மிஸ் யுனிவர்ஸ் ஆக வெனிசூலாவின் டயானா மென்டோஸா தேர்வு
வெனிசூலா அழகி டயானா மென்டோஸா, 2008ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வியட்நாமின், நா டிராங் என்ற நகரில்உள்ள கிரவுன் கன்வென்ஷன் மையத்தில் கோலாகலமான 2008ம் ஆண்டுக்கான மிஸ்யுனிவர்ஸ் இறுதிப் போட்டி நடந்தது. இதில் 22 வயதான மிஸ் வெனிசூலா, டயானா மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். மிஸ் கொலம்பியா டலியானா வர்காஸ், முதலாவது ரன்னர் அப் ஆகவும், மிஸ் டொமினிக்கன் மற்றும் மிஸ் ரஷ்யா, மிஸ் மெக்ஸிகோ ஆகியோர் 2, 3 மற்றும் நான்காவது இடங்களைப் பெற்றனர். இறுதிப் போட்டியில், நடுவர் லூயிஸ் லகோரி கேட்ட ஒரு கேள்விக்கு டயானா அளித்த பதில்தான் அவருக்கு பட்டத்தை தேடித் தந்தது.டயானா அந்த கேள்விக்குப் பதிலளிக்கையில், உண்மையில் கடவுள் ஆணையும், பெண்ணையும், வித்தியாசமாக படைத்துள்ளான். ஆண் என்றால் வேகமாக சிந்திப்பவன், எதையும் வேகமாக செய்பவன், பெண்கள் அப்படி இல்லை என்ற கருத்தெல்லாம் பொய். வேகமாக போவது முக்கியமல்ல, போகிற வேகத்தில் பிரச்சினைகளை யார் சந்தித்து தீர்வு காண்கிறார்களோ, சமாளிக்கிறார்களோ அவர்கள்தான் புத்திசாலிகள், பெரியவர்கள் என்றார் டயானா. ஆரம்பத்திலிருந்தே டயானாதான் பட்டம் வெல்வார் என பலரும் கணித்து வந்தனர். அதேபோலே அவரும் பட்டம் வென்றுள்ளார். இன்டீரியர் டிசைனராக இருக்கிறார் டயானா. மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தைப் பெறும் 57வது அழகி டயானா என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இப்பட்டத்தைப் பெற்ற ஜப்பானின் ரியோ மோரி, டயானாவுக்கு கிரீடத்தை அணிவித்தார். முன்னதாக மிஸ் கான்ஜெனிலிட்டி பட்டத்தை எல் சால்வடாரின் ரெபெக்கா மொரினோவும், சிறந்த தேசிய உடைக்கான விருதினை தாய்லாந்து அழகி கவிந்த்ரா போடிஜாக்கும் பெற்றனர்.
Average Rating