பாக். உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: பிஎம்எல் கட்சி தலைவராக ஷெரீப் நீடிக்க முடியாது!!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சியின் தலைவராக நீடிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ெஷரீப் இருந்தார். வெளிநாடுகளில் முறைகேடாக சொத்துகள் வாங்கி குவித்த வழக்கில், இவரை பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு ஜூலையில் தீர்ப்பளித்தது. ஆனால், இவர் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பிஎம்எல்-என்) கட்சியின் தலைவராக தொடர்ந்து நீடித்து வந்தார். இதற்கேற்ப ‘தேர்தல் சட்டம் -2017’ மூலமாக திருத்தம் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து பாகிஸ்தானின் தெஹ்ரீக் ஐ இன்சாப், அவாமி முஸ்லீம் லீக், பாகிஸ்தானின் மக்கள் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த தலைமை நீதிபதி சஹிப் நிசார் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று அதிரடி தீர்ப்பை அளித்தது. அரசியல் அமைப்பு சட்டம் 62, 63ன்படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் அரசியல் கட்சியின் தலைவராக நீடிக்க முடியாது என தீர்ப்பளித்தது. இதன் மூலம், பிஎம்எல்-என் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஷெரீப் விலக வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இது அவருக்கு விழுந்த பலத்த அடியாக கருதப்படுகிறது.
Average Rating