மலச்சிக்கலை தவிர்க்க வழிமுறைகள்!!

Read Time:5 Minute, 35 Second

இன்றைய விஞ்ஞான உலகில், பெரும்பாலானோர் சந்திக்கும் முக்கிய பிரச்னை மலச்சிக்கல். இதனால், அன்றாட வேலையில் முழு கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுவதுடன், உடல் நலனும் கெடுகிறது. மாறிவிட்ட வாழ்க்கை முறை, தவறான உணவு பழக்கம் காரணமாக மலச்சிக்கல் பலரை பாடாய்படுத்துகிறது. சமீபத்தில் நடத்திய ஆய்வில், இந்தியாவில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 14% பேருக்கு நீண்டகால மலச்சிக்கல் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நார்ச்சத்து மிகுந்த உணவை தவிர்ப்பது, அதிக பிராசஸ் செய்யப்பட்ட மைதா போன்ற உணவுப்பொருட்களை உட்கொள்வது, பீட்சா, பர்கர் போன்ற மேற்கத்திய உணவுகளை சாப்பிடுவது, ஆல்கஹால், புகை பழக்கம், சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்ளாமை, உடல்பருமன் போன்ற பல்வேறு காரணங்களால் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படுகிறது. வயது ஏற, ஏற, செரிமான மண்டலத்தின் செயல்திறன் குறையும். முதுமையில் உணவுமுறை மாறுவது, உடற்பயிற்சி குறைவது, தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது ஆகியவை மலச்சிக்கலுக்கு காரணமாகிவிடும்.

மூட்டுவலி, இடுப்புவலி உள்ள முதியவர்கள் அடிக்கடி மலம் கழிப்பதை தவிர்ப்பதால் அவர்களுக்கு மலச்சிக்கல் வருகிறது.பெண்கள், கர்ப்ப காலத்தில், மசக்கை காரணமாக அதிகம் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். இதனாலும், கருவில் வளரும் குழந்தை, தாயின் குடலை அழுத்துவது, ஹார்மோன் மாற்றம், ஆசனவாய் சுருங்குதல் ஆகிய காரணங்களாலும் தற்காலிகமாக மலச்சிக்கல் உண்டாகலாம். மலம் கழிப்பதில் சிரமம் என்பதற்காக, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் மாத்திரைகளை சாப்பிடுவது தீர்வாகாது. இச்செயல், பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகளை பாதிக்கும். இதன்பிறகு, சாதாரணமாக மலம் கழிப்பதும் சிரமமாகிவிடும். ‘எனிமா’ தரவேண்டிய அவசியம் ஏற்பட்டு விடும். அடிக்கடி `எனிமா’ தருவதும் நல்லதல்ல.

* ஆரோக்கியமாக உள்ள ஒருவர், சரியான உணவு முறையை பின்பற்றி, தேவையான அளவு தண்ணீர் குடித்து, தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததுமே மலம் கழித்துவிடுகிற பழக்கத்தை பின்பற்றினாலே போதும்; தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மலம் கழிப்பது வழக்கமாகிவிடும்.
* நாம் சாப்பிடும் உணவு வகைகளில் நார்ச்சத்து நிறைந்த பழுப்பு அல்லது சிவப்பு அரிசி, கோதுமை, கேழ்வரகு, தினை, வரகு, கொள்ளு போன்ற முழு மற்றும் சிறுதானியங்கள் மலச்சிக்கலை தவிர்க்க உதவும்.
* பச்சை நிற காய்கறிகள், வாழைத்தண்டு, பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்புகள், கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, மாம்பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகம். இவற்றை தினசரி உணவில் அதிகமாக சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் தீரும்.
* தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். காலை எழுந்ததும் வெதுவெதுப்பான நீர் அருந்தலாம்.
* காபி, தேநீர், மென்பானங்கள் குடிப்பதை தவிர்த்து, இளநீர், பழச்சாறுகளை அதிகம் அருந்த வேண்டும். இனிப்பு வகைகளையும், கொழுப்பு உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். துரித உணவு (பாஸ்ட் புட்) வகைகளை தவிர்க்க வேண்டும். இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.
* தினமும் நடைபயிற்சி செய்யவேண்டியது மிக அவசியம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை செய்யலாம். மலம் கழிப்பதற்கென போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
* சில மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலமும் மலச்சிக்கல் ஏற்படலாம். உதாரணத்துக்கு இரும்புச்சத்து மாத்திரை எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் ஏற்படும். இந்த சூழலில் மருத்துவரிடம் பேசி, மலச்சிக்கலை தவிர்க்க வழிமுறைகளை கேட்டறிந்து பின்பற்ற வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு – நோர்வே முதலிடம்!
Next post ஊசிமுனை ஓவியங்கள்..!!