ஐ.நா. சபையில் ஜிம்பாப்வே மீது தடை விதிக்கும் தீர்மானம் தோல்வி
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் அதிபராக ராபர்ட் முகாபே உள்ளார். சமீபத்தில் அங்கு நடைபெற்ற அதிபர் தேர்தலில் முகாபே மட்டும் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை. இந்த தேர்தலில் ராபர்ட் முகாபே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சர்வதேச நாடுகள் இந்த பொம்மை தேர்தலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் அதிபர் தேர்தலில் நடந்த முறைகேடுகளை கண்டித்து ஜிம்பாப்வே நாடு மீது ஆயுத தடை விதிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையில் அமெரிக்கா கொண்டு வந்தது. மேலும் ராபர்ட் முகாபே மற்றும் வேறு 13 அதிகாரிகளின் சொத்துக்களை முடக்கவும், அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கவும் அதில் வகை செய்யப்பட்டு இருந்தது. இந்த தீர்மானம் மீது நடந்த வாக்கெடுப்பில் மொத்தம் உள்ள 15 நாடுகளில், 9 நாடுகள் பங்கேற்றன. ஒரு நாடு ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. வீட்டோ அதிகாரம் பெற்ற ரஷியா, சீனா உள்பட 5 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. இதனால் அமெரிக்காவின் தீர்மானம் தோல்வியை தழுவியது.
Average Rating