ஈரானை தாக்க தயாராகுங்கள்: இஸ்ரேலுக்கு புஷ் அறிவுரை
ஈரானைத் தாக்கத் தயாராகும்படி இஸ்ரேலிடம் அமெரிக்க அதிபர் புஷ் கேட்டுக் கொண்டுள்ளார். ஈரான் அணுஆயுத திட்டங்கள் தொடர்பாக அந்நாட்டுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவை தோல்வியடைந்தால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை ஏவுகணைகள் மூலம் தாக்க தயாராகும் படி இஸ்ரேலிடம் புஷ் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா பின்புலமாக இருந்து செயல்படும் என்றும் புஷ் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. கடந்த வாரம் ஈரான் ராணுவம், அதிநவீன ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்தது. இஸ்ரேலை குறி வைத்தே இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருநாடுகளுக்கிடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. “எங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஈரானைத் தாக்கத் தயங்க மாட்டோம்’ என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எகுத் பாரக் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளார். இராக், குவைத் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க படைகள் முகாமிட்டிருப்பதால், ஈரானுடன் போர் மூண்டால் அதை எளிதாக சமாளிக்கலாம் என்று பென்டகன் வட்டாரங்கள் கூறியதாக சண்டே டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் எச்சரிக்கை: “எங்கள் மீது தாக்குதல் நடத்த கைகளைத் தூக்கும் முன்பே எதிரிகளின் கைகளை வெட்டியெறிந்து விடுவோம்’ என்று ஈரான் அதிபர் மெக்மூத் அகமதிநிஜாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். “அண்மையில் நடத்திய ஏவுகணை சோதனைகள் ஈரான் ராணுவத்தில் மிகச் சிறிய பங்கு மட்டுமே. வருங்காலத்தில் பாதுகாப்பு படைகளின் பலம் பலமடங்கு அதிகரிக்கப்படும்’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating