இருமனம் கொண்ட திருமண வாழ்வில்!!
வீட்டை கட்டிப்பார், திருமணத்தைப் பண்ணிப் பார் என்ற பழமொழிக்கு ஏற்ப, எவ்வளவு ஆடம்பரமாகச் செலவு செய்து திருமணம் செய்தாலும், திருமணத்திற்கு வந்த உறவுகளையும், நட்புகளையும் சரியான முறையில் வரவேற்று உபசரிக்கவில்லை என்றால் அவ்வளவுதான்.
எங்களை சரியாக உபசரிக்கவில்லை என்று மிகப் பெரிய குற்றச்சாட்டிற்கு திருமண வீட்டார் ஆளாக நேரிடும். தொடர்ந்து பல மாதங்களாக திருமணத்திற்காக வேலை செய்ததில் ஏற்படும் அலுப்பு மற்றும் திருமண நேரத்தில் கூடுதலாக உருவாகும் வேலைப்பளு காரணமாக வந்திருப்போரை சரியாக கவனிக்க முடியாமல் போகலாம்.
இந்தச் சூழலை உணர்ந்த திருமண நிகழ்வு மேலாண்மை நிறுவனங்கள் சில “ஹோஸ்ட் மேனேஜ்மென்ட்” என்கிற அடைமொழிக்குள் தேவைக்கு ஏற்ப நபர்களை திருமண வீட்டாருக்கு வழங்கி, திருமண நிகழ்வை ஓர் அழகான ஆடம்பர நிகழ்வாக செய்யத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக சென்னையில் எட்டு ஆண்டுகளைக் கடந்து “ஹோஸ்டஸ் மேன்பவர் புரவைட்” நிறுவனத்தை நடத்தி வரும் சங்கீதாவை சந்தித்தபோது…
‘‘மிகப் பெரிய ஸ்டார் ஹோட்டல் களான ஹையாத், லீ மெரீடியன், ஜி.ஆர்.டி.கிராண்ட், ஐடிசி கிராண்ட் சோழா போன்ற இடங்களில் நிகழும் பெரிய வி.ஐ.பி. இல்லத் திருமணங்களுக்கு செல்ல நேர்ந்தாலும் சரி, அதற்கு அடுத்த நிலையில் உள்ள நடுத்தர மேல்தட்டு, நடுத்தர இல்லத் திருமணங்களுக்குச் சென்றாலும் சரி, நாம் உள்ளே நுழையும்போதே ஒரே நிறத்திலான உடைகளில் நம்மை வரவேற்று, நமக்கு பூ, பொட்டு, சந்தனம் கொடுத்து, மலர்களையும் கைகளில் வழங்கி, பன்னீர் சொம்பில் இருக்கும் பன்னீரை வந்திருப்போரின் மேல் தெளித்து இன்முகத்தோடு வரவேற்கும் இளம் பெண்களை சென்னை போன்ற பெருநகரங்களில் பல திருமணங்களில் பார்த்து கடந்திருப்போம்.
ஒரே வண்ணத்தில் அழகான ஆடம்பர உடைகளை அணிந்த பெண்களும், இளைஞர்களும் நம்மை வரவேற்பது மட்டுமின்றி, வந்திருப்போரை வழி நடத்தி இருக்கையினை காட்டி அமர வைப்பது, நீண்ட தூரம் பயணம் செய்து களைத்து வந்திருப்போருக்கு, பருக ஏதாவது வழங்குவது, வந்திருக்கும் குழந்தைகளை வழிநடத்தி பாதுகாப்பது, திருமணத்திற்கு வரும் விஐபி விருந்தினரை நுழைவு வாயிலில் இருந்து மேடைவரை அழைத்துச் செல்வது, உணவுக் கூடத்திற்கு அழைத்துச் சென்று உணவு உண்ண வழிகாட்டுவது, அவர்கள் திருமணம் முடித்துக் கிளம்பும்போது அவர்கள் கையில் அன்பளிப்பைக் கொடுத்து மகிழ்ச்சியோடு அவர்களை வழியனுப்பி வைப்பதுவரை அனைத்தையும் இவர்கள் கையிலெடுத்து அதற்கேற்ப இளைஞர் படையினை வழங்கி திருமணத்தை சிறப்பித்து விடுகிறார்கள்.
