மன்னார் விடத்தல்தீவு நகரை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்
மன்னார் விடத்தல்தீவு நகரப்பகுதியை இராணுவத்தின் 58 படைப்பிரிவு தமது முழுமையான கட்டுப்பட்டின்கீழ் கொண்டுவந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இராணுவத்தின் 58 ஆவது படையணி, கமாண்டோ படையணிஎன்பவற்றிலுள்ள படைவீரர்கள் இணைந்து மேற்கொண்ட இராணுவ முன்னெடுப்பின்போதே இப்பகுதி மீட்கப்பட்டுள்ளது. இப்பகுதி மன்னாரிலிருந்து வடக்காக 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. புலிகள் தாக்குதலுக்காகப் பயன்படுத்தி வந்த மிகவும் முக்கிய இடமாக இப்பிரதேசம் காணப்பட்டது. கடற்புலிகளின் பிரதான விநியோகத்தளமாகவும் இது விளங்கியது என்றும் பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. ன்னார், விடத்தல்தீவு பகுதிக்கு வடக்குப் பிரதேசத்திலுள்ள புலிகளின் தளம் மீது விமானப் படையின் எம். ஐ. 24 ரக ஹெலிகொப்டர் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வடமேல் கரையோரப் பகுதியில் மன்னாரிலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் விடத்தல்தீவு அமைந்திருப்பதாகவும், இங்கு விடுதலைப் புலிகளின் முக்கிய கடற்புலி முகாம் அமைந்திருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 1990ஆம் ஆண்டு இந்திய அமைதிகாக்கும் படையினர் நாட்டைவிட்டு வெளியேறிய பின்னர் முதற்தடவையாக விடத்தல்தீவு விடுதலைப் புலிகளிடமிருந்து பாதுகாப்புத் தரப்பினரால் விடுவிக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடற்புலிகளுக்கு மிகவும் முக்கியமான தளமாக விளங்கிய விடத்தல் தீவு முகாமின் வீழ்ச்சி அவர்களுக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக விடத்தல்தீவு பகுதியில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வந்ததாகவும், இந்த மோதல்களில் 30ற்கும் அதிகமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருந்ததாகவும் பாதுகாப்புத் தரப்பில் கூறப்படுகிறது.எனினும், கடற்புலிகளின் விடத்தல் தீவு முகாம் கைப்பற்றப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான அறிவிப்புக்களும் விடுக்கப்படவில்லை.
Average Rating