தற்போது சில பாக்டீரியாக்கள் தன்னை உருமாற்றிக்கொள்வதோடு, ஆன்டிபயாட்டிக் மருந்துக்கு எதிராக தக்கவைத்துக்கொண்டு வளரும் திறனைப் பெற்று வருகிறது. இதையே ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு பாக்டீரியாக்கள் (Antibiotic resistance bacteria) என்று அழைக்கிறோம். உடலில் ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு அதிகரிக்கும்போது சாதாரண ஆன்டிபயாட்டிக் மருந்துகளால் செயல்பட முடியாமல் போகிறது. இதனால் அதிக சக்திவாய்ந்த ஆன்டிபயாட்டிக் மருந்துகளை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, மருத்துவர் ஆலோசனைப்படி ஆன்டிபயாட்டிக் மருந்துகளை சரியான முறையில் தேவைப்படும்போது மட்டுமே எடுத்துக் கொள்வதன் மூலம் ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு பிரச்னையைத் தடுக்கலாம்.

ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பற்றி நாம் புரிந்துகொள்ள வேண்டியவை

* பொதுவாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வாய்வழியாக உட்கொள்ளும்படி கொடுக்கப்படுகிறது. ஆனால், சில வேளைகளில் நரம்பு மற்றும் தசை வழியாக கொடுக்கப்படும். சில மருந்துகளை தோல் மேல் பூசுவதும் உண்டு. வெவ்வேறு வகையான தொற்றுக்கு சிகிச்சையளிக்க வெவ்வேறு வகையான ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உள்ளன.
* பொதுவாக சுவாச மண்டலத் தொற்றுகள், சளி, சாதாரண காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவை வைரஸ் கிருமிகளால் உண்டாகின்றன. இதுபோன்று வைரஸால் ஏற்படும் தொற்று நோய்களுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுப்பதால் எந்தப் பயனும் இல்லை. தேவையில்லாத போது ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உட்கொள்வதால் அவை பாக்டீரியாக்களைக் கொல்லும் திறனை இழக்கின்றன. அந்த மருந்துகளை எதிர்த்து தன்னை தக்க வைத்துக்கொள்ளும் ஆற்றலை பாக்டீரியாக்கள் வளர்த்துக் கொள்வதால், அவற்றைக் கொல்ல முடியாமல் போய்விடுகிறது. இதனால் அந்த பாக்டீரியாக்கள் கடுமையான தொற்றுகளை உருவாக்கி உங்கள் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் அவற்றைப் பரப்ப வாய்ப்புள்ளது. எனவே, இந்த மருந்துகள் பற்றிய சரியான புரிதலை அனைவரிடமும் உண்டாக்க வேண்டியது மிகவும் அவசியம்.

* ஆன்டிபயாட்டிக் மருந்துகளை சரியான புரிதலுடன் கவனத்தோடு பயன்படுத்துவதன் மூலமே பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று நோய்களுக்கு தீர்வு காண முடியும். அதற்கு பின்வரும் ஆலோசனைகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
* எந்த ஒரு ஆன்டிபயாட்டிக் மருந்தையும் பயன்படுத்தும் முன் அது உங்களுக்கு தேவையானதா, நன்மை தருமா என்று உங்கள் மருத்துவரைக் கேட்க வேண்டும்.
* சரியான முறையில், சரியான அளவு, சரியான நேரத்தில மருத்துவர் பரிந்துரைத்தவாறே இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட நாட்கள் முடிவடையும் வரை அம்மருந்துகள் உட்கொள்வதை நிறுத்தக் கூடாது.
* அடுத்த முறை நோய் தாக்கும் போது அதே ஆன்டிபயாட்டிக் மருந்தை பயன்படுத்த வேண்டாம்.

* ஒரு நோய்க்காக இன்னொருவருக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்தை, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் அதே நோய்க்கு நாம்
உட்கொள்ளக் கூடாது.
* பாக்டீரியாவைத் தவிர வைரஸ் போன்ற பிற நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றுகளுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகளை கொடுக்கக் கூடாது.
* தவறுதலாக கொடுக்கப்படும் ஆன்டிபயாட்டிக் மருந்தால் நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வருவது சற்று கடினமாகி விடுகிறது. இந்த மருந்துகளை தேவைப்படும்போது மருத்துவரின் பரிந்துரைப்படி மட்டுமே கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கப்படும் அந்த மருந்துகள் பாக்டீரியாக்களின் தொற்றுக்கு எதிராக மிகவும் பயனுடையவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் சிக்கிய கொள்ளைக் கும்பல்!!
Next post (VIDEO)யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 27.!!