தமிழர்களின் தாயகங்களை கூறுபோடுவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்கிறார் கருணாஅம்மான்

Read Time:4 Minute, 34 Second

தமிழர்களின் தாயகங்களை கூறுபோடுவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை எனத்தெரிவித்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா அம்மான், வடக்கும் கிழக்கும் நிர்வாக ரீதியாக மாத்திரமே பிரிந்திருப்பதாகவும், அதனைக் கொண்டு அங்கு வாழும் மக்களும் பிரிந்துவிட்டார்கள் எனக்கருத முடியாது எனத் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள தனியார் தமிழ் வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.கிழக்கில் கொலைகளும், குடியேற்றத்திட்டங்களும் அதிகரித்துவருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால் தங்களது பிரதிநிதிகளை தமிழ் மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளார். வடக்கினதும், கிழக்கினதும் அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து போட்டியிட்டு பாராளுமன்றத்தில் ஒரு பலமான கூட்டணியை அமைப்பதற்கான சாத்தியங்கள் எதிர்காலத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்குக் கிழக்கில் செயற்படுகின்ற சகல அரசியல் கட்சிகளுடனும் இணைந்து அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே தமது நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் இயங்குகின்ற அரசியல் கட்சிகளின் ஜனநாயகபூர்வமான செயற்பாடுகளுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தடையாக இருக்கிறார்கள் எனும் கூற்றை மறுத்த கருணா, ஜனநாயக அரசியலை கிழக்கில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தமது அவா எனவும், அதற்கு வேண்டிய ஒத்துழைப்புக்களை தமது கட்சி வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவிருந்தாலும், ஏனைய மாற்று அரசியல் சக்திகளாகவிருந்தாலும் அவர்களின் ஜனநாயகபூர்வமான செயற்பாடுகளுக்கு தாம் ஒருபோதும் தடையாக இருக்கப் போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஸ்தாபகர்களை உள்ளடக்கிய ஒரு செயற்குழு மூலம் தமது கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தக் குழுவின் மூலம் தமது கட்சியின் வேலைத்திட்டங்கள் தமிழ் மக்கள் வாழுகின்ற பகுதிகள் அனைத்திற்கும் விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

டக்ளஸ் தேவானந்தா கருணாவைச் சந்திக்கவுள்ளார்

இதற்கிடையில், ஈ.பி.டி.பியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விரைவில் கருணா அம்மானைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்மைக்காலமாக த.ம.வி.புலிகள் அமைப்பிற்கும், கிழக்கில் இயங்குகின்ற ஈ.பி.டி.பியினருக்குமிடையில் மோதல்கள் இடம்பெற்றமை தொடர்பாகவே கருணாவைச் சந்தித்து தாம் பேசவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமது கட்சியின் உறுப்பினர்களைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு தமக்குள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கிழக்கில் வைத்து கருணாவை விரைவில் சந்திக்கவுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டென்மார்க் குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழரான கே.எஸ்.துரை கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கும் “இளம்புயல்”!
Next post யுரேனியம் கசிவு: அணு உலையை மூட பிரான்சு அரசு உத்தரவு