சந்தன கடத்தல் வீரப்பன் கதையை படமாக எடுக்கிறார்.
சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை பெரிசு பட ஹீரோ மது, படமாக எடுக்கிறார். ‘வதம்’ என்ற பெயரில் இப்படம் தயாராகிறது. வீரப்பனை பிடிக்க போலீசார் கடைசி நேரத்தில் போட்ட திட்டமும் அவன் சுடப்பட்ட சம்பவமும் இப்படத்தில் சொல்லப்படுகிறது. இது போல் கன்னட டைரக்டர் ரமேசும் வீரப்பன் கதையை படமாக்குகிறார். இவர் சயனைட் என்ற படத்தை டைரக்டு செய்தவர். ராஜீவ் கொலை சம்பவம் பற்றியது இந்தப் படம். சிவராசனும், கூட்டாளிகளும் கொல்லப்பட்ட சம்பவத்தை மட்டும் சயனைட் என்ற பெயரில் படமாக்கியுள்ளார்.
தற்போது வீரப்பன் வாழ்க்கையை சினிமாவாக்கி வருகிறார். வீரப்பன் கொல்லப்பட்டதை வைத்து உருவாகும் இந்த இரண்டு படங்களுக்கும் முத்துலெட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வீரப்பன் கதை சினிமாவாவதன் மூலம் என் எதிர்காலமும் என் மகள்களின் எதிர்காலமும் அவர்களது படிப்பும் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார் முத்துலெட்சுமி.
இதுகுறித்து ரமேஷிடம் கூறுகையில், எந்த மாதிரியான படத்தையும் எடுக்க எனக்கு உரிமை உண்டு. எனது படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்தே இருக்கும். படத்தை பார்க்கும் போது முத்துலெட்சுமியும் ஈர்க்கப்படுவார் என்றார்.
கடந்த இரண்டு வருடமாக வீரப்பன் நடமாடிய காட்டுப்பகுதிக்கு சென்று அவனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் போலீசாரை சந்தித்து தகவல்கள் திரட்டி இந்தக் கதையை படமாக்கி வருகிறார் ரமேஷ். வீரப்பனை கொன்ற அதிரடிப்படைத் தலைவர் விஜயகுமாரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.
ராஜ்குமார் கடத்தப்பட்ட சம்பவமும் இந்த படத்தில் சொல்லப்படுகிறது. ராஜ்குமார் வேடத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவை அணுகியுள்ளாராம்.