நிரந்தர நண்பர்களும் பகைவர்களும் இல்லை; ‘கலங்கி’ நிற்கிறது தமிழக அரசியற்களம்!!

Read Time:14 Minute, 40 Second

அரசியல் களத்தில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை என்ற கூற்று, தமிழக அரசியலில் நிரூபணம் ஆகிவிடுமோ என்ற புதிய திருப்பம், இப்போது ஏற்பட்டிருக்கிறது.

இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டமை; ஸ்டாலின் 65ஆவது பிறந்ததின விழாக் கொண்டாட்டம்; அ.தி.மு.க அரசாங்கத்தின் அம்மா ஸ்கூட்டி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் ஆரம்பித்து வைத்தமை போன்ற சம்பவங்களே, இந்த அரசியல் களத்தில் அதிரடித் திருப்பங்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும், ஏறக்குறைய நெருக்கமாகவே இருந்து வந்தன. ஆனால் டி.டி.வி. தினகரனின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, தமிழக காங்கிரஸைப் பொறுத்தமட்டில், “பா.ஜ.கவின் நிஜ எதிரி டி.டி.வி தினகரன்தான்” என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது.

“தி.மு.க கூட்டணியில் தொடர்கிறோம்” என்று தமிழக காங்கிரஸ் சார்பில் கூறப்பட்டு வந்தாலும், அதற்கான உறுதியான உறவுகள் முன்பு இருந்தது போல் இப்போது இல்லை என்றே, அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். ஆர்.கே நகர் தேர்தலுக்குப் பிறகு தினகரன்- காங்கிரஸ்- கம்யூனிஸ்டுகள் என்ற ஒரு கூட்டணியை ஏன் உருவாக்கக் கூடாது என்ற சிந்தனை, தமிழக காங்கிரஸின் பல தலைவர்கள் மட்டத்தில் உள்ளது. ஏன், சர்ச்சையில் சிக்கியுள்ள ப. சிதம்பரமே, “அடுத்து தி.மு.கதான் ஜெயிக்கும்” என்பதை, தனது மனம் திறந்த பேட்டிகளில் கூட குறிப்பிடுவதைத் தவிர்த்தே வருகிறார் என்றே தி.மு.க கருதுகிறது.

2011இல் கிடைத்த சட்டமன்றத் தொகுதிகளோ, 2009இல் கிடைத்த நாடாளுமன்றத் தொகுதிகள் எண்ணிக்கையோ தி.மு.க கூட்டணியில் கிடைக்க வழியில்லை என்ற கருத்து, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் தெளிவாக இருக்கிறது.

இதுபோன்ற சூழ்நிலையில்தான், ஐ.என்.எஸ் ஊடக நிறுவன ஊழல் வழக்கில், இந்திராணி முகர்ஜி, நீதிபதி முன்பு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கார்த்தி சிதம்பரம் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

இந்திராணி முகர்ஜி, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, கொலை வழக்கு விசாரணையை எதிர்கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி சிதம்பரம், இலண்டனிலிருந்து திரும்பி வந்த நேரத்தில், சென்னை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம், “பஞ்சாப் வங்கி ஊழலை” மறைக்க மத்திய அரசாங்கம் திட்டமிடுகிறது என்று காங்கிரஸ் கட்சி சார்பிலும், “சட்டம் தன் கடமையைச் செய்கிறது” என்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும், கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில்தான், அ.தி.மு.க ஆட்சியில் தி.மு.க மீதும், தி.மு.க ஆட்சியில் அ.தி.மு.க மீதும், ஊழல் வழக்குகள் பொதுவாகத் தாக்கல் செய்யப்படும்; கைதுகள் அரங்கேறும். கருணாநிதியும் கைதுசெய்யப்பட்டார்; ஜெயலலிதாவும் கைதுசெய்யப்பட்டார்.

இரு தரப்புகளும் ஒருவருக்கொருவர் காரசாரமான பேட்டிகளைக் கொடுத்துக் கொள்வார்கள். ஆனால், தமிழ்நாட்டின் இந்தக் கலாசாரம், இப்போது மத்தியில் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி சார்பில் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. முதன் முதலாக காங்கிரஸ் கட்சியின் மூத்த அமைச்சர்களில் ஒருவராக இருந்த ப சிதம்பரத்தின் மகனை ஊழல் வழக்கில் கைதுசெய்து, அக்கட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று எதிர்ப்புத் தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர், சென்னையில் போராட்டத்தையே நடத்திவிட்டார்கள். ஆனால் இந்த கைது குறித்து, தி.மு.கவின் முக்கிய தலைவர்கள் யாரும் கருத்துத் தெரிவிக்கவில்லை; கண்டனமும் தெரிவிக்கவில்லை.

2-ஜி அலைக்கற்றை வழக்கை தி.மு.கவிற்கு எதிராக திருப்பி விட்டதற்கு சிதம்பரம் காரணம் என்று தி.மு.க தலைவர்கள் எண்ணுவதும், தமிழக காங்கிரஸ் தலைமை ப.சிதம்பரத்தின் அறிவுரைப்படி செயற்படுவதும், தி.மு.கவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது என்கிறார்கள்.

அதை வெளிப்படுத்தும் வகையில் கார்த்தி சிதம்பரம் கைது தொடர்பில் அமைதி காத்தாலும், அவரது ஐந்து நாள் சி.பி.ஐ தடுப்புக் காவல் முடிந்த பிறகு, முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், அப்போதும் தி.மு.க அமைதி காக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

கார்த்தி சிதம்பரத்தின் கைது, அகில இந்திய அளவில் காங்கிரஸுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையிலான மோதலை விஸ்வரூபம் ஆக்கியிருக்கும் வேளையில், தமிழக அரசியலில் காங்கிரஸுக்கும் தி.மு.கவக்கும் ஓர் இடைவேளையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை.

இதன் முதல் தாக்கம், ஸ்டாலினின் பிறந்த நாளில் தெரிந்திருக்கிறது. வழக்கமாக காலையில் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லும் ராகுல் காந்தி, இந்த முறை மாலை நேரத்தில் வாழ்த்துக் கூறியிருக்கிறார். சோனியா காந்தி சார்பில், ஸ்டாலினுக்கு வாழ்த்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆகவே கார்த்தியின் கைது, முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மீது அடுத்ததாக நடவடிக்கை எடுக்கப்படலாம் போன்றவை, தி.மு.க, காங்கிரஸ் உறவில் புதிய முள்ளாகத் தைத்து உள்ளன என்பதே தற்போதைய நிலை.

அதேநேரத்தில், “ஊழல் அ.தி.மு.க” என்று தெரிவித்து விலகிச் சென்ற பா.ஜ.க, அ.தி.மு.கவுடன் நெருங்கிப் போகிறது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை “சட்டமன்றத்தில் வைத்தது தவறில்லை” என்று, மாநில பா.ஜ.க வாதிட்டது. “தொழில் தொடங்க வேண்டும் என்றால், என்னை வந்து சந்தியுங்கள். எனக்கும் முதலமைச்சருக்கும் நல்லுறவு இருக்கிறது” என்று வெளிப்படையாகவே, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஊழல் குற்றவாளி என்று உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்காக, தமிழக அரசாங்கம் கொண்டாடிய பிறந்தநாள் விழாவில் பங்கேற்று “அம்மா ஸ்கூட்டி திட்டத்தை”, பிரதமரே தொடங்கி வைத்து, ஜெயலலிதாவைப் பற்றிப் புகழ்ந்தும் பேசி விட்டுச் சென்றிருக்கிறார்.

மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க அமைச்சர்கள், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை அடிக்கடி சந்திப்பதும், மற்ற மத்திய அமைச்சர்களைச் சந்தித்து, “தமிழகத்துக்கு நிதி தாருங்கள்” என்று கேட்பதும், திடீரென்று அடிக்கடி நடைபெறுகின்றன.

குழந்தைகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் “அம்மா பரிசு திட்டத்தையே”, ஆளுநரிடம் கொடுத்து வழங்க வைக்கும் அளவுக்கு, அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் நெருங்கிச் சென்றிருக்கின்றன. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கவிருக்கின்ற நிலையில், அ.தி.மு.கவுடன் பா.ஜ.க நெருக்கம் காட்டுவது, கூர்ந்து கவனிக்கத்தக்கது.