ஒரு சில விஐபி திருமணங்களுக்கு வெளிநாடு மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் விஐபி நபர்களை விமானநிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்கே சென்று அழைத்து வருதல். அவர்களுக்கு ஏற்படும் மொழிப் பிரச்சனையினை சரிசெய்வது போன்ற விசயங்களையும் திருமண நிகழ்வு மேலாண்மை நிறுவனங்கள் ஹோஸ்ட் மேனேஜ்மென்ட் மூலமாக சரி செய்து நிகழ்வை சிறப்பிக்கின்றனர்.
விருந்தோம்பல் எனப்படும், இந்த வரவேற்பாளர் பணியானது எந்த கஷ்டமில்லாத, மிகவும் சுலபமாய் பணம் சம்பாதிக்கக் கூடிய எளிமையான வேலை. எனவே கல்லூரியில் படிக்கும் இளம் பெண்களும் இளைஞர்களுமே இந்த வேலைக்கு அதிகமாக வருகிறார்கள். பெற்றோர்களை எதிர்பார்க்காமல் கல்லூரியில் படித்துக்கொண்டே தினமும் சம்பாதிக்க ஒரு எளிமையான வேலை.
கல்லூரி மாணவர்களின் அன்றாட பாக்கெட் மணி, படிப்புச் செலவு மட்டுமின்றி, நண்பர்களோடு நேரத்தை செலவழிக்க, சினிமாவிற்குச் செல்ல, பெற்றோரின் வருமானம் குறைவாய் இருந்தால், அவர்களை எதிர்பார்க்காமல், படிப்பு மற்றும் இதரச் செலவுகளை தாங்களாகவே கவனித்துக்கொள்ள, இந்த வேலை பேருதவியாக கல்லூரி மாணவர்களுக்கு உள்ளது.
மேலும் படிப்பை பாதிக்காத வகையில் பகுதிநேர வேலையாக இருப்பதால் காலையில் கல்லூரிக்குச் செல்பவர்கள், மாலையில் நிகழும் வரவேற்பு நிகழ்ச்சிகளிலும், மாலை நேர வகுப்பாக இருந்தால் காலையில் நிகழும் திருமண நிகழ்வுகளில் வரவேற்பாளர்களாகவும், விருந்தோம்புதலில் உபசரிப்பவர்களாகவும் பங்கேற்கின்றனர். சில மாணவ மாணவிகள் அவர்களின் தேவையைப் பொருத்து காலை மாலை என இரண்டு நேரமும் பங்கெடுப்பர்.
டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் வசதியான வீட்டுப் பெண்களும், நேரத்தை செலவழிக்க, புதிய அனுபவங்களுக்காக, பாக்கெட் மணிக்காகவென இந்த வேலையைத் தேர்ந்தெடுத்து வருகிறார்கள். இதில் எல்லா வசதிகளும் அவர்களுக்கு பாதுகாப்பாகக் கிடைப்பதால் பெற்றோர்களின் அனுமதியோடு வந்து இந்த பகுதிநேர வேலையில் ஈடுபடுகிறார்கள். இந்த வேலை அவர்களுக்கு பாதுகாப்பைத் தருவதுடன், எந்தப் பிரச்சனையும் அவர்களுக்கு பணியிடத்தில் வருவதில்லை.
ஒரு நாளைக்கு 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை பணியாற்ற, இவர்களுக்கு ஒரு நாளைய ஊதியமாக 1000 முதல் 1500 வரை கிடைக்கிறது. எல்லா இடங்களிலும் இருக்கும் எழுதப்படாத விதி இங்குமுண்டு. மிகவும் அழகான தோற்றத்துடன் இருந்தால் 5000 முதல் 7000 ம் வரை இவர்களுக்கு ஊதியமாகக் கொடுக்கப்படுகிறது. சில மிகப் பெரிய விஐபி இல்லத் திருமணங்களில் ஹை லுக்கோடு, மணமேடையில் நிற்க, விஐபி விருந்தினரை மேடை வரை அழைத்துவந்து விட, என நபர்களை கேட்பார்கள். அப்போது மாடலிங் துறைகளில் இருப்பவர்களையும் இதற்கு அழைப்போம்.
அவர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக 10000 வரை கூட வழங்கப்படும். பணக்காரர் வீட்டு ஆடம்பரத் திருமணங்களில் வரவேற்பாளர்களின் பணி அதிகமாக இருக்கும். அதற்கான தொகை அதிகம் கேட்போம். வெட்டிங் ஈவென்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள், ஹோஸ்ட் மேனேஜ்மென்ட் மற்றும் மேன்பவர் சப்ளை செய்யும் எங்களைப் போன்ற சிறு நிறுவனங்களிடம் இந்தப் பணியினை கொடுத்துவிடுவார்கள். நாங்கள் அவர்களுக்கு தேவையான மேன்பவரை அவர்களின் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வோம். முகூர்த்த நேரங்களில் ஒரு மாதத்திற்கு 4 முதல் 5 வரைகூட திருமணங்கள் எங்களுக்குக் கிடைக்கும்.
வீட்டில் உள்ளவர்களின் அனுமதியோடு 18 வயது பூர்த்தியானவர்களை மட்டுமே இந்த வேலைக்கு பயன்படுத்துகிறோம். பெரும்பாலும் கல்லூரி மாணவர்களே இதில் இருப்பார்கள். வெல்கமிங், சர்வீஸிங் என இரண்டாக இதைப் பிரித்து வைத்திருக்கிறோம். வெல்கமிங்கில் விருந்தினரை வரவேற்பது.
வரவேற்பில் பன்னீர் தெளிப்பது, வரவேற்புத் தட்டுக்களை கையில் வைத்துக்கொண்டு பொட்டு, சந்தனம், பூ, சாக்லெட் கொடுப்பது. குழந்தைகளை கவனிப்பது, திருமண நிகழ்வு இடத்தை ஒழுங்குபடுத்துவது, திருமண அரங்கில் இரண்டு ஓரங்களிலும் நின்று தேவைகளை கவனிப்பது. மேடைகளில் நிற்பது, விருந்தினரை அழைத்து வந்து அமர வைப்பது போன்ற பணிகள் இதில் இருக்கும்.
சர்வீஸிங் என்றால் குளிர்பானங்களை வழங்குவது, பஃபே டைப் உணவகத்தின் ஸ்டாலில் நிற்பது, விருந்தினரை அணுகி அவர்களின் தேவை அறிந்து செயல்பட அறிவுறுத்துவது என ஈடுபடுத்தப்படுவார்கள். இளைஞர்களும் திருமணங்களில் வரவேற்பாளர்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். திருமண நிகழ்வில் இளைஞர்களிடத்தில் உதவி செய்யும் மனப்பான்மை மிகவும் அதிகமாகவே இருக்கும்.
விருந்தினர் விடைபெற்றுச் செல்லும்போது அவர்களுக்கு அன்பளிப்பை வழங்கி இன்முகத்தோடு வழியனுப்புவது, விருந்தினர்களை வழி நடத்தி, வழி காட்டுவது. விஐபி விருந்தினர் என்றால் வரவேற்று உள் அழைத்துச் செல்வது, விமான நிலையம், ரயில் நிலையம், தங்கும் ஹோட்டல்களில் இருந்து அழைத்து வருவது, மீண்டும் அழைத்துச் சென்று விடுவது போன்ற பணிகளை இளைஞர்கள் விரைவில் முடிப்பர்.
தீம் கான்செப்ட் திருமணம் என்றால் வரவேற்புப் பணியில் ஈடுபடுபவர்களுக்கும் அதே தீம் கான்செப்ட்டோடு உடை இருக்கும். பெரும்பாலும் இஸ்லாமியர் திருமணங்கள், வடநாட்டவர் திருமணங்கள், ஒரு சில தமிழ் திருமணங்களில் ஹோஸ்ட் மேனேஜ்மென்ட் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சில நிகழ்வு மேலாண்மை நிறுவனங்கள் பணம் தராமல் ஏமாற்றுவதும் இதில் அதிகம் நடைபெற வாய்ப்புள்ளது.
மேன்பவரை வழங்கும் சிறு நிறுவனங்களும் இதில் ஏமாற்றுவார்கள். எனவே இத்துறையில் நம்பிக்கையானவர்களா என இளைஞர்கள் அறிந்து, இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். நாம் செய்யும் சேவைக்கு சரியான முறையில் ஊதியத்தை பெற்றுத் தருகிறார்களா என அறிந்து அவர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருத்தல் வேண்டும்” என்கிறார்.
Average Rating