பிரதமர் மோடி, ஏற்கனவே கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்த பிறகு, “பா.ஜ.க – தி.மு.க கூட்டணி” என்ற பேச்சு எழுந்தது. அதேபோல், இப்போது மீண்டும் “அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி” என்ற கேள்வி, எங்கும் கேட்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணி இல்லாமல் போட்டியிட பா.ஜ.க தயாராக இல்லை.

“அம்மா ஸ்கூட்டி திட்டத்தையும்” தொடக்கி வைத்திருப்பதன் மூலம், எடப்பாடி பழனிச்சாமி – ஓ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.கவை அரவணைத்துக் கொள்ள, பிரதமர் விரும்புகிறார். ஏற்கனவே பா.ஜ.க கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சியையும் தன் பக்கம் வைத்துக் கொள்ள முடியும் என்ற எண்ணவோட்டத்துக்கு, அகில இந்திய பா.ஜ.க வந்திருப்பதாகத் தெரிகிறது.

பா.ஜ.கவுடன் தி.மு.க கூட்டணி வைக்கவில்லை என்றாலும், அந்தக் கட்சிக்கும் காங்கிரஸுக்கும் கூட்டணி தொடரக்கூடாது என்பதில், பா.ஜ.க தெளிவாக வியூகம் வகுத்துச் செயற்படுகிறது. அதனால்தான், தமிழகத்துக்கு வந்த பிரதமர், “காங்கிரஸ் காலத்தில் தமிழகத்துக்கு நிதி ஆணைக்குழு நிதி ஒதுக்கியதை விட, மிக அதிகமாக பா.ஜ.க காலத்தில் அமைந்த நிதி ஆணைக்குழு நிதி ஒதுக்கியிருக்கிறது” என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். “நீங்கள் எங்களுடன் வரவில்லை என்றால் பரவாயில்லை.

ஆனால் காங்கிரஸ், தமிழகத்துக்கு நல்லது செய்யவில்லை” என்பதை தி.மு.கவுக்கு நினைவூட்டும் விதமாகவே அவரது பேட்டி அமைந்தது. ஆகவே இன்றைய திகதியில் “அ.தி.மு.க- பா.ஜ.க” நெருக்கம், மீண்டும் மிக நெருக்கமாக ஏற்பட்டிருக்கிறது. “பா.ஜ.கவின் அடிமை என்று, நமக்கு எதிராக பிரசாரம் செய்து விட்டார்கள். சிறுபான்மையினரின் வாக்கு எப்படியும் நமக்கு வரப்போவதில்லை.

ஆகவே பா.ஜ.கவுடன் கூட்டணியே வைத்து, நம் எதிரியான தினகரனைத் தோற்கடிப்போம். நாம்தான் உண்மையான அ.தி.மு.க என்பதை நிலைநாட்டுவோம்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எண்ணுகிறாரெனவும், அரசியல் வட்டாரங்களில் கருத்து வெளிப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கார்த்தியின் கைது, தி.மு.க – காங்கிரஸ் உறவில் உரசலையும், பிரதமரின் சென்னை விஜயம், அ.தி.மு.க – பா.ஜ.க உறவில் நெருக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதுபோன்ற சூழலில், 65ஆவது பிறந்த நாளில் விடுத்த செய்தியில், “பட்டி தொட்டியெங்கும் திராவிட இயக்கத்தின் கருத்துகளைப் பரப்புங்கள்” என்று, தன் கட்சித் தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

காங்கிரஸ், பா.ஜ.க, புதிய சக்திகளான கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல சவால்மிகுந்த சக்திகளைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகலாம் என்று நினைக்கும் ஸ்டாலின், கட்சி அடிமட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு, திராவிடக் கருத்துகளைப் பரப்புதல், ஊராட்சி தோறும் படிப்பகங்கள் போன்று, தி.மு.க வாக்கு வங்கியைப் பலப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில். தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.

தமிழகத்திலோ, டெல்லியிலோ என்ன நடந்தாலும், தமிழக அரசியல் களம் மட்டும் இப்படி அனல்பறக்கும் அரசியல் மாற்றங்களுடனேயே பயணித்துக் கொண்டிருப்பது, வினோதமானதோர் அரசியல்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்கள் மோசம்… பெண்கள்தான் அதிலும் பெஸ்ட் !
Next post இருமனம் கொண்ட திருமண வாழ்வில்!